இந்து அல்லாதவர்கள் இந்துமதம் சார்ந்த கோயில்களுக்குள் நுழையக் கூடாது என்று முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. அது குறித்த அறிவிப்புப் பலகையும் கோயிலின் வாயிலில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பலகை பின்னர் அகற்றப்பட்டது[தி.மு.க. ஆட்சியில்?].
அது கண்டு மனம் கொதித்த ஆன்மிகச் செம்மல் ஒருவர், ‘இந்து அல்லாத சமயத்தவர் இந்துக் கோயில்களுக்குள் நுழைவதை இந்து அறநிலையத் துறை ஆலய நுழைவு விதி 1947 தடுப்பதாலும், மாற்று மதத்தவரும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இந்துக் கோயில்களுக்குள் நுழைய வேண்டிய தேவை இல்லை என்பதாலும் மாற்றார் நுழையக் கூடாது என்பதான அறிவிப்புப் பலகையை மீண்டும் வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, பதாகை அகற்றப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, அதை மீண்டும் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார் என்பது அண்மைச் செய்தி. வழக்கையும் ஒத்தி வைத்திருக்கிறாராம்.
இந்து மதம் சார்ந்த ஒருவர் இப்படியொரு மனுவைத் தாக்கல் செய்திருப்பது வியப்பூட்டும் நிகழ்வாகும்.
இந்து அல்லாதவர் உள்ளே நுழைந்தால் சாமிகளுக்குத் தீட்டுப்பட்டுவிடாது.
அவர்களால் கற்களால் ஆன கோயில்களுக்கோ, சிலைகளுக்கோ சேதம் ஏற்பட்டுவிடாது.
இவை நிகழா என்பதோடு, பிறரை அனுமதிப்பதால் கணிசமான அளவில் நன்மைகள் விளையவும் வாய்ப்பு உள்ளது.
பிற மதத்தவன் இந்துவாக மதம் மாறுவதும், நாத்திகன் ஆத்திகனாக மாறுவதும் நிகழலாம்.
கோயிலுக்குச் சென்றால் மனதுக்கு அமைதி கிட்டும் என்கிறார்கள். மன நிம்மதி தேடி அலைபவர்கள் அனைவரையும் உள்ளே அனுமதித்தால் அது இந்து மதத்தவரின் பெருந்தன்மையை உலகறியச் செய்யும்.
ஆக, நுழைவுக்கு அனுமதி தருவதால், இந்து மதம் வளர்வதற்கு[கொஞ்சமேனும்] வாய்ப்புள்ளதே தவிர பாதிப்பு ஏதும் உண்டாக வாய்ப்பே இல்லை.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லையாம். அப்படிப்பட்ட ஒருவரை இவர்கள் எப்படி அடையாளப்படுத்துவார்கள்? கிறித்தவர்களும் பெரும்பாலும் அடையாளச் சின்னம் தரிப்பதில்லையே.
தடை இல்லாத காலக்கட்டத்தில், புத்த மதத்தவர், சமண மதத்தவர்கள் என்று எத்தனை பேர் கோயிலுக்குள் நுழைந்தார்கள் என்று கேள்வி எழுவதையும் தவிர்க்க இயலாது.
மதச் சின்னங்களுடன் பொது வெளியில் நடமாடுபவர்கள் இஸ்லாமியர் மட்டுமே[பஞ்சாபிகள் இங்கு அரிதாகவே தென்படுகிறார்கள்].
சுருங்கச் சொன்னால், இஸ்லாமியரைக் கருத்தில் கொண்டுதான் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் எனலாம். ஆனால், இரு கரம் கூப்பி அழைத்தாலும் அவர்கள் இந்துக் கோயில்களுக்குள் நுழையமாட்டார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது..
எனவே,
மீண்டும் வைக்க இருக்கிற பலகையில், ‘நெற்றியில் திருநீறு வைத்தவர்களுக்கு மட்டுமே அனுமதி’ என்று எழுதிவிடுவது உத்தமம்.
ஒத்தி வைத்த விசாரணை முடிவுறும்போது, நீதிபதி அவர்கள் இந்தத் தீர்ப்புக்கு மாற்றாக நல்லதொரு தீர்ப்பை வழங்கினால் அது பெரிதும் வரவேற்கத்தக்கதாக அமையும்.
* * * * *