நம் பிரதமர் ‘மோடி’ அவர்களுக்கு இன்று 73ஆவது பிறந்த நாள்.
ஆளும் கட்சியினர் என்றில்லாமல், அனைத்துக் கட்சித் தலைவர்களும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
நம் அண்ணாமலை அவர்களும் மோடி அவர்களை வாழ்த்தியிருக்கிறார்.
சற்றும் எதிர்பாராத வகையில் தனக்கு வாய்த்த தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் பதவியைத் தக்க வைப்பதற்காக, ஆளும் கட்சியினரை மனம்போன போக்கில் வசைபாடும் ‘உளறு வாயர்’ அண்ணாமலை என்று சற்று முன்னர்வரை எண்ணியிருந்த நான், அவரின் வாழ்த்துரையை வாசித்த பிறகு மனம் மாறினேன்.
அண்ணாமலையின் வாழ்த்துரை:
//மனதில் உறுதியும், வாக்கினிலே இனிமையும், வாழ்க்கையில் நேர்மையும், ஒளி படைத்த கண்ணும், உறுதி கொண்ட நெஞ்சினருமாக, இந்தியத் தேசத்தின் வெற்றிப் பயணத்திற்கு மாலுமியாக வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி.
நம் இந்திய மண் பயனுற, நிலவிலும் நம் கால் பட... நினைக்க முடியாத சாதனைகள் எல்லாம் நிகழ்த்தி, தன் மீது ஏவப்பட்ட கேள்விக் குறிகளையெல்லாம் வியப்புக் குறிகளாக மாற்றிக் காட்டிய வித்தகர்//
என்றிப்படி, மோடி அவர்களைப் பாராட்டிய அண்ணாமலை, இதில் மனநிறைவு பெறாதவராகக் கீழ்க்காணுமாறு புகழ்ந்துரைத்திருக்கிறார்.
//அறிவுசார் ஞானியா! அனைத்தும் துறந்த முனியா[ஒரு வகைப் பேயல்ல; முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரன்]! தேசத்தின் காவல் தெய்வமா! முன்னேற்றத்திற்கான போராளியா! உலகம் போற்றும் விஸ்வ குருவா[உலகின் வழிகாட்டி]! சாமான்ய மக்களின் சங்கடம் தீர்க்க வந்த சரித்திர நாயகனா! -இப்படி எல்லாம் உலகத்தின் பத்திரிகைகள் எல்லாம் வியந்து போற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குக் கிடைத்த தன்னலமற்ற நேர்மையான மாபெரும் தலைவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்//