பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 30 ஜூன், 2023

ஆளுநரா, அமித்ஷாவா, இந்தியக் குடிமகனா... இவர்களில் அப்பாவி யார்?!

ரு மாநிலத்தின் ஆளுநர் நியமனம் என்பது, அதிகாலையில் சம்பந்தப்பட்டவரைத் தடாலடியாய் வரவழைத்து, “நீங்கதான் இந்த[சம்பந்தப்பட்ட] மாநிலத்தின் கவர்னர். இப்பவே புறப்பட்டுப் போய்ப் பதவி ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று அதிரடியாய் உத்தரவு பிறப்பிக்கும் செயலல்ல.

சில மாதங்களுக்கு முன்பே, குறைந்தபட்சம் கொஞ்சம் வாரங்களுக்கு முன்பாவது அவருக்கு முன்னறிவிப்புச் செய்து, அவருக்கான[ஆளுநர்] அதிகாரங்கள் பற்றி அறிந்துகொள்ள அவகாசமும் தந்த பிறகே அவரைப் பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும்.

தவறினால், அவர் ஆளுநர் ஆன பிறகேனும், தனக்குரிய அதிகாரங்களைச் சட்ட நிபுணர்களின் உதவியுடன் அறிந்துகொள்வது கட்டாயம்.

இவ்வாறு ஆளுநருக்கான தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் ஒருவர் அந்தப் பதவியை ஏற்பதும் அதில் நீடிப்பதும் பல நிர்வாகப் பிழைகளுக்கு வழிவகிக்கும். 

அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்த ஐந்து மணி நேரத்தில் அதை நிறுத்தி வைப்பதாகத் தமிழ்நாடு ஆளுநர் அறிவித்திருப்பது, அவர் தன் பதவிக்கான தகுதியை வளர்த்துக்கொள்ளவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

ஆளுநர் என்பவர் அனைத்துச் சட்ட விதிகளையும் அறிந்திருப்பது சாத்தியமில்லை என்றாலும், மிக மிக முக்கிய முடிவுகளை[செந்தில் பாலாஜி பதவி நீக்கம் போல], சட்ட நிபுணர்களை மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர், பிரதமர் போன்ற, தனக்கும் மேலான அதிகாரம் படைத்தவர்களைக் கலந்தாலோசிப்பது மிக மிக மிக மிகவும் அவசியம்.

இந்த நியதியை ஆளுநர் ரவி அறிந்திருக்கவில்லையா? மேற்கண்டவர்களைக் கலந்தாலோசிக்கவில்லையா?

அறியாமலும், கலந்தாலோசிக்காமலும் அதிரடியானதொரு உத்தரவை எப்படிப் பிறப்பித்தார்?

இந்த அவசரகதியிலான உத்தரவால் பாலாஜியின் மனமும் உடலும் பாதிக்கப்படலாம் என்று யோசிக்காதது ஏன்?

யோசிக்காததற்கான காரணம் எதுவாகவோ இருக்கட்டும். ‘உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலையீட்டின் பேரில் ஆளுநர் ரவி தன் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளார்’ என்பது இன்று பிற்பகலில் வெளியான ஊடகச் செய்தி.

இந்தியா குடியரசாகி 74 ஆண்டுகள் ஆகின்றன.

இத்தனை ஆண்டுகளாக, ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கான அதிகார வரம்பு குறித்து மேல்மட்ட அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், அரசுக்கு ஆலோசனை வழங்குகிற சட்ட நிபுணர்களும் அறிந்திருக்கவில்லையா?

அறியாமலிருந்து, இப்போதுதான்[ஆளுநரின் உத்தரவைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த பிறகு] சட்ட விதிகளை அலசி ஆராய்ந்து அறிந்துகொண்டார்களா?

அதனால்தான் ஆளுநருக்கு முன்கூட்டியே அலோசனை வழங்குவது சாத்தியம் ஆகாமல்போனதா?

இதற்குமேலும் கேள்விகள் கேட்பதற்கு ஒரு சாமானியக் குடிமகனுக்கு ‘நல்லதல்ல’ என்பதால் இத்துடன் முடிக்கிறேன்!