மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்சென்ற சம்பவம் குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நம் பிரதமர் மோடி பேசினாராம்.
என்ன பேசினார்?
//“இதயம் வலிக்கிறது. இந்த விவகாரத்தில் எந்தக் குற்றவாளியும் தப்பிக்க முடியாது” என உறுதியளிக்கிறேன் என்று கண் சிவந்தார்//
மணிப்பூரில் கலவரம் தொடங்கி 78 நாட்கள் போல ஆகின்றன. ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. நூற்றுக்கணக்கானவர்கள்[சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது, இணையத் ‘தகவல் தொடர்பு’ முடக்கப்பட்டுள்ளதால்] கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கலவரம் தொடங்கியபோதே நம் பிரதமரின் இதயம் வலிக்கத் தொடங்கியிருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.
பல்வேறு ஜனநாயகக் கடமைகள், தவிர்க்கவே முடியாத அயல்நாட்டுப் பயணங்கள் காரணமாக, இதய வலி குறித்து மருத்துவர்களிடம்கூடச் சொல்லாமல், தமக்கான பணிகளைச் செய்துமுடித்திருக்கிறார் நம் பிரதமர்.
நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கிய இந்த நேரத்தில் சற்றே ஓய்வு கிடைத்ததால் தம் இதய வலியைப் பிறர் அறியச் சொல்லியிருக்கிறார்.
‘பிரதமரின் கண்கள் சிவந்தன’ என்பது செய்திக்குள் செய்தி.
இரண்டு மாதங்களுக்கு மேலாக, இதய வலியைத் தாங்கிக்கொண்டு, மனதுக்குள் அழுதுகொண்டே இருந்ததால் கண்கள் சிவந்தது இயல்பான நிகழ்வுதான்.
“பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு மானபங்கப்படுத்தியதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பிக்க முடியாது” என்றும் சூளுரைத்திருக்கிறார் நம் பிரதமர்.
இது போன்ற எத்தனையோ குற்றங்கள்[வன்புணர்வுகள், கொலைகள், கொள்ளைகள்] நாட்டில் இதற்கு முன்பும் நடந்திருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று.
இந்த மானபங்கப்படுத்தப்பட்ட அட்டூழியம் இரண்டு மாதங்களுக்கு முன்பே நிகழ்ந்ததாகும்.
இடைப்பட்ட காலத்தில் இது போன்ற கொடூரங்கள் இன்னும் நிகழ்ந்திருக்கலாம். அவை பற்றிய செய்திகளும் வெளிவருமாயின், ‘நெஞ்சு வலி’ மேலும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதன் விளைவாக, விபரீதம் ஏதும் நிகழ்ந்துவிடக்கக்கூடாது என்பது நம் கவலை.
ஆகவே,
நாடாளுமன்றக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு நம் மதிப்புக்குரிய பிரதமர் மோடி அவர்களை உடனடியாக மருத்துவமனையில் ‘அட்மிட்’ செய்து, உரிய முறையில் சிகிச்சை அளித்திட வேண்டும் என்பது நம்மைப் போன்ற உண்மைக் குடிமகன்களின் மனப்பூர்வமான வேண்டுகோள்.
மணிப்பூர் கலவரம்?
அது தொடர்பான அனைத்தையும் அதிகாரிகள் கவனித்துக்கொள்வார்கள்; ராணுவம் பார்த்துக்கொள்ளும்; ராமபிரான் போன்ற கடவுள்களும் கருணை காட்டுவார்கள்.
* * * * *