புதன், 2 ஆகஸ்ட், 2023

ஆறறிவுச் ‘சூன்யர்’ அண்ணாமலை!!!


 ‘பாஜக’வின் 9 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனைகளை விளக்கவும், திமுக அரசைச் சாடவும்[இது நமக்கு ஒரு பொருட்டல்ல] 110 நாட்களுக்குப் பாதயாத்திரை மேற்கொண்டிருக்கும் ‘பாஜக’ தலைவர் அண்ணாமலை, யாத்திரையில் என்னவெல்லாம் பேசுகிறார் என்பதைத் தினம் தினம் ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகிறது.

அவர் ராமநாதபுரத்தில் ஆற்றிய உரையில் கீழ்க்காணும், ‘திமுக’ மீதான வசவு மொழி இடம்பெற்றுள்ளது. அது…..


“பிரதமர் நரேந்திர மோடியின் நகத்தில் உள்ள அழுக்கின் பக்கம்கூட திமுக வரவே முடியாது” என்பது.


ஒரு தடவைக்கு ஒன்பது தடவை வேண்டுமானாலும் படியுங்கள். இதன் பொருள் புரிகிறதா பாருங்கள்.


மணிக்கணக்கிலும் நாட்கணக்கிலும் யோசித்தாலும் விளங்கிக்கொள்ள முடியாது.


முடியவே முடியாது.


மோடியின் விரல் அழுக்குடன் ‘திமுக’வை ஒப்பிட்டிருக்கிறார் இவர்.


மோடியின் அறிவாற்றலை, அல்லது உயர் பண்புகளைக் குறிப்பிட்டு, திமுக அவற்றிற்கு இணையாகாது என்று சொல்லியிருந்தால் அதில் தவறேதும் இல்லை; பாராட்டுக்குரிய உரையாகவும் அமையலாம்.


“அவன் என் கால் தூசுக்குச் சமானம்” என்பது போல, “திமுகவினர் மோடியின் நக அழுக்குக்குச் சமானம்” என்றாவது சொல்லியிருக்கலாம். இவரோ, மோடியின் நக அழுக்கின் பக்கம்கூட வர முடியாது, அதாவது, ‘திமுகவினர் மோடியின் நக அழுக்குக்குச் சமானமானவர்கள் அல்ல’ என்னும் அர்த்தத்தில் பேசியிருக்கிறார்.


மோடியின் விரல்களில் அழுக்கு இருப்பதாகச்[மோடி நகம் வெட்டுவதில்லையா என்னும் கேள்வியெல்லாம் இங்கு தேவையற்றது] சொல்லியிருப்பது அவரை இழிவுபடுத்தும் செயலல்லவா?


“மோடியின் விரல் அழுக்கு அவர் மன அழுக்கின் அடையாளம். எங்கள் மனம் சுத்தம். அதில் அழுக்குச் சேராது” என்று திமுகவினர் பதிலடி கொடுத்தால் அண்ணாமலையால் அடிக்கு அடி கொடுக்க முடியாது.


அண்ணாமலையின் இந்தப் பேச்சு[பல்வேறு மொழி ஊடகங்களிலும் வெளியாகும்] குறித்து, இந்தியாவின் பிற மாநிலத்தவர் மட்டுமல்லாமல், அயல்நாட்டவரும் என்ன நினைப்பார்கள்?


இத்தனை உளறுவாயராக இருக்கும் ஒரு நபரால் எப்படிப் ‘பாஜக’வின் மாநிலத் தலைவராக நீடிக்க முடிகிறது? இவரைத் தேர்வு செய்த மோடி எப்படிப்பட்டவராக இருப்பார் என்று கேட்டு[நாம் கேட்கவில்லை. ஹி... ஹி... ஹி!!!] எள்ளி நகையாடுவார்கள்தானே?


அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்காக, பாஜக தலைவர்களும் தொண்டர்களும் வருந்துவார்களோ அல்லவோ, இவர் ஒரு தமிழன் என்ற வகையில் நாம் மிக மிக வருந்துகிறோம்.

* * * * *

https://tamil.oneindia.com/news/ramanathapuram/annamalai-criticises-dmk-that-it-cannot-come-closer-to-modis-nail-dirts-525521.html?story=1