“கதை எழுதுதல் ஒரு கலை” என்பார்கள்.
ஒரே ‘தம்’மில் வாசகர் கதையைப் படித்து முடிக்க வேண்டுமென்றால், கதையில் புதிய புதிய ‘உத்தி’[techniques]களும் கலையம்சம் சார்ந்த சரளமான ‘நடை’[style]யும் கையாளப்பட்டிருத்தல் வேண்டும்.
‘அழகான அந்தப் பெண்ணை அவன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்’ என்று எழுதுவது, ஒரு நிகழ்வை உள்ளது உள்ளபடியே எடுத்துரைப்பதாகும். அதில் வாசகரை ஈர்க்கும் அம்சம் ஏதும் இல்லை.
அதையே கொஞ்சம் மெருகூட்டி, ‘அந்த அழகுத் தேவதையை அவன் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான்’ என்றோ, ‘பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தான்’ என்றோ எழுதினால் அது தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைகிறது.
‘எனக்குச் சதைப் பற்றில்லாத ஒட்டி உலர்ந்த உடம்பு’ என்று எழுதும்போது, அது உடம்பு பற்றிய வெறும் விவரிப்பு மட்டுமே.
அதையே, ‘நான் வீதிக்கு வந்தால் வானத்தில் கழுகுகள் வட்டமிடத் தொடங்கிவிடும்’ என்று எழுதினால், அது வாசகரைப் புன்சிரிக்க வைக்கிறது.
நடை மட்டுமல்லாமல்.....
‘அப்பாவித் தனமானது உன் அழகு முகம். உன் விழிகளில்தான் எத்தனைக் குளிர்ச்சி! அடடா மருட்சி!! உனக்கு நீண்ட கூந்தல்; மணக்கும் சந்தன மேனி; காதோரத்தில் பூனை முடி; கழுத்தோரம் செம்பட்டைக் கேசம்.........!’
இது போன்ற குட்டிக் குட்டி வருணைகளும் ஒரு சிறுகதையைச் சிறந்த படைப்பாக்குகின்றன.
தொய்வில்லாமல் ஒரு கதையைக் கொண்டு செல்ல இவை மட்டும் போதா. புதிய புதிய ‘உத்தி’களைக் கையாளும் திறனும் ஒரு கதாசிரியனுக்குத் தேவை.
‘நீங்கள் பலவீனமான மனசுக்காரரா? இந்தக் கதையைப் படிக்காதீர்கள்!’
‘கவிதாவின் கதை எப்படி முடியுமோ தெரியாது. சுபமாகவே தொடங்குவோம்’
இவ்வாறெல்லாம், வாசகரைப் படிக்கத் தூண்டும் வகையில், கதையைத் தொடங்குவது நம் எழுத்தாளர்களுக்குக் கைவந்த கலை.
கதையை முடிக்கும் போதும் இத்தகைய உத்திகளைக் கையாள்வது அவர்களின் வழக்கம்தான்.
உதாரணத்திற்கு ஒன்று மட்டும்.....
இளம் மனைவியுடன் தனிமையில் நடந்து செல்கிறான் ஓர் இளைஞன்.
எதிர்ப்பட்ட சில ரவுடிகள் அவனை அடித்து வீழ்த்துகிறார்கள்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த வாலிபன், அவர்கள் தன் மனைவியைக் கற்பழிக்கும் முயற்சியில் முனைப்புடன் இருப்பதைக் காண்கிறான். எழுந்து நிற்க முடியாத, கயவர்களுடன் போராட முடியாத நிலையில் தன்னுடையவளை மானபங்கத்துள்ளாகாமல் தடுப்பது எப்படி என்று துடிப்புடன் யோசிக்கிறான்.
அருகில் கிடந்த, கைக்கு அடக்கமான ஒரு கல்லை எடுத்துக் குறி பார்த்துத் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி வீசுகிறான்.
அவன் குறி தப்பவில்லை.
அவன் எதிர்பார்த்தது போலவே, அது அவன் மனைவியின் நெற்றிப் பொட்டைத் தாக்க, அவள் சுருண்டு விழுந்து செத்துப் போகிறாள்.
வாலிபன், வாசகரைப் பார்த்து இப்படிக் கேட்பதாகக் கதை முடிகிறது.....
“என்னவள் மானபங்கப்படுத்தப் படுவதைத் தடுக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னுடைய இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”
அடடா! எத்தனை அருமையான உத்தியைக் கதாசிரியர் கையாண்டிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறதுதானே?!
அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர் பெயரும் நினைவில் இல்லை.
இவ்வாறெல்லாம் கதையின் வடிவத்தில் கருத்துச் செலுத்துகிற கதாசிரியன், தான் கதை படைப்பதன் நோக்கம் என்ன என்பதிலும் தெளிந்த அறிவுடையவனாக இருத்தல் அவசியம்.
வாசகரைச் சிரிக்க வைப்பதா? சிந்திக்கச் செய்வதா? இன்புறுத்துவதா? துன்புறுத்துவதா? அனுதாபப்பட வைப்பதா? ஆர்ப்பரித்துப் பொங்கி எழச் செய்வதா? இவை எதுவுமே இல்லை என்றால், வெறும் பொழுது போக்கிற்காகவா?
எதற்காக எழுதுகிறோம் என்பதை எழுத்தாளன் நன்கு சிந்தித்துத் திட்டமிடுதல் இன்றியமையாத் தேவை.
திட்டமிடல் இல்லையெனின், அவன் உருவாக்கும் படைப்பு ஒரு ’வெற்று’ப் படைப்பாக[எதற்கும் பயனற்றதாக] அமைந்துவிடும்.
* * * * *
***ஒரு கலைக்கல்லூரியின் இலக்கிய மன்றச் சொற்பொழிவின் ஒரு பகுதி இது.
பொழிந்தவர்? நான்தான்[ஓய்வுக்கு முன்பு]! ஹி... ஹி... ஹி!!!