“என் கணவர் ஆபீஸிலிருந்து வரும்போதே அலுத்துக் களைத்துப் போய் வருகிறார்..... எதைக் கண்டாலும் எரிச்சல் கொள்கிறார்..... இதற்கு என்ன செய்யலாம் என்று தயவு செய்து வழி சொல்லுங்க” என்று மனோதத்துவ நிபுணரிடம் கேட்டாள் அந்த இளம் பெண்.
நிபுணர் சிரித்தார்; சொன்னார்:
“நிறையப் பேர் செய்யுற தப்பை நீங்களும் செய்யுறீங்கன்னு நினைக்கிறேன். புருஷனுக்கு நாள் பூரா ஆபீஸில் டென்ஷனா இருக்கும். அதைக் குறைத்து அவரைக் குஷிப்படுத்த வேண்டும். அது மனைவியின் கடமை” என்று கூறி, சில வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து அனுப்பினார்.
மறு நாளே அதைக் கடைபிடிக்க முடிவு செய்தாள் அந்தப் பெண்.
மறுநாள் மாலை.
கணவன் அலுவலகத்திலிருந்து வந்தான்.
முக மலர்ச்சியுடன் வரவேற்றாள் அவள்.
அவன் நாற்காலியில் உட்கார்ந்தான். அவள் எழுந்து சென்று கதவைத் தாளிட்டுவிட்டு வந்தாள்.
கணவனின் ஷூவைக் கழட்டினாள்; டையைத் தளர்த்தினாள். அவன் மடியில் ‘மெத்’தென்று உட்கார்ந்தாள்; ஆசையுடன் அவன் கன்னங்களை வருடினாள்.
இதழோடு இதழ் பதித்தாள்.
இன்னும் ஏதேதோ செய்து, ‘கடுகடு’ என்றிருந்த அவன் முகத்தில் கலகலப்பை வரவழைக்க முயன்றாள்.
தோல்வியே மிஞ்சியது.
“ஏன் இப்படி இருக்கீங்க? என் கொஞ்சல் குலாவலெல்லாம் உங்களுக்குக் கொஞ்சமும் பிடிக்கலையா?” என்று அழாக்குறையாகக் கேட்டாள் அவள்.
“நாசமாப் போச்சு. ஆபீஸில்தான் அந்த ஸ்டெனோ பாடாய்ப் படுத்தறான்னா வீட்டுக்கு வந்தா நீயும்...” என்று அலுத்துக்கொண்டான் கணவன்.
“ஐயோ...” என்று தலையில் அடித்துக்கொண்டு தரையில் சரிந்தாள் அந்த அப்பாவிப் பெண்!
* * * * *
*** எவரோ எப்போதோ ஏதோவொரு இதழில் எழுதிய கதையின் கருவுக்கு இங்கே உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வாழ்க!