வெள்ளி, 29 செப்டம்பர், 2023

காசு[பணம்] கொடுத்தால் காவிரி நீர் கிடைக்குமா?

காவிரி நீரைப் பகிர்வது என்பது தமிழ்நாட்டுக்கும் கர்னாடகத்துக்குமான நீண்ட நெடுங்காலப் பிரச்சினை.

“எங்கள் நிலப்பகுதியில் உற்பத்தியாகும் காவிரி ஆற்று நீரை எத்தனை அணைகள் கட்டியும் தேக்குவோம்; எங்களின் தேவைக்குப் பயன்படுத்துவோம். மிஞ்சுவதைத்தான் தமிழ்நாட்டுக்குத் தருவோம்” என்று வாதிடுவது கர்னாடகத்தின் வழக்கமாக உள்ளது.

“இந்தியாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் நாட்டின் பொதுச் சொத்து. உரிய முறையில், தத்தம் தேவைக்கேற்ப இருப்பில் உள்ள நீரை மாநிலங்கள் பகிரலாம் என்பது அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள விதிகளில் ஒன்று. எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி, தமிழ்நாட்டிற்குரிய நீரைத் தருதல் கர்னாடகாவின் கடமை” என்று சொல்லி, தண்ணீருக்காகத் தமிழர்கள் எத்தனைக் கண்ணீர் மழை பொழிந்தாலும் கர்னாடகா செவி சாய்க்காது.

ஒருவேளை, கர்னாடக அரசு சிறிதே கருணை காட்டினாலும், காவிரி நீர் வழங்குவதை எதிர்த்து அங்குள்ள அரசியல்வாதிகளும் விவசாயிகளும் பெரும் போராட்டம் நடத்துவார்கள்[நடத்துகிறார்கள்].

நீரைப் பகிர்வதற்கென்று அமைக்கப்பட்டுள்ள ஆணையமோ, மேல் ஆணையமோ, மேல் மேல் ஆணையங்களோ உத்தரவிட்டாலும் அவர்கள் அதை அலட்சியப்படுத்துவார்கள்.

அண்டை மாநிலங்களுக்கிடையே பிரச்சினை என்றால், அதைத் தீர்த்து வைக்கும்[பேச்சுவார்த்தை, அல்லது சட்ட நடவடிக்கைகள் மூலம்] பொறுப்பும் அதிகாரமும் ஒன்றிய அரசுக்கு இருப்பதால், அது தலையிட்டு, தமிழ்நாட்டுக்குரிய பங்கைச் செலுத்த வைக்கலாம்.

ஆனால்.....

நடுவணரசுக்கு, இந்தியாவை ராமராஜ்ஜியம் ஆக்குவது, இந்தியைத் தேசிய மொழி ஆக்குவது, மாநிலங்களுக்கு உள்ள சிறு சிறு அதிகாரங்களைச் சிறுகச் சிறுகப் பறிப்பது என்றிப்படி ஏராளக் கடமைகள் இருப்பதாலும், ஆணையம் பிறப்பித்துள்ள ஆணைகளைத் தன் அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றினால், தேர்தல்களில் கன்னடர்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதாலும், இது விசயத்தில் அது தொடர்ந்து மௌனம் சாதிக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

ஆக, கர்னாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சாத்தியமே இல்லை என்னும் நிலையில், அதைப் பெறுவதற்கான மாற்று வழிகள் பற்றிச் சிந்திப்பதே அறிவுடைமை ஆகும்.

மாற்று வழிகளில் சில:

*பண்டமாற்று: கர்னாடகத்தில் பற்றாக்குறையாக உள்ள ஏதேனும் ஒரு பொருளை[எ-டு: அரிசி, அல்லது மின்சாரம்]க் கொடுத்து[பண்டமாற்று] அவர்கள் பரிதாபப்பட்டுக் கொடுக்கும் நீரைப் பெறலாம்.

*“உங்களுடைய பண்டம் எங்களுக்குத் தேவை இல்லை. தேவைகள் அனைத்திலும் தன்னிறைவு பெற்றது எங்கள் மாநிலம்” என்று அவர்கள் சொன்னால், “எங்களின் கண்ணீரைக் காணிக்கை ஆக்குவதோடு, கட்டுக்கட்டாகப் பணமும் கொடுக்கிறோம். மனம் இரங்கி எங்களுக்குக் காவிரி ஆற்றுத் தண்ணீர் கொடுங்கள்” என்று வேண்டுகோள் வைக்கலாம்.

*அதற்கும் அவர்கள் மசியவில்லை என்றால், மேற்கண்ட கோரிக்கைகளை அவர்கள் முன்[நடுவணரசிடம் அல்ல] வைத்து ஊர்தோறும் நம் விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம்.

*அதுவும் பலனளிக்காது என்றால், எல்லாம் வல்ல திருப்பதி ஏழுமலையான், ஐயப்பசாமி, பிள்ளையார், புவனேஷ்வரி&முகாம்பிகை[கன்னடரின் வழிபடு கடவுள்கள்] போன்ற சாமிகளிடம் மழை வேண்டி நேர்ந்துகொள்வது பயனளிப்பதாக அமையக்கூடும்.

*இவற்றைவிடவும் ஆகச் சிறந்த வழிகள் இருப்பின் பதிவர்கள் நம் அரசுக்குப் பரிந்துரைப்பது வரவேற்கத்தக்கது.

நன்றி!