அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 18 செப்டம்பர், 2023

‘பாரதிய தர்மம்’... தமிழ்நாடு ஆளுநர் ‘ரவி’யின் புதுப் ‘புருடா’!!!

தமிழ்நாட்டில், ஆன்மிக நெறியைச் சிதைத்திடும் வகையில் நாத்திக நெறியாளர்கள் செயல்படுவதாகப் புரளி கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். 

இங்குள்ள நாத்திகவாதிகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைப்பதற்கான பல வழிகளையும், உத்திகளையும், வெகு துரிதமாகக் கையாண்டுவருகிறது ஒன்றிய அரசு..

அவற்றில் குறிப்பிடத்தக்கவை, மாஜி காவல்துறை அதிகாரிகளான அண்ணாமலையைத் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவராகவும், ஆர்.என் ரவியைத்  தமிழ்நாடு ஆளுநராகவும் நியமித்ததது.

அண்ணாமலை, “அடித்துத் தூக்கு”, “போட்டுத் தாக்கு” ரகம். இவர் உருட்டல், மிரட்டல் மூலம் ஆளுங்கட்சியினரைக் கலங்கடிப்பவர் என்றால், பக்கா ஆத்திகவாதியான ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதனம், சர்வரோகசனம் என்றெல்லாம் பேசிப் பேசி மிரள வைப்பவர்.

சனாதனம் பேசிச் சலித்துப்போன நிலையில், இந்த ஆன்மிக ஆசான், இப்போது ‘பாரதிய தர்மம்’ பற்றியும் திருவாய் திறந்திருக்கிறார்.

அண்மையில், ‘பாரதிய தர்மம்’ குறித்து அவர் தந்த விளக்கத்தின் ஒரு பகுதி கீழே.

[தினத்தந்தி, 18.09.2023]
இதில், ‘இந்தப் பாரத நாடு மன்னர்களால் உருவாக்கப்படவில்லை; ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்ட பெருமையைப் பெற்றது’ என்னும் வரிகளை நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை.

புரிந்துகொள்ள வேண்டுமாயின், அந்த ரிஷிகளைப் பற்றியும் முனிவர்களைப் பற்றியுமான ஒரு பட்டியல் நமக்குத் தேவை.

அதை வழங்குமாறு மேதகு ஆளுநர் அவர்களை வேண்டுகிறோம்.

மேலும், ‘ரிஷி’ என்பவர் யார்? ஒருவர் ரிஷியாக மதிக்கப்படுவதற்கான தகுதிகள் என்னவெல்லாம்? ரிஷிகள் எப்போது, அல்லது எப்போதெல்லாம் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள்?

இவற்றிற்கான வரலாற்று ஆதாரங்களும் தேவை.

அதே போல, முனிவர் என்னும் சொல்லுக்கான விளக்கமும், முனிவர்களாலும் ரிஷிகளாலும் ‘பாரதிய தர்மம்’[இது குறித்த, ரவியின் கருத்தை ஆராயத் தனி பதிவு தேவை] உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் தேவை.

ஆளுநரால் தர இயலாது என்றால்,

பலம் வாய்ந்த நடுவணரசின் பக்கப் பலத்துடன் மனம்போன போக்கில், சனாதன தர்மம், பாரதிய தர்மம் என்றெல்லாம் பேசிப் பேசித் தமிழர்களை முழு மூடர்கள் ஆக்க முயலுகிறார் இந்த ஆன்மிக நெறிச் செம்மல் என்று சொல்ல நேரிடும்.

அதைத் தவிர்க்க.....

தர்ம யோகியும் கர்ம யோகியுமான ஆர்.என். ரவியின் அறிவியல் பூர்வமான விளக்கங்களைப் பேராவலுடன் எதிர்பார்க்கிறோம்.