வியாழன், 28 செப்டம்பர், 2023

“இந்தி எங்கே? எங்கே இந்தி?”... சினந்து சீறிய ‘இந்தி’யன் நிதீஷ்குமார்[பீகார் முதலமைச்சர்]!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாங்கா பகுதியில் ஒரு டிஜிட்டல் நூலகத்தைத் திறந்து வைத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அதன் பெயர்ப் பலகையில் இடம்பெற்றிருந்த வாசகத்தைக் கண்ணுற்றதும், கடும் சினத்துக்கு உள்ளானார்.

காரணம்.....

வாசகம் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்ததுதான்.


இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தில் எழுதி இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அழிக்க பார்க்கீறீர்களா? நாம் அனைவரும் இந்தியில் படித்தவர்கள். அதோடு இங்கு நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி அல்ல'' என்றெல்லாம் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்துச் சாடினார் என்பது செய்தி.


உடனடியாக அந்த ஆங்கிலத்திலான நூலகப் பெயர்ப் பலகை அகற்றப்பட்டதுடன், வாசகம் இந்தியில் எழுதப்பட்ட பலகை அங்கே வைக்கப்பட்டது[பிகாரி மொழிகள்(Bihari languages) என்பது இந்தியாவிலுள்ள பீகாரில் பேசப்படும் மொழிகளை குறிக்கும். இம்மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. இம்மொழிகள் முக்கியமாக இந்திய மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், நேபாளம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டவை. அவை எல்லாவற்றையும் இந்தி விழுங்கி ஏப்பம்போட்டுவிட்டது].


இங்கே தவறாமல் கவனிக்கத்தக்கது என்னவென்றால்.....


ஆங்கில எழுத்துப் பலகை அகற்றப்பட்டதுதான். 


அதை அகற்றாமலே இந்தியிலும் பலகை வைத்திருக்கலாம்தானே?


நிதிஷ் அதை அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்ல,  “இங்கு நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியல்ல” என்று சினம் கொண்டு சீறியிருப்பதுதான்.


“ஆங்கிலத்தால் நாம் பெற்ற பயன்கள் ஏராளம். அதன் அவசியம் இன்றளவும் தவிர்க்க இயலாதது. அதை ஒரு பயன்பாட்டு மொழியாகவோ, தொடர்பு மொழியாகவோ ஏற்பதால், மீண்டும் ஒரு முறை நாம் ஆங்கிலேயரின் அடிமைகளாக ஆகிவிடமாட்டோம்” என்பதைச் சிந்தித்து அறிகிற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத இந்த நிதிஷ் குமார் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.


நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால், அமையவுள்ள ஆட்சியில், இவரும்[அல்லது, இவரின் ஆட்கள்] முக்கியத்துவம் பெறுவார் என்பது உறுதி.


இது நிகழ்ந்தால், இவரை ஒத்த இந்தி வெறியர்கள், ஆங்கிலப் பயன்பாட்டை முற்றிலுமாய்த் தகர்த்து, இந்தியை இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக்குவதில் முனைப்புக் காட்டுவார்கள் என்பது உறுதி.


இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடும் நிலை நீடிக்கும்.


மேலும்.....


நிதிஷ் போன்றவர்களுக்கு ஆங்கிலம் அயலவர் மொழி என்றால், நம்மைப் பொருத்தவரை இந்தி அயலவர் மொழிதான்.


அதை ஏற்றால், அவர்களுக்கு நாம் அடிமையாவோம் என்பதால், தொடர்ந்து இந்தியை எதிர்த்துப் போராடுவது தவிர்க்க இயலாதது.


தமிழ்நாட்டில் இந்தி எழுத்துகள் இடம்பெற்றுள்ள, நடுவணரசு நிறுவனங்களுக்கான அத்தனைப் பெயர்ப் பலகைகளும் உடனடியாக அகற்றப்பட்டு, தமிழில் எழுதப்பட்ட[ஆங்கிலத்திற்கும் தென்னிந்திய மொழிகளுக்கும் உரிய இடம் தருவது நம் விருப்பம்] பலகைகளை அங்கெல்லாம் இடம்பெறச் செய்தல் உடனடித் தேவை ஆகும்.


தமிழ்நாடு அரசுடன் தமிழ் மக்களும் இணைந்து போராடினால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.


https://tamil.oneindia.com/news/india/bihar-cm-nitish-kumar-angry-because-name-board-in-english-instead-of-hindi-in-digital-library-at-ba-542887.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom&story=2