கைபேசியின் கூவல்.
தரையில் முடங்கிக் கிடந்த தன் மகள் பவானியுடன் பேசிக்கொண்டிருந்த பழனியம்மா, கைபேசியைக் காதோடு சேர்த்து, “சொல்லு செல்வி” என்றாள்.
“அம்மா, அக்கா என்ன பண்ணுறா?”
“கோயில் கோபுரத்தை வெறிச்சிப் பார்த்துட்டுப் படுத்துக் கிடக்குறா. காலையில் பல் தேய்ச்சதும் அரைத் தம்ளர் காப்பி குடிச்சா. இப்போ மணி நாலு ஆகப்போவுது. எதுவும் சாப்பிடுல. இப்படியே பட்டினி கிடந்தா இன்னும் ரெண்டொரு மாசத்தில் போய்ச்சேர்ந்துடுவா.....
.....பட்டினி கெடந்து சாகப்போறியான்னு கேட்டா, ‘இருந்த ஒரு மகளும் இல்லேன்னு ஆயிடிச்சி. ‘நீ திரும்பி வரலேன்னா, நான் உயிரோட இருக்க மாட்டேன்’னு தகவல் அனுப்பியும் அவகிட்ட இருந்து எந்தப் பதிலும் இல்ல. செத்துத்தொலைன்னு சொல்லாம சொல்லிட்டா. தூக்கு மாட்டிகிட்டோ விஷம் குடிச்சோ சாகுறதுக்குத் தைரியம் இல்ல. பட்டினி கிடந்தா, கொஞ்ச நாளில் அதிக நோவு தெரியாம செத்துடுவேன்னு சொல்லுறா” என்றாள் பழனியம்மா, ஈன்றெடுத்த தாய்க்கே உரிய ஆற்றாமையுடன். அழுதழுது வறண்டுபோன விழியோரங்களில் சூடான நீர்த்துளிகள்.
“காமினியின் பிரிவு அவளை ரொம்பவே பாதிச்சிருக்கு. இதைப் பத்தி என்னோட வேலை பார்க்குறவங்ககிட்டே சொன்னேன். சாமியார் யோகியைப் போய்ப் பாருங்கன்னு சொன்னாங்க. யோகி போன வாரம் கோயம்புத்தூர் வந்தாராம். பேரூர்ப் பட்டீஸ்வரர் கோயில்கிட்டே ஒரு சத்திரத்தில் தங்கியிருக்காராம். எவ்வளவு பெரிய பிரச்சினைக்கும் தீர்வு சொல்லக்கூடியவர்னு சொல்றாங்க. உன் மருமகனும் நானும் புறப்பட்டு வர்றோம். மத்ததை நேரில் பேசலாம்.” -தொடர்பைத் துண்டித்தாள் பழனியம்மாவின் இளைய மகள் செல்வி.
காமினி, பவானியின் ஒரே மகள். குழந்தைப் பருவத்திலிருந்தே தாய்ப்பாலுடன் பக்திப்பாலும் ஊட்டி வளர்க்கப்பட்டவள். அவளுக்கென்றே ஒரு பெரிய பீரோ நிறையப் பக்திப் புத்தகங்களை நிறைத்து வைத்தாள் பவானி. மகளுடன், ஆன்மிகச் சுற்றுலா செல்வதையும் பக்திச் சொற்பொழிவுகள் கேட்பதையும் ஆசிரமம் நடத்தும் சாமியார்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதையும் வழக்கப்படுத்திக்கொண்டிருந்தாள்.
அண்டை மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளம் வயதுச் சாமியாரின் ஆசிரமத்திற்குச் சென்று, சில நாட்களேனும் மகளுடன் அங்கு தங்கியிருந்து அவருக்குப் பணிவிடைகள் செய்வதைப் பெரும் பேறாகக் கருதினாள். தனக்கு உடல்நலம் குன்றிய சமயங்களில், தோழிகளுடன் அங்கு சென்றுவரவும் மகளுக்கு அனுமதி அளித்திருந்தாள்.
