செவ்வாய், 6 ஜூன், 2023

‘அல்லா[ஹ்]’ எல்லாருக்குமான கடவுளா, அல்லவே அல்லவா?!

படத்தில் உள்ள குடும்பத் தலைவர் ஓர் இஸ்லாமியர்.

மத்தியப்பிரதேசத்தில், ‘தமோ’மாவட்டம்,

ரத்த‘தேஜ்கர்’ என்னும் கிராமத்தில் வசிப்பவர்ஆரிஃப் ஷா.

ஏதோவொரு சூழலில், அண்டை வீட்டில் வசிக்கும் ஓர் இந்துமதத்தவரின் நெற்றியில் குங்குமம் இட்டிருக்கிறார்.

இது, ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் இடையிலான அன்பை வெளிப்படுத்தும் செயல் மட்டுமே. சாதி, சமயம், ஆண்டான் அடிமை என்பன போன்ற சமூக மாறுபாடுகளைக் கடந்த நிகழ்வு இது.

இதைப் புரிந்துகொள்ளும் மனப் பக்குவம் இவர் வாழும் தேஜ்கர் கிராம மக்களுக்கு இல்லை.

இல்லாததால்.....

பெரும் சீற்றத்திற்குள்ளான தேஜ்கர் கிராம இஸ்லாமியர்கள், தங்களின் தலைவருடன் கலந்து பேசி, ஆரிஃப் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தங்களின் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தார்கள் என்பது செய்தி.

ஆரிப் ஷா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்(எஸ்பி) ராகேஷ் குமார் சிங்கிடம் புகார் அளித்ததும், அங்குள்ள இஸ்லாம் சமூகத்தவரிடம், ஆரிப் குடும்பத்தை ‘ஒதுக்கி வைத்தல்’ தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் எவராயிருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்ததன் விளைவு அவ்வூரில் பழைய சுமுக நிலை திரும்பியது எனபது கூடுதல் தகவல்.

ஆண்கள் இருவரில், ஒருவர் இன்னொருவருக்குப் பொட்டு வைத்தார் என்பது எந்த வகையிலும் முக்கியத்துவம் பெறாத ஒரு சாதாரண நிகழ்வு.

தேஜ்கர் கிராமத்தவர்கள், பொட்டு வைத்ததைக்கூடக் குற்றமாகக் கருதுகிறார்கள் என்றால், தங்களின் மதத்தவர் அன்பின் மிகுதியால், பிற மதத்தவரைக் கட்டியணைப்பது தொட்டுப் பேசுவது போன்றவையும் குற்றம் என்பார்களா?

இந்து-இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாய்க் காதலித்துத் திருமணம் புரிந்தால் எத்தனைப் பெரிய தண்டனை இவர்கள்[தேஜ்கர் கிராமத்தவர்] வழங்குவார்களோ?

அதை, இவர்களால் வணங்கப்படுகிற அல்லாவே அறிவார்.

அல்லா மட்டுமே கடவுள் என்பது இவர்களின் நம்பிக்கை.

எந்தவொரு அளவீட்டுக்கும் உட்படாத, அகன்று விரிந்து பரந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தை நிர்வகிக்கிற, ஒரே ஒரு கடவுளான அல்லா, ஒருவர் இன்னொருவரின் நெற்றியில் திலகம் இடுவதைக்கூடக் கண்காணிக்கிறார் என்பது எள்ளி நகையாடற்குரிய நம்பிக்கையாகும்.

அல்லாவோ வேறு எல்லாமுமாக இருக்கிற ஏதோவொரு கடவுளோ, அப்படி ஒருவர் இருந்தால், சாதி, சமயம் என்ற எந்தவொரு கட்டுக்குள்ளும் அடைபடாதவர் அவர் என்பதை, இஸ்லாமியர் மட்டுமல்ல, மற்ற மதத்தவரும் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

அது அவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானிடர் குலத்துக்கும் நன்மை பயப்பதாக அமையும்!