மனோஜ்[50] ஒரு கிறித்தவப் பாதிரியார்; பெங்களூருவில் பணியாற்றுகிறார்.
திடித்திடீர்னு சபரிமலை ஐயப்பன் மீது அபிரிதமான ஈர்ப்பு இவருக்கு ஏற்பட்டது.
திருவனந்தபுரம் அருகிலுள்ள ஐயப்பன் கோயிலுக்குப் போய், மாலை போட்டு, காலை மாலை என்று இரண்டு வேளையும் அழுக்குப்போகக் குளித்து ஐயப்ப சாமியைத் தரிசனம் செய்தார்.
41 நாள் விரதம் முடிந்ததும், இருமுடி கட்டி, சபரி மலைக்குச் சென்று ஐயப்ப சாமியை[“சாமியேஏஏஏய்... சரணம் ஐயப்பா!!!”]த் தரிசனம் பண்ணினார்.
ஐயப்பனுக்குப் பூஜை செய்யும் நம்பூதிரிகள் ஆனந்த சாகரத்தில் மூழ்கித் திளைத்தார்கள்; இவருக்குப் பொன்னாடை அணிவித்து மனம் பூரித்தார்கள்.
மலையாளம், தமிழ், இங்கிலீசு, இந்திலீசுன்னு இங்குள்ள அத்தனைப் பத்திரிகைகளிலும், பிற ஊடகங்களிலும் செய்தி வெளியாகி நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியது பாதிரியாரின் இந்த அதிரடி ஐயப்பத் தரிசனம்.
ஒரு பேட்டியில், “பல்வேறு மதங்கள் குறித்தும் தெரிந்துகொள்ளும் ஆசை எனக்கு உண்டு. இதன் காரணமாகத்தான் சபரிமலை வந்தேன்” என்று கூறியிருக்கிறார்[ஆனால், மதம் மாறவில்லையாம்].
கணுக்கால்வரை கைலி கட்டி, தொப்பி அணிந்து, “உங்களுடன் ஒரு நாள் தொழுகை நடத்த விரும்புகிறேன்” என்று திருவனந்தபுரம் இஸ்லாமியரிடம் இவர் சொல்வாரேயானால், அவர்கள் ஏற்பார்களா, எள்ளி நகையாடுவார்களா? சீக்கியர்களிடம் அனுமதி வேண்டினால், அவர்கள் ஆரத் தழுவி வரவேற்பார்களா, சிரித்து மழுப்புவார்களா?
வேறு வேறு மதங்கள் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்பட்ட பாதிரியார், சம்பந்தப்பட்ட கோயில்களுக்குச் சென்று சம்பந்தப்பட்ட மதத் தலைவர்களின் அனுமதியோடு ஆய்வு நிகழ்த்தியிருக்கலாம்; தொடர்புடைய ஆய்வு நூல்களைத் தேடிக் கண்டறிந்து வாசித்திருக்கலாம். மாறாக.....
“ஒரு மதத்தைப் பற்றி அறிந்துகொள்ள[கிறித்தவராக இருந்துகொண்டே] அந்த மதம் சார்ந்த பக்தராக மாறியது நம்மை நகைக்கத் தூண்டுகிறது.
இவரின் செயல்பாடு சரியானதே என்றால்.....
கொலைகாரர்கள் பற்றி அத்துபடியாகத் தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவருக்குக் கொலை செய்த அனுபவம் தேவை என்றாகிறது.
ஆபாசப் படங்களில்[Porno] நடிப்பவர்களைப் பற்றி முழுமையாக அறிந்திட நினைத்தால், அம்மாதிரிப் படங்களில் நடித்திருப்பது அதற்கான தகுதி என்று கொள்ள நேரிடும்.
ஒரு பெண் ஆய்வாளர், விலைமகளிரின் அவல வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால், சிறிது காலமேனும் ஒரு விலைமகளாக வாழ்ந்திருத்தல் அவசியமாகிறது.
பாதிரியாரின் பித்துக்குளித்தனமான செயல்பாடு நம்மைப் போன்றோருக்கு வினோதமானதாகத் தோன்றுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட கிறித்தவ நிர்வாகச் சபை இதை அவமானமாகக் கருதியிருக்கிறது; திருப்பலி உள்ளிட்ட சடங்குகளை இவர் செய்யத் தடை விதித்துள்ளது.
இவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் திரும்பப் பெற்றுள்ளது.
எது எப்படியோ,
“விதம் விதமான மதவாதியாக மட்டுமல்ல, பரிசுத்த நாத்திகனாகவும் நான் வாழ்ந்துகாட்டுவேன்” என்று பாதிரியார் பின்னர் அறிவிப்பார் என்பது அடியேனின் அசைக்க இயலாத நம்பிக்கை!
ஹி... ஹி... ஹி!!!