அது நடந்து இரண்டு ஆண்டுகள் போல் ஆகிவிட்டன. தோழிகளுடன் ஆசிரமத்துக்குச் சென்ற காமினி நாட்கள் சில கழிந்தும் திரும்பி வரவில்லை. ‘நான் சந்நியாசினி ஆயிட்டேன். ஆசிரமத்திலேயே தங்கியிருந்து ஆன்மிகச் சேவை புரிய இருக்கிறேன். இனி பெற்ற தாய் உட்பட எனக்குச் சொந்தபந்தம் ஒட்டுறவு என்று எவருமில்லை’ என்ற வாசகம் அடங்கிய கடிதத்தைத் தோழிகளிடம் கொடுத்தனுப்பிப் பவானியைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாள்.
பல முறை முயன்றும் மகளுடன் பவானியால் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவளைச் சந்தித்துப் பேசும் விருப்பமும் நிறைவேறவில்லை. அவள் வயது பதினெட்டைக் கடந்தவள் என்பதால் காவல்துறையிடம் அளித்த புகார், நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆட்கொணர்வு மனு ஆகியவையும் பயனற்றுப் போயின.
கடந்த ஆண்டில், ‘உயிருக்குயிராய் உன்னை நேசிக்கும் தாயின் கோரிக்கை இது. ஒரே ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுப் போ. தவறினால் பட்டினிகிடந்து உயிரை மாய்த்துக்கொள்வேன்’ என்று ஆசிரமம் சென்ற பெண்ணிடம் கடிதம் கொடுத்தனுப்பினாள் பவானி. மகளிடமிருந்து பதில் இல்லை. நடைப்பிணம் ஆனாள்.
போகாத கோயில் இல்லை; வழிபடாத தெய்வம் இல்லை.
எது செய்தும் மகளின் மனம் மாறவில்லை. அண்டை அயல் ஊர்களில் இருந்த அத்தனை ஜோதிடர்களிடமும் ஜாதகம் பார்த்தாள்; அருள்வாக்குக் கேட்டாள். காலக்கெடு மாறுபட்டதே தவிர, அத்தனை பேரும் காமினி திரும்பி வருவாள் என்றுதான் சொன்னார்கள். எவர் சொன்னதும் பலிக்கவில்லை.
வீட்டின் மாடி அறை, பவானி முழு நேரமும் வாசம் செய்யும் இடமாக மாறியது. அங்கிருந்து பார்த்தால் ஊருக்கு நடுவேயிருந்த அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோயிலின் கோபுரம் தெரியும். படுக்கையில் நீட்டிப் படுத்தவாறு கோபுரத்தை மிகுந்த பயபக்தியுடன் வணங்குவாள்; கன்னத்தில் போட்டுக்கொண்டே, “அம்மையப்பா, தப்புப் பண்ணினவள் நான். எனக்கு என்ன தண்டனை வேணுன்னாலும் கொடு. என் மகளை என்கிட்டேயிருந்து நிரந்தரமாப் பிரிச்சுடாதே” என்று மனம் உருகி முணுமுணுப்பது தொடர் நிகழ்வாக ஆகிப்போனது.
“அவள் மனசில் பக்தியை ஊட்டுறதுக்குப் பதிலா திணிச்சி வளர்த்துட்டேன். ரொம்பவும் சுதந்திரம் கொடுத்துக் கெடுத்துட்டேன்” என்பது போல் தனக்குத்தானே பேசிக்கொள்வதும் நடந்தது.
உறங்கும் நேரமும் உண்ணும் உணவின் அளவும் மிக மிகக் குறைந்துகொண்டே போனதால் உடம்பு மிகவும் மெலிந்தது. அம்மாவும் உடன் பிறந்த சகோதரி செல்வியும் அவ்வப்போது சொன்ன ஆறுதல் மொழிகள் பயனற்றுப் போயின. இந்த நிலையில்தான் பவானியைச் சாமியார் யோகியிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தாள் செல்வி.
