துன்பத்திற்குள்ளாகி, அதைத் தீர்க்கும் வழி அறியாதபோதும், துன்பங்களைத் தோற்றுவிக்கும் நிகழ்வுகளுக்கான காரணங்கள் புரியாதபோதும் மனிதர்கள், விதியை... தலை விதியைத் துணைக்கு அழைக்கிறார்கள்.
கொஞ்சம் சிந்தித்தாலே, தமக்கு நேரும் பெரும்பாலான துன்பங்களுக்குத் தாமே காரணம் என்பது புரியும். ஆனால், பிறர் மீதோ சமுதாயத்தின் மீதோ குற்றம் சுமத்திவிட்டுத் தம்மை நிரபராதிகளாகக் காட்டிக் கொள்வதிலேயே மிகப் பலர் முனைப்புக் காட்டுகிறார்கள்.
நடந்து செல்கிற ஒருவனை வாகன ஓட்டி இடித்துத் தள்ளுகிறான். நடந்தவிபத்திற்கு நடந்து சென்றவனும் காரணமாக இருக்கலாம். ஆனாலும், அவன் தன் தவற்றை மறைத்து, வாகன ஓட்டிமீது குற்றம் சாட்டுவதுதான் நடைமுறையாக உள்ளது.
காரியம் சாதிப்பதற்காக ‘லஞ்சம்’ கொடுக்கிற ஒருவன், குற்றத்தில் தனக்குரிய பங்கை மறைத்து, சமுதாயத்தைச் சாடுகிறான்.
எனினும், எல்லா நேரங்களிலும், இப்படிப் பிறரையும் சமுதாயத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட முடியாது.
இடி மின்னலுடன் மழை பொழிகிறது.
தன் இருப்பிடத்திலிருந்து ஒருவன் வெளியