அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 16 செப்டம்பர், 2023

பாதிரியார்கள் பொய் சொல்வார்களா?!

20.04.2023இல் B.B.C.இல் வெளியான ஒரு பேட்டிக் கட்டுரையை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்டது இந்தப் பதிவு.

மனித உடல்களை இருப்பிடமாக்கி, அவர்களை ஆட்டிப்படைத்த 1,60,000க்கும் மேற்பட்ட பேய்களை விரட்டியடித்த தம் அனுபவங்களை இதில் பகிர்ந்துகொண்டுள்ளார் ஒரு கிறித்தவப் பாதிரியார்.

பேட்டியை வாசிக்கும்போது இடையிடையே எனக்குள் எழுந்த கேள்விகளை உங்களின் பரிசீலனைக்காக உரிய இடங்களில் பதிவு செய்துள்ளேன்[முகவரி கீழே உள்ளது. மிக விரிவான அந்தப் பேட்டியை நீங்களும் வாசித்தால் நான் எழுப்பும் வினாக்கள் அர்த்தமுள்ளவைதானா என்பது புரியும்].

அந்தக் கிறித்தவப் பாதிரியின் பெயர் ‘அமோர்த்’; ஏறக்குறைய 1,60,000க்கும் மேற்பட்ட பேயோட்டுதல்களை நடத்திச் ‘சாதனை’ புரிந்தவர்;  கத்தோலிக்க மதத்தில் பேயோட்டுவதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய 21 விதிகளை மனப்பாடம் செய்தவர்; பேய்களை விரட்டும் நடைமுறை குறித்துப் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நன்கு படித்துத் தேர்ந்தவர்.

பேய்களை விரட்டியடிக்கும் அளவுக்கு மேற்குறிப்பிட்ட தகுதிகளைப் பெற்றிருக்கும் இவர், பேயின் பாலினம், வயது, கல்வியறிவு, சார்ந்திருந்த மதம் ஆகியவை பற்றிய குறிப்புகளைத் தந்தாரில்லை. ஆனாலும், தான் விரட்டியடித்தவற்றில் ஒரு நாத்திகப் பேய்கூட இல்லை என்கிறார்[இறந்த பிறகு நாத்திகர்கள் பேயாக அலைவதில்லை என்பது இதிலிருந்து புரிகிறது].

ஆண் பேயோ பெண் பேயோ, ஆணையோ பெண்ணையோ தனக்கான இருப்பிடம் ஆக்கிக்கொள்வதால் பெறும் பயன் என்ன என்பது பற்றியும் பாதிரியார் விளக்கம் தரவில்லை.

ஒரு நபர் தனக்குத் தெரியாத மொழிகளில் பேசுவது, தான் அறிந்திருக்க முடியாத நிகழ்வுகள் பற்றியும் நபர்கள் குறித்தும் பேசுவது, தனக்குள்ள இயல்பான அளவைத் தாண்டி உடல் வலிமையை வெளிப்படுத்துவது ஆகியவை கத்தோலிக்கக் கோட்பாட்டின்படி, பேய் பிடித்துள்ளதன் முக்கிய அறிகுறிகள் என்கிறார் இவர்.

ஒருவர் தன் சக்திக்கு மீறிய அசாதாரணமான செயல்களை, எதிர்பாராத சூழல்களில் பெறும் உத்வேகத்தால் செய்துமுடிக்க முடியும். இதற்குப் பேய் ஆவியெல்லாம் தேவையில்லை என்பது பாதிரியார் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை.

அவர் அறிந்திராத மொழியைப் பேசியதாகச் சொல்கிறார். பேசப்பட்டது ஏதோ சில வார்த்தைகள்[ஏதோவொரு சூழலில் சில வார்த்தைகள் மட்டும் தெரிந்திருக்கலாம்] மட்டுமா, முழுமையான வாக்கியங்களா? பதிவு செய்திருந்தால் அப்படியொரு மொழி வழக்கில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக ஆகும்.

செய்தாரா பாதிரியார்?

"உங்கள் பெயர் என்ன? நீங்கள் தனியாக இருக்கிறீர்களா? நீங்கள் எப்போது புறப்படுவீர்களா?” என்றெல்லாம் பேய்களிடம் விவரம் கேட்பாராம் இவர்.

இதைச் செய்கிற இவர், “உங்களின் உடலை விட்டுப் பிரிந்துவிட்ட[செத்துப்போதல்] நிலையில் நீங்கள் இயங்குவது எப்படி? உருவமே இல்லாமல், ஒரு மனித உடலில் உங்களை இணைத்துக்கொள்வது எப்படிச் சாத்தியமாயிற்று?” என்றெல்லாம் விளக்கங்கள் கேட்டு, பேய்கள் பற்றியப் புரிதலுக்கு வழிகோலியிருக்கலாம்.

செய்தாரில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, பேயோட்டுபவர் பேய் பிடித்தவர்களை இயேசுவின் பெயரால் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்கிறார்.

இவரைப் போன்றவர்களின் பெயர்களால் உத்தரவிடுவதற்கு இடம் தராமல், ஏசுவே நிரந்தர உத்தரவு ஒன்றைப் பேய்களுக்கு இனி பிறப்பிப்பார் என்றுகூடச் சொல்வாரோ?

முதன்முதலில் ஒரு சிறுவனுக்குப் பேயோட்டியதாகவும் அந்த அனுபவம் மிகவும் பயங்கரமானது என்றும் பாதிரியார் அமோர்த் குறிப்பிடுகிறார்.

"சிறுவனின் கண்கள் உள்ளே உருண்டன. அவனது தலை நாற்காலியின் பின்புறத்துக்குச் சென்றது. அறையில் வெப்பநிலை பயங்கரமாகக் குறைந்துவிட்டது. அவனைப் பிடித்திருந்த பேய் வெளியேறத் தொடங்கியது" என்று அவர் நினைவுகூர்கிறார்.

பேய் வெளியேறியதை இவர் பார்த்தாரா?  “வம்புதும்பு ஏதும் பண்ணாமல் அவன் உடலில் அது இருந்துகொண்டே இருப்பதும் சாத்தியம்தானே?” என்று கேட்கத் தோன்றுகிறது நமக்கு.

நம் ஊர்களில், பேய் பிடித்தவரின்[பெரும்பாலும் பெண்கள்] தலை முடியைப் பிடுங்கி, அதைத் தொலைவில் உள்ளதொரு மரத்தில் ஆணியடிப்பதன் மூலம் பேயைச்  செயலற்றதாக்குவார்கள்.

பாதிரியார்கள் என்ன செய்வார்களோ?

பேயை ஓட்டுவதற்கு 30 ஆண்டுகள் எடுத்துகொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதேபோல், 10 நிமிடத்தில் பேயை ஓட்டியதாகவும் கூறியிருக்கிறார்.

இதன் மூலம், மனிதரைப் பிடிக்கும் பேய்களில், படு கில்லாடிகள் உண்டு; அப்பாவிகளும் உண்டு என்கிறாரா?

தன் மீது எத்தனை முறை எச்சில் துப்பப்பட்டுள்ளது என்பதை எண்ண மறந்துவிட்டதாகக் கூறும் பாதிரியார், “ஒருமுறை கிசெல்லா என்ற இத்தாலியக் கன்னியாஸ்திரிக்குப் பேயோட்ட முயன்றபோது, அவர் என் மீது ஆணிகள், கத்திரிக்கோல், போன்ற உலோகப் பொருட்களைத் துப்பினார்” என்றும் கூறியிருக்கிறார்.

ஏசுபிரானை மனதில் இருத்தித்தான் இப்படியெல்லாம் பேசினாரா பாதிரியார் என்னும் சந்தேகம் நமக்குள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

”பாதிரியாராக இருந்தாலும் சரி , கன்னியாஸ்திரியாக இருந்தாலும் சரி, அவர்களும் பேய் பிடித்தலில் இருந்து தப்புவதில்லை” என்றும் பேட்டியில் சொல்லியிருக்கிறார் இவர். அடுத்து, ஏசுநாதரையே பேய் பிடிப்பது நடக்கக்கூடும் என்றுகூடச் சொல்வாரோ?!

கடவுளின் ‘இருப்பு’ குறித்தே கேள்விகள் கேட்கப்படும் இந்த அறிவியல் யுகத்தில், பேய்கள் பற்றிப் பாதிரியார் நிறையவே கதைகள் சொல்லியிருப்பது நம்மைப் பெரு வியப்பில் ஆழ்த்துகிறது!

https://www.bbc.com/tamil/articles/cq5ej2181e5o