பேரழிவுக்குத் தள்ளப்பட்ட லிபியாவில் அழுகுரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட சுனாமியைப் போன்ற பயங்கர வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18,000 முதல் 20,000 பேர்வரை இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடலில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டவாறு உள்ளன. இந்தப் பெரும் வெள்ளத்தால் காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’.
-இது, நேற்றைய[14.09.2023]ச் செய்தி. https://www.bbc.com/tamil/articles/cv28zjpxeydo
கீழ்வருவது, சில நாட்களுக்கு முன்பான நிலநடுக்கத்தால் மொராக்கோவில் நிகழ்ந்த பேரழிவு பற்றியச் செய்தி:
‘மொரோக்கோவில் மிக மோசமான பூகம்பம் ஏற்பட்ட நிலையில், அதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2800ஐக் கடந்துள்ளது. அங்கே மீட்புப் பணிகள் 3 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து நடந்து வருகின்றன.’ https://tamil.oneindia.com/news/international/as-rescue-operation-underway-morocco-earthquake-death-toll-passes-2800-537855.html Tuesday, September 12, 2023, 12:15 [IST]
இவை இப்போதைய நிகழ்வுகள்.
மனித இன வரலாற்றைப் புரட்டினால், நிலநடுக்கம், சுனாமி, இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழை போன்றவற்றால் உயிரிழப்புகளும், உடல்/உடைமை ஆகியற்றிற்கான சேதங்களும் சொல்லி மாளாது.
இம்மாதிரியான இயற்கைப் பேரிடர்கள் என்பது மனித ஆற்றலால் தடுத்திட இயலாத கொடூர நிகழ்வுகளாகும்.
உலகின் கோடானுகோடிப் பக்தர்களே[பல மதம் சார்ந்தவர்கள்],
அவனின்றி அணுவும் அசையாது என்கிறீர்கள். அது உண்மையாயின், இந்தச் சுனாமி, நிலநடுக்கம், மழைப்பொழிவு என்று எல்லாப் பேரழிவுகளும் நிகழ்வது கடவுளால்தானே?
நீங்கள் சிந்திக்கத் தெரிந்த காலம் முதல் உங்களின் அபிமானக் கடவுளின் கருணையை எதிர்பார்த்துத் தொழுதுகொண்டுதான் இருக்கிறீர்கள். எத்தனைக் கொடூரப் பேரிடர்களை அவர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்?
அவனின் இந்த அலட்சியப் போக்கு குறித்துச் சில வினாடிகளேனும் சிந்தித்திருக்கிறீர்களா?
இல்லை; இல்லவே இல்லை.
ஆக, மனம் கலங்க, கசிந்து கசிந்து நெஞ்சம் உருக அவனைத் துதி பாடியும் அவன் கருணை காட்டவில்லை என்பது புரிகிறது.
இனி, ஒரே ஒரு முறையேனும், “கடவுளே, உன் மனம் என்ன கல்லா இரும்பா? நாங்கள் வேறு வேறு மதம் சார்ந்தவர்களாயினும், உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடு போட்டுக் கொண்டாடத் தவறியதே இல்லை. நீயோ பாராமுகத்தனாகவே இருந்திருக்கிறாய்.
உன்னுடைய அலட்சியப் போக்கைக் கண்டித்து, உன்னை நினைப்பதையோ, கோயில்களுக்குச் சென்று வழிபாடுவதையோ செய்யமாட்டோம்.”
மேற்கண்டவாறு எச்சரிக்கை செய்து, ஒரே ஒரு நாள் மட்டுமேனும் போராட்டம் நடத்துங்கள், கடவுள் கண் திறக்கிறாரா என்று பார்ப்போம்!