சனி, 10 ஜூன், 2023

வில்லங்க விதியும் வீணாய்ப்போன கடவுளும்!!!

“விதிக்கப்பட்டது விதி” என்கிறார்கள்.

ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் உள்ளடக்கமான அத்தனைக் கோள்களும் உயிர்களும் பிறவும் இப்படித்தான் இயங்க வேண்டும், அவற்றின் இயக்கங்களால் இன்னின்ன மாறுதல்கள் நிகழ வேண்டும் என்றெல்லாம் கட்டளையிடப்பட்டது, அல்லது நிர்ணயிக்கப்பட்டது, அல்லது கட்டுப்படுத்தப்பட்டதற்குப் பெயர்தான் விதியா?

விதித்தவர் யார்?

கடவுள்!

பிரபஞ்சம் விரிவது; சுருங்குவது; கோள்கள் சுழல்வது; உயிர்கள் தோன்றி வாழ்ந்து அழிவது என ‘வெளி’யில் இடம் பெறும் அத்தனை நிகழ்வுகளுக்கும் அவர் விதித்த இந்த விதியே காரணம் என்கிறார்கள்.

மேலும், சுழலும் கோள்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது, உடைந்து சிதறுவது, எரிமலைகள் வெடிப்பது, நிலம் நடுங்குவது, கடல் பொங்குவது என எல்லாமே விதிப்படிதான் என்றாகிறது.

எல்லாம் விதிப்படி எனினும், ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்துக்கும் ஒரே விதியா? 

அல்லது,

மரமட்டைகளுக்குத் தனி, மனிதர்களுக்குத் தனி,  வெட்ட வெளியில் அலையும் ஆவிகளுக்குத் தனி, பேய்களுக்குத் தனி என்றிப்படி ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விதியா?

ஒவ்வொன்றுக்குள்ளேயும் உட்பிரிவு விதிகள் உண்டுதானே?

பஞ்ச பூதங்களில் நிலம், நீர், காற்று, நெருப்பு, வெளி என ஒவ்வொன்றுக்கும் தனித் தனி விதி இருக்கும்தானே?

காற்று என்று கொண்டால், தென்றல், வாடை, சூறாவளி என்று பல வகை உண்டே, ஒவ்வொன்றுக்கும் ஒரு விதியா?

ஒவ்வொன்றும் எத்திசையில், எவ்வளவு வேகத்தில் வீசவேண்டும் என்பதற்குக்கூட  விதிகள் இருந்தாக வேண்டும்.

இந்த மண்ணில் கோடி கோடி கோடானுகோடி உயிர்கள் உள்ளன.

அத்தனைக்கும் வேறு வேறு விதிகள் இருந்தாக வேண்டும்.

நாம் நிற்பது; நடப்பது; கை அசைப்பது; கால் நீட்டுவது; மூச்சு விடுவது; வளைவது; நெளிவது; கண் இமை திறப்பது; மூடுவது; கழிவறை செல்வது, சிறுநீர் பெய்வது, தலையில் பேன் மேய்வது, தலைமுடி உதிர்வது என்றிப்படி அனைத்து இயக்கங்களுமே விதிப்படிதானா?


வாழ்வில் இடம்பெறும் அத்தனை நல்லது கெட்டதற்கும் இந்த விதியே காரணம் என்கிறார்கள்.

எத்தனை நில நடுக்கங்கள்! எத்தனை எரிமலைக் குமுறல்கள்! எத்தனை எத்தனைச் சுனாமிகள்! இவற்றால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளுக்குக் கணக்குண்டா?

அவை அனுபவித்த துன்பங்களுக்கு வரம்புண்டா?

இத்தனைக்கும் காரணமான விதியை விளையாடவிட்டவன் கடவுள் என்றால், அவன் மட்டும் இதிலிருந்து விதிவிலக்குப் பெற்றது எப்படி?

எப்படி? எப்படி? எப்படி?