"அவர் சொன்னாப் பலிக்கும்; இவர் சொன்னா நடக்கும்னு நிறையச் சாமியார்களைப் பார்த்துட்டோம். எல்லாருமே மகள் திரும்பி வருவான்னுதான் சொன்னாங்க. யார் சொன்னதும் நடக்கல. இன்னமும் எதுக்கு இந்தச் சாமியார் தரிசனம்?” என்றாள் பவானி.
“யோகியைச் சாமியார்னு சொல்லுறாங்களே தவிர உண்மையில் அவர் சாமியாரே அல்ல. தாடிமீசை வளர்த்த தவயோகி. பலன் கிடைக்குதோ இல்லையோ அவரையும் ஒரு தடவை பார்த்து வைப்போம்” என்று தங்கை சொல்ல, உடன்பட்டாள்.
அன்று, அதிகாலையில் காரில் புறப்பட்டார்கள். வாகனத்தைச் செல்வியின் கணவன் சிவக்குமார் ஓட்டினான்.
போகும் வழியில் அவினாசியைக் கடந்தபோது, அவர்களுக்கு அவினாசிலிங்கர் கோயிலின் கோபுர தரிசனம் வாய்த்தது. பேரூர் போய்ச் சேர்ந்ததும், பட்டீசுவரரை வழிபட்டுவிட்டு யோகியைச் சந்தித்தார்கள்.
கழுத்தில் உருத்தராட்சம் இல்லை; காவி உடை இல்லை. சாமியார்களுக்கே உரிய மத அடையாளங்களும் இல்லை. அடர்ந்த மீசையும், தாடியுமாகத் தூய வெண்ணிற ஆடையில் மிக எளிமையாகக் காட்சியளித்தார் அவர்.
தங்களுக்கான முறை வந்ததும், சிவக்குமார், பவானி, செல்வி, பழனியம்மா ஆகிய நால்வரும் அவர் முன் இருந்த இருக்கைகளில் அமர்ந்தார்கள்
“என்னை யோகின்னு சொல்வாங்க. நான் யோகியல்ல; என் பேரு யோகீஸ்வரன். ஓரளவு படிப்பறிவும் கேள்வி ஞானமும் எனக்கு இருக்கு. பிரச்சினைகளுக்குச் சுயமாகச் சிந்தித்துத் தீர்வு காண்பதில் ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில், என் சொந்தபந்தங்களின் பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு சொன்னேன். பயனடைஞ்சவங்க அதை மத்தவங்களுக்குச் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாப் பிரபலம் ஆயிட்டேன். எனக்குன்னு ஆசிரமம் எதுவும் இல்லை; சீடர்களும் இல்லை. ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் ஒரு விபத்துக்குப் பலிகொடுத்த பிறகு ஒரு நாடோடியா வாழ்ந்துட்டிருக்கேன். போற இடத்தில் சத்திரம் சாவடின்னு தங்குறேன். பிரச்சினைகளைச் சுமந்துட்டு வர்றவங்களுக்கு என்னால் முடிஞ்ச ஆலோசனையைச் சொல்லுறேன்” என்று தன்னைப் பற்றிச் சொன்னவர், பவானி உட்பட நால்வரையும் உற்றுப் பார்த்துவிட்டு, “உங்களில் பாதிக்கப்பட்டவர் தயங்காம பிரச்சினையைச் சொல்லலாம்” என்றார்; மற்ற மூவரின் பார்வை பவானி மீது படிவதைப் பார்த்து, “சொல்லுங்கம்மா” என்றார்.
“எனக்கு ஒரே மகள். பேரு காமினி. எனக்குச் சின்ன வயசிலிருந்தே கடவுள் பக்தி அதிகம். காலமாகிவிட்ட என் கணவர் நாத்திகர். அலுவலக வேலையாக அடிக்கடி வெளியூர் செல்லும் அவர் வீட்டில் தங்கியிருக்கும்போது தன் எண்ணங்களை மகளோடு பகிர்வார். அதெல்லாம் அவள் மனசில் பதிஞ்சிடக் கூடாதுன்னு அடிக்கடி அவளைக் கோயில் குளம்னு அழைச்சிட்டுப் போவேன். என்னைவிடவும் அவள் தீவிரக் கடவுள் பக்தையாக வளர்ந்தாள்.....” என்று தொடங்கி நடந்து முடிந்த தன் சோகக் கதையை நீண்டதொரு பெருமூச்சுடன் சொல்லி முடித்தாள் பவானி.
யோகி பேச ஆரம்பித்தார். “மகள் மேல ரொம்பவே பாசம் வெச்சிருக்கீங்க. உங்க மகளும் அதே அளவு பாசத்துடன் இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கிறது தப்பு.....
.....பத்து மாசம் வயித்துக்குள்ள இருந்தவரைக்கும்தான் அவள் உங்களுக்கே ஆனவள். அவளோட உடம்பும் அறிவும் வளர வளர அவள் மீதான உங்க உரிமை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டே வருது. அவள் சுயசிந்தனையுடன் வாழ ஆரம்பிக்கும்போது அந்த உரிமையை முழுசா இழந்துடுறீங்க. இந்த இழப்பை உங்களால் சகித்துக்கொள்ள முடியாதுதான். வேறு வழியில்லை. காரணம், பிரிவு என்பது இயற்கையானது. யாழிலிருந்து இசையும், கடலிலிருந்து முத்தும், சந்தன மரத்திலிருந்து மணமும் பிரியற மாதிரி உங்ககிட்டேயிருந்து உங்க மகள் பிரிஞ்சிருக்கா.
குடும்பமா வாழ்றதைப் போலவே துறந்து வாழ்றதும் ஒரு வாழ்க்கைமுறைதான். அதை அவ தேர்வு செஞ்சிருக்கா. அதுக்கான சுதந்திரம் அவளுக்கு இருக்கு. அவளுக்கு மட்டுமில்ல, அனைத்து உயிர்களுக்குமான சுதந்திரம் அது.
இப்படியொரு சுதந்திரம் தேவையான்னு உங்களுக்குக் கேட்கத் தோணும். இதுக்கு விடை கண்டுபிடிக்கணும்னா, ’உலகங்களும் உயிர்களும் தோன்றியது ஏன்? மாறுவது ஏன்? தோன்றியவை அனைத்தும் அழிவது ஏன்? அனைத்தும் தாமாகத் தோன்றியவையா, இருந்துகொண்டே இருப்பவையா, படைக்கப்பட்டவையா?’ என்றிவை போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்திருக்க வேண்டும். இந்நாள்வரை இவற்றிற்கெல்லாம் விடை கண்டறியப்படவில்லை.
எது எப்படியோ, உங்களுக்கு வாய்த்த வாழ்க்கை நீங்கள் யாரிடமும் கேட்டுப் பெற்றது அல்ல; அது தற்செயலாய் அமைந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் விரும்பினாலும் இனியொரு முறை அது வாய்ப்பது நிச்சயமில்லை. ஆகையால், பட்டினி கிடந்து சாகாமல் எஞ்சியுள்ள ஆயுளை வாழ்ந்து முடிப்பதே புத்திசாலித்தனம். இந்தக் காலக்கட்டத்தில், திரும்பி வரவே மாட்டாள்னு நீங்க நினைக்கிற உங்க மகள், உங்களைத் தேடி வருவது நடக்கலாம். இழந்த சந்தோசங்களை மீண்டும் பெறலாம்.
அவள் வரப்போவதே இல்லை என்றாலும், கடைசி மூச்சுவரை மகளுக்காக வாழ்ந்த பெருமிதத்துடன் நீங்க மரணத்தைத் தழுவலாம்.
நல்லதே நடக்கட்டும்."
-பேசி முடித்து, கருணை நிறைந்ததொரு பார்வையை நால்வர் மீதும் படரவிட்டார் யோகி. ‘சென்று வாருங்கள்’ என்பது போல் இரு கரம் குவித்து வணக்கம் சொன்னார்.