பக்கங்கள்

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

உறங்கும் ‘விக்ரம் லேண்டர்’, ‘பிரக்யான் ரோவர்’... விழிப்பூட்ட.....

 //நிலவில் தூக்க நிலையில் உள்ள ‘சந்திரயான் 3 விக்ரம் லேண்டர்’, ‘பிரக்யான் ரோவர்’ ஆகிய இரண்டையும் விழிக்கச் செய்ய இஸ்ரோ தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது// என்பது இன்றளவில் அறியப்பட்ட தகவல். 

இதுவரை, இது தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. 


கடந்த வியாழக்கிழமை அங்கே சூரியன் உதித்தது. அக்டோபர் 6ஆம் தேதிவரை நிலவில் பகல் இருக்கும் என்பதால், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


கருவிகள் வேலை செய்வதற்கு உகந்த சூரிய வெளிச்சம் இருக்க வேண்டும். இதற்கு, சூரியக் கோணம் 6° முதல் 9° வரை இருப்பது அவசியம்.


இப்படி இருந்தால் விழிப்பூட்டும் முயற்சியைத் தொடர்வார்கள் நம் விஞ்ஞானிகள்.


இது நிகழாவிட்டால், 15 நாட்கள் கழித்து மீண்டும் சூரியன் உதிக்கும்வரை காத்திருந்து கருவிகளுக்கு விழிப்பூட்ட ஆவன செய்வார்கள்.


முயற்சியில் வென்றால், 15 நாட்களுக்குப் பின் உறக்க நிலைக்குச் செல்வதும், அதன்பின் 15 நாட்கள் கழித்து விழிப்பதும் தொடரும்.


தோல்வியே தொடருமேயானால்,  


அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட மேற்கண்டவை போன்ற கருவிகள், உறக்கத்தில் ஆழ்ந்து, வெயில் வந்ததும் விழிப்பு பெற்றது உண்டா? “ஆம்” எனில் அது எப்படி நிகழ்ந்தது? என்று அவற்றிடம் விசாரிக்கலாம்.


ஆனால், அவற்றில் எந்தவொரு நாடும் தாங்கள் கண்டறிந்த உண்மையை நம்முடன் பகிரமாட்டா என்பது உறுதி.


இந்நிலையில்…..


‘சந்திராயன் 3’ஐ நிலவுக்கு அனுப்புவதற்கு முன், நம் விஞ்ஞானிகள் அதன் மாதிரியை[பொம்மை]த் திருப்பதி ஏழுமலையானின் பார்வைக்கு வைத்து வழிபட்டது நினைவுக்கு வருகிறது.


ஏழுமலையானின் அருட்பார்வை ‘சந்திராயன் 3’ பொம்மை மீது பட்டதால்தான் அது வெற்றிகரமாகத் தனக்கு இடப்பட்ட பணிகளைச் செய்து முடித்தது[பணி முடிந்த பின்னரே உறக்கத்தில் ஆழ்ந்தது] என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.


நிலவில் தூக்க நிலையில் உள்ள ‘விக்ரம் லேண்டர்’, ‘பிரக்யான் ரோவர்’ ஆகியவற்றை எழுப்பிச் செயல்பட வைப்பதற்கும், அவற்றின் பொம்மைகளுடன் ஏழுமலையானைத் தரிசித்துக் கோரிக்கை வைப்பதே ஆகச் சிறந்த வழியாகும்.


எனவே,


நம் விஞ்ஞானிகள், மேற்கண்ட கருவிகளுக்கான பொம்மைகளுடன் திருப்பதி சென்று அவரை வழிபடுதல் வேண்டும் என்பது, ஏழுமலையானின் பக்தர்கள் மட்டுமல்லாமல், நம்மைப் போன்ற இரண்டுங்கெட்டான்களின்[கடவுளை நம்புவதும் நம்பாததுமான குழப்ப நிலையாளர்] எதிர்பார்ப்பும்கூட!


                                    *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/chennai/will-chandrayaan-3-vikram-lander-and-pragyan-rover-wake-up-in-moon-isro-tries-over-and-over-again-541763.html?story=3