ஆங்கிலத்தில் உள்ள அரசியல் சட்டப் பிரிவு[?]களுக்கு ஆங்கிலப் பெயர்களை நீக்கிவிட்டு இந்திப் பெயர்களைச் சூட்டுகிறீர்கள்.
நாடாளுமன்றத்திலும் மற்ற மொழிக்காரர்களுக்குப் புரியக்கூடாது, அவர்களின் குறுக்கீடும் இருக்கக் கூடாது என்பதற்காக இந்தியிலேயே பேசுகிறீர்கள்.
நடுவணரசின் நிறுவனங்கள் அத்தனையிலும் இந்தி திணிக்கப்பட்டுவிட்டது.
மேற்கண்ட நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பிலும் அவர்களுக்கே முன்னுரிமை.
ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியை ஒரு பயன்பாட்டு மொழியாக்க அயராது பாடுபடுகிறீர்கள்.
இந்தியாவின் இணைப்பு மொழி, பிணைப்பு மொழி, அணைப்பு மொழி என்று எல்லாமே இந்திதான் என்று மேடைதோறும் வாய் வலிக்கப் பேசுகிறீர்கள். இந்திய அரசின் வருமானத்தில் பெரும் தொகையை இந்தித் திணிப்புக்காகச் செலவிடுகிறீர்கள்.
இன்னும் எதற்கு, இந்தியை இந்தியர்கள் அனைவரும் ஏற்க வேண்டும் என்று வாய் வலிக்கப் பேசுகிறீர்கள்? இந்தி தெரியாத இந்தியனே இருக்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இந்தியாவில்[பாரத்] 35% இந்தி பேசுபவர்கள்[எழுத்து வடிவம் பெறாத மொழிகள் எல்லாம் இந்தி ஆக்கப்பட்டன] என்பதால், ஏற்கனவே இரண்டு தடவை ஆட்சியைக் கைப்பற்றிய நீங்கள், வரவிருக்கும் தேர்தலிலும் இந்திக்காரர்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் குவித்து ஆட்சியைக் கைப்பற்றுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த வெற்றி தரும் போதைதான், உங்களின் தாய்மொழி குஜராத்தியாக இருந்தாலும் அதை மறந்து இந்தியைக் கொண்டாடச் செய்திருக்கிறது.
65% பிற மொழி பேசுவோர் விழிப்புணர்வு பெற்று, ஒருங்கிணைந்து தேர்தலில் உங்களை எதிர்கொண்டால் ஒழிய[நடக்கப்போவதில்லை] உங்கள் காட்டில் அடைமழை தொடரும் என்பதிலும் சந்தேகம் இல்லை.