“நாம் உணவு உண்பது ஏன்?” -“உயிர் வாழ்வதற்கு” என்பது சரியான பதில்.
“உறங்குவது ஏன்?” பதில்: “உடம்பு புத்துணர்ச்சி பெறுவதற்கு.”
“கடவுளை வணங்குவது ஏன்?”
“துன்பங்கள் தீர்வதற்கு, ஆசைகள் நிறைவேறுவதற்கு என்றிப்படிப் பல காரணங்களுக்காக” என்கிறார்கள் பக்திமான்கள்.
“ஆறு காலப் பூஜைகள், அபிஷேகங்கள், கும்பாபிஷேகங்கள், சாமி ஊர்வலங்கள், திருவிழாக்கள்னு கொண்டாடுகிறீர்களே, அதெல்லாம் எதற்கு?”
“கும்பிடுற சாமிகளைக் குஷிப்படுத்த.”
“மத்த சாமிகளை எதுக்குக் கும்பிடுறோமோ அதே காரணம்தான் இதுக்கும். துன்பங்கள் நீங்கி இன்பமாக வாழ்வதற்குத்தான்.”
“ரொம்பச் சந்தோசம். கும்பிடுங்க; கும்பிடாதவங்களுக்குத் தொல்லை தராம விழாக்கள் எடுத்துச் சாமிகளைக் குஷிப்படுத்துங்க. தடுப்பாரில்லை; உங்களுக்குத் தொல்லை கொடுப்பாரும் இல்லை. கடைசியாக ஒரு கேள்வி.”
“மத்த சாமிகளையெல்லாம் கும்பிட மட்டும் செய்யுறீங்க. ‘மனுசன் பாதி. மிருகம் பாதி’யாகக் காட்சிதரும் இந்தப் பிள்ளையார்ங்கிற சாமியைக் கும்பிடுறதோடு, மண்ணில் சிலைகள் செய்து, ஆடை அணிவித்து, பூ மாலை போட்டு, அலங்காரம் பண்ணி, ஆற்று நீரிலோ கடல் நீரிலோ கரைக்கிறீங்களே, ஏன்?”
காரணம்?
இந்தக் கேள்விக்கு ஓரளவேனும் பொருந்துகிற வகையில் காரணம் சொன்னவர் எவரும் இல்லை; சொல்லப்படும் அத்தனைக் காரணங்களும் படு சொத்தை.
‘நீரில் கரையும் விநாயகர் அவர் தாய் தந்தை பார்வதி சிவனிடம் சென்று சேர்கிறார்’ என்பது ஒரு காரணம்.
நமக்குள் எழும் ஐயம்.....
நீரில் சிலையைக் கரைப்பதற்கு முன்பு இந்தப் பிள்ளையார் எங்கே இருந்தார்? அம்மையும் அப்பனும் கைலாயத்தில் என்றால், இவர் எந்த லாயத்தில் இருந்தார்?
களிமண்ணில் சிலை செய்து நீரில் கரைக்காமல், மரத்தால் சிலை செய்து நெருப்பில் போட்டு எரித்தாலோ, பஞ்சில் சிலை சமைத்துக் காற்றில் பறக்கவிட்டாலோ பெற்றவர்களிடம் சென்றடையமாட்டாரா?
‘சிலைகள் வடிக்கப்படுவதும் பின் கரைக்க படுவதும் பிறப்பதும் இறப்பதுமான நிலையாமைத் தத்துவத்தை உணர்த்துகிறது’ -இது இன்னொரு காரணம்[தத்துப்பித்துவம்].
தோன்றிய அனைத்துப் பொருள்களும் உயிர்களும் அழிந்துகொண்டே இருப்பது நிலையாமைத் தத்துவத்தை உணர்த்தவில்லையா? இருக்கிற கொஞ்சம் அறிவைக் கரைப்பதற்காகவா இந்தத் தத்துவக்கதை?
‘ஒரு சமயம், பார்வதிதேவி கங்கையில் நீராடியபோது, தன் அழுக்கைத் திரட்டி பொம்மையாக்க, அது யானைத்தலையும் மனித உருவமும் உடையதாக அமைந்தது[விரிவாகச் சொல்லப்பட வேண்டிய கதை]. அதை அன்னை, கங்கையில் எறிய, பெரிய உருவத்துடன் விநாயகர் வெளிப்பட்டார்.
அப்போது, பார்வதிதேவியும் கங்கையும் அவரைப் பிள்ளையாக ஏந்திக் கொண்டனர். இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னை ஆனார்கள். இதனாலேயே சதுர்த்தி முடிந்ததும், பிள்ளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது’ -இது இன்னுமொரு கதை.
அழுகிய பிணங்கள் சுமந்து, முடை நாற்றம் வீசும் கங்கை ஒரு பெண் தெய்வமா? சிலையாக்கிக் கரைத்தால்தான் தன் பிள்ளையை[பிள்ளையார்] அவரால் கொஞ்ச முடியுமா?
‘ஆடிப்பெருக்கில் வெள்ளம் ஏற்படும். அப்போது ஆற்றில் உள்ள மணலை வெள்ளப்பெருக்கு அரித்துச் சென்றுவிடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்.
மணல் அடித்துச் செல்லப்படாமல் இருப்பதற்கு, களிமண்ணைக் கரைப்பதால், அது ஆற்று நீரை வெளியேறவிடாமல் தடுக்கிறது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவேதான், விநாயகருக்குச் சிலை வைத்து, அதைக் கரைக்கும் பழக்கம் வந்துள்ளது. ஈரமான களிமண்ணைக் கரைத்தால் பலன் கிடைக்காது என்பதால்தான், அதை மூன்று நாட்கள் வைத்து இறுகிப்போனதும் அதைக் கொண்டுபோய் ஆறுகளில் கரைக்கிறார்கள்’.
இது பக்திஜீவிகள் பலராலும் சொல்லப்பட்ட/படும் கதை.
ஆற்றுநீரைத் தடுத்து நிறுத்தப் பலதரப்பட்ட வசதிகள் இருப்பதைக்கூட மறந்து திரியும் இவர்கள் மனிதர்கள் அல்ல; செம்மறியாட்டு மந்தைகள்.
இப்படியான கதைகளைச் சொல்லும் இவர்கள், களிமண் பிள்ளையாரைக் கடலிலும் ஆறுகளிலும் கரைப்பதால் நிகழும் கேடுகள் பற்றிச் சிந்திப்பதே இல்லை.
இதற்கு ஆதாரமாக, இன்று[25.09.2023] காலை[08.30] ‘சன்’ தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்ட ஒரு செய்தி:
//சென்னை, மெரினா கடற்கரையில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதால், கடல் நீர் கரும்பச்சையாக மாறியது. ஏராளமான மரக்கட்டைகளும். பிய்ந்த துணிகளும், உதிர்ந்த பூ மாலைகளும் மிதக்கும் நிலையில் கடற்கரையெங்கும் துர்நாற்றம் வீசுகிறது.
இவற்றைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சிப் பணியாளர்கள் மிகுந்த மனச் சோர்வுக்கும் உடல் சோர்வுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.//
எந்தவொரு அறிவியல் அடிப்படையிலான காரணம் பற்றியும் சிந்திக்காமல், சிலைகளை நீர்நிலைகளில் கரைத்துச் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இம்மாதிரியான மூடநம்பிக்கைகளை வளர்ப்பதன் மூலம் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றியவர்களின் முழு ஆதரவும் இவர்களுக்கு இருப்பதால், இவர்கள் அடிக்கும் கொட்டம் கொஞ்சநஞ்சமல்ல.
போற்றி போற்றி! பிள்ளையார் போற்றி!!
அழுக்கில் அவதரித்து, ஆற்றுநீரையும் கடல் நீரையும் அழுக்காக்குவதற்கு ஒரு கடவுளா?
அடக் கடவுளே!!!
http://blog.raaga.com/2020/08/vinayagar-chathurthi-kadhaigal.html
https://manithan.com/article/ganesha-sathurthi-in-water-dissolve-1631250406