அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 21 செப்டம்பர், 2023

‘ஒரே நாடு ஒரே மதம்’ சாத்தியமே!!!

‘இந்தியச் சாசனத்தின் 32ஆவது பிரிவின்படி, இந்திய மக்கள் சார்பில், ‘ஒரே அரசியல் சாசன மதம்’ கோரி முகேஷ் குமார், முகேஷ் மன்வீர் சிங் என்னும் இருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்.

“ஒரு மதத்தை மட்டும் இந்த நாட்டுக்குரிய மதம் ஆக்கினால், மற்ற மதத்தைப் பின்பற்றுவோர் தத்தம் மதத்தைப் போற்றுவதைத் தடுக்க முடியுமா?” என்று மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பிய நீதியரசர்கள், அவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்தார்கள் என்பது ஊடகச் செய்தி[09.09.2023].

நீதியரசர்கள் இன்னும் கொஞ்சமே கொஞ்சமேனும் சிந்தித்திருந்தால், மனுவை நிராகரித்திருக்க வாய்ப்பே இல்லை என்பது எளியேன் மிக்கப் பணிவுடன் முன்வைக்கும் கருத்தாகும்.

“ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே இனம்[‘பாரத்’தன்]; ஒரே தேர்தல்’  என்று ஒரு ‘ஒரே’யில் பல்வேறு இனங்களையும், மொழிகளையும் 'இந்தி'யருக்குள்ளும் இந்திக்குள்ளும் ‘அடக்கம்’ செய்துவிடத் திட்டமிடும் ஒன்றிய அரசு, அதை நடைமுறைப்படுத்துவதிலும் தீவிரம் காட்டுகிறது. விரைவில் அது சாத்தியப்படவும்கூடும்

‘ஒரே நாடு; ஒரே மதம்’ என்று சிறுபான்மை மதங்களையெல்லாம் ‘ஒரே’யில் முடக்கிப்போடும் எண்ணமும் இந்த அரசுக்கு உண்டு. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களும் பாதகங்களும் இருப்பதால், குலுக்கலின்[துண்டுச் சீட்டுகளில் மதங்களின் பெயர்களை எழுதிக் குலுக்கி ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்] மூலம் ஒன்றைத் தேர்வு செய்து, இந்தியா ‘பாரத்’தின் ஒரே தேசிய மதமாக அறிவிக்கலாமா?” என்று முன்னணி மதத் தலைவர்களிடம் கேட்கலாம்.

ஆனால்,  அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்பது 100% உறுதி.

எனினும், இதற்கு மாற்றாக வேறொரு தேர்வு முறையைப் பாரத் அரசு கையாளலாம்[‘எங்களின் கடவுளைத் தொழுதால் துன்பங்கள் அகலும்; தீராத நோய்களும் குணமாகும்; செத்தவர் பிழைத்ததுண்டு’ என்று மதவாதிகள் செய்யும் பரப்புரையை மனதில் கொண்டு இந்த ‘முறை’ பரிந்துரைக்கப்படுகிறது].

அது.....

‘பிழைப்பது 100 சதவீதம் சாத்தியமே இல்லை’ என்று மதச் சார்பில்லாத, தேர்ந்த மருத்துவர்கள் அடங்கிய குழுக்களால் அறிவிக்கப்பட்ட நோயாளிகளை[ஒவ்வொரு மதக் குழுவுக்கும் ஒரு நோயாளி], தத்தம் கடவுளைப் பிரார்த்தித்து உயிர் பிழைக்கச் செய்யும்படி முன்னணி மதக் குழுவினரை நிர்ப்பந்திக்கலாம்[இந்நிகழ்ச்சியைத் தொ.கா.போன்ற ஊடகங்களில் உலகோர் அனைவரும் காணும்படிச் செய்யலாம்].

முதலில் எந்தக் குழுவினர் பிழைக்க வைக்கிறார்களோ, அவர்களின்  மதத்தை நம் தேசத்தின்[பாரத்] ஒரே மதமாக அறிவிக்கலாம்.

இந்த அதிசயத்தை எந்தவொரு குழுவும் நிகழ்த்தவில்லை என்றால், நாத்திகத்தை ஒரு மதமாக[மதங்களே ஏற்கத்தக்கன அல்ல என்னும்போது, நாத்திகத்தை மதமாக ஏற்பதில் தவறில்லை] ஏற்று அதைப் ‘பாரத்’தின் ஏகபோக மதமாக்கலாம்.

நம்முடைய இந்தப் பரிந்துரையை ஒன்றிய அரசு பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்பது நம் கோரிக்கையாகும்!