ஞாயிறு, 11 ஜூன், 2023

அம்மன் கோயில்களும் அடிக்கடி மோதல்களும்!... இதோ நிரந்தரத் தீர்வு!!

 

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது.

விழாக்களின்போது, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலை நீடித்துவந்த சூழலில், கடந்த மாதம் 7ஆம் தேதி நடபெற்ற திருவிழாவின்போது, பட்டியலின இளைஞர்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்திருக்கிறார்கள்.

அவர்களை மற்றொரு சமூகத்தினர் தடுத்திருக்கிறார்கள்.

பட்டியலினத்தவர் சாலை மறியலில் ஈடுபட, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதம் போல் கழிந்த நிலையிலும் பிரச்சினை தீரவில்லை.

விழுப்புரம் கோட்டாட்சித் தலைவர் தலைமையில் 5 முறை சமரசக் கூட்டம் நடத்தியும் சுமுகத்தீர்வு ஏற்படவில்லை[தினகரன்,08.06.2023].

மாவட்ட ஆட்சியர் தலைமையில், நாடாளுமன்ற&சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்துப் பேசியும் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை[கோயில் பூட்டப்பட்டு, துப்பாக்கிக் காவலர்களின் பாதுகாப்பில் உள்ளது].

எத்தனை முயற்சி செய்தும், இனிச் செய்தாலும் மனித முயற்சி வெற்றி பெற வாய்ப்பில்லை என்பது நன்கு அறியப்பட்ட நிலையில்.....

மக்கள் நலம் நாடும் நல்லுள்ளம் கொண்டவர்கள், பிரச்சினைக்குக் காரணமான இரு தரப்புப் பக்தர்களின் மனங்களைப் பக்குவப்படுத்திச் சமரசம் செய்துவைக்குமாறு கோயிலில் குடிகொண்டிருக்கும் திரவுபதி அம்மனை  முழு மனதுடன் வழிபட்டு வேண்டிக்கொள்ளலாம்.

காலக்கெடு வைத்துக் காத்திருந்து, இரு தரப்பாரும் மனம் மாறவில்லை, என்றால்திரவுபதி அம்மனுக்கான அந்தக் கோயிலைக் கல்விக் கடவுளான கலைமகள் உறைகிற கல்விக்கூடமாக மாற்றுவதே ஊர் மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் செயலாகும்.

இம்முடிவு குறித்து, அரசு சிந்தித்து விரைவில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

அரசு எடுக்கும் இந்த நடவடிக்கை, கோயில்களைக் கலவரக் கூடங்களாக்கும் அனைத்து ஊர் மக்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்பது உறுதி.