நம்மில் பலர் அழுகை குறித்துச் சில கற்பிதங்களை வளர்த்திருக்கிறார்கள். ஆணாக இருந்தால், “ஆண்பிள்ளை அழக் கூடாது” என்கிறார்கள்; “குழந்தையைப் போல் அழாதே” என்று அறிவுரை கூறுகிறார்கள்.
இது தவறு.
அழுகை மனித உடலில் இயற்கையான ஓர் அம்சம்.
நம் உடலில் ஏற்படும் எந்த நிகழ்வும் தேவையற்றது அல்ல.
மண்ணீரல், பித்தப்பை, அபெண்டிக்ஸ் ஆகியவை நம் உடலுக்குத் தேவையில்லாத உறுப்புகள் என்று நம்ப்பப்படுவது தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நம்மைப் பாதிப்பிற்குள்ளாக்கும் எந்தச் செயலையும் நம் உடல் உற்பத்தி செய்யாது என்கிறார்கள் உடற்கூற்று அறிஞர்கள்.
அழுகை, பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்பட்டாலும், உண்மையில் அது நமக்கு நன்மையை அளிக்கக் கூடியது.
நம் கண்களில் தூசு, புகை அல்லது வேண்டாத பொருள் படும்போது, கண்ணீர் வரும். இவற்றைக் கண்ணிலிருந்து வெளியேற்ற உடல் அனிச்சையாகக் கண்ணீரை வரவழைக்கிறது.
எதிர்பார்ப்புக்கும் மேலான இன்பத்தை அனுபவிக்கும்போதும், வலி, வேதனை, ஏமாற்றம், கவலை போன்றவை அதிக அளவில் ஏற்படும்போதும், உணர்ச்சிவசப்படும்போதும் கண்ணீர் வெளியாகிறது.
உணர்ச்சிகரமான அழுகை உண்மையில் நம் உடலின் மன அழுத்தத்தைச் சமநிலைப்படுத்துவதன் மூலம் பதற்றத்தைக் குறைக்கிறது.
சுரப்பிகள்[ஹார்மோன்கள்] சிறப்பாக இயங்குவதால் உடல்நலம் மேம்படுகிறது.
“அழுது தீர்த்துட்டேன். மன பாரம் குறைஞ்சிருக்கு” என்று அழுதுகொண்டிருந்தவர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம்.
அவர்கள் சொல்வது உண்மையே. கண்ணீர்விட்டு அழுத பிறகு அமைதியாகத் தூங்க முடிகிறது.
மன அழுத்தத்துடன் வாழ்ந்து உடம்பைக் கெடுத்துக்கொள்வதைக் காட்டிலும் துக்கம் அதிகரிக்கும்போது அழுதுவிடுவதே[எதையும் தாங்கும் இரும்பு நெஞ்சம் அரிதாகச் சிலருக்கு வாய்க்கக்கூடும்] நல்லது.
அழுகையின் மூலம், மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுரக்கும் சுரப்பிகள்[ஹார்மோன்கள்] உடம்பில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுகின்றன.
கண்ணீரை உள்ளுக்குள்ளேயே தேக்கிவைப்பதால், அது தேவையில்லாத, ஆபத்தான நோய்களை உருவாக்கிவிடுகிறது.
எதிர்மறை உணர்வுகளை மனதிற்குள் அடக்கி வைத்து, அழுகையைக் கட்டுப்படுத்தும்போது, மன அழுத்தத்தைத் தரும் ஹார்மோன்களின் செயல்பாடு அதிகரிக்கிறது. எனவே.....
அழுகை என்பது எதிர்மறை விசயமல்ல, உடன்பாடானதுதான் என்பதை உணர்தல் அவசியம்.
தாங்கள் அழுவதை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்று நினைப்பவர்கள், தங்களை ஓர் அறைக்குள் பூட்டிக்கொண்டு அழலாம்; உற்ற நண்பர்களை அணுகி, அழுது மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.
* * * * *