செவ்வாய், 19 செப்டம்பர், 2023

பிள்ளையார் பிறந்த நாள்[சதுர்த்தி] வருத்தங்கள்!!!

“நமக்கும் மேலான ஒரு சக்தி இருக்கிறது. அது கருணை வடிவானது. அதை[கடவுளை] வழிபட்டால், துன்பங்கள் அகலும்; நினைத்த காரியம் கைகூடும்” என்றார்கள் நம் முன்னோர்களில் சிலர்.

“அவை நடந்தனவா? இனியேனும் நடக்குமா?” என்றெல்லாம் ஆராயாமல் அழுத்தம் திருத்தமாகக் கடவுளை நம்பினார்கள் நம் மக்கள்.

கிறித்தவர்கள் அவரைக் ‘கர்த்தர்’ என்றார்கள். இஸ்லாமியர்கள் அவரை ‘அல்லா[ஹ்]’ என்று அழைத்தார்கள்.

இந்து மதத்தவரோ, ஆளாளுக்கு ஒரு கதையைக் கற்பனை செய்து, அவரைப் பல்லாயிரவர் ஆக்கினார்கள்.

ஒரு கடவுளுக்கு ஒரு கதை போதாது என்று விதம் விதமான பல புதுப் புதுக் கதைகள் சொல்லி மனம் பூரித்தார்கள்.

உதாரணத்துக்கு, சிவன் ஆனவர் உருத்திரன், முக்கண்ணன், நடராசன் என்றிப்படி பல வடிவங்கள் பெற்றது. திருமால் என்பவர் விஷ்ணு, கண்ணபிரான், இராமபிரான் என்றானது.

ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு கதை.

பார்வதி தேவியின் அழுக்கில் உதித்த பிள்ளையாருக்கோ, விநாயகன், விக்னேஷ்வரன், யானை முகன், கணபதி என்று  ஏராளமான பெயர்கள்; கற்பனைக்கு எட்டாத கதைகள்.

மேற்கண்டவர்களின் அவதாரம் குறித்தக் கதைகளில் பலவும் அருவருக்கத்தக்க ஆபாசத்தின் உச்சம் தொட்டவை.

கடவுள் ஒருவரே என்பதை உணரும் மனப் பக்குவம் இல்லாதவர்களுக்காகப் பல கடவுளர் கொள்கையை முன்னோர்கள் உருவாக்கினார்கள் என்பார்கள்.

ஆனால், அதனால் விளைந்த கேடுகள் மிகப் பல.  

குப்பை மேடு போல் குவிந்து கிடக்கும் இந்தக் கடவுள்களால் உருவான மூடநம்பிக்கைகள் எண்ணிக்கையில் அடங்காதவை.

இவர்களைத் துதிபாடிக் கூத்தடிப்பதற்கென்று மனிதர்கள் செலவிடும் பொருளும் நேரமும் அதிகரித்தவாறு உள்ளன.

மக்கள் வாழ்வில் இடம்பெறும் அத்தனை நன்மைகளையும் நமக்கு அளிப்பவர்கள் இந்த கற்பனைக் கடவுள்கள்தான் என்று இவர்கள் செய்யும் பரப்புரை கொஞ்சநஞ்சமல்ல.

உதாரணத்துக்கு, பிள்ளையார் வழிபாட்டால் மக்கள் பெறும் பயன்கள் குறித்து ஊடகம் ஒன்றில் வெளியான பதிவின் ஒரு பகுதி கீழே:

இப்படிக் கதையளப்பது போதாதென்று, பிள்ளையார் பொம்மை வாங்கிவருவதற்குக்கூட நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்கிறார்கள். 

கற்பனைக் கடவுள்களை வழிபடுவதற்கு நல்ல நேரமும் கெட்ட நேரமும் கற்பிக்கிற இந்தக் காட்டுமிராண்டி மனிதர்களைக் கண்டித்துப் பேசினாலோ, எழுதினாலோ, “பக்தர்களின் மனதைப் புண்படுத்துகிற இவனைக் கைது செய்” என்று கொடி பிடிப்பார்கள்.


ஆகவே.....


பக்தர்களின் மனம் நோகும்படியாக எதையும் சொல்லித் தொலைக்காமல், “பிள்ளையார்[மற்றக் கடவுள்கள் பிறந்த அசிங்கக் கதைகளையும் நினைவுகூர்க], பிறந்த நாள் வருத்தங்கள்” என்று சொல்லிக்கொள்வதில் ஆறுதல் பெறுகிறேன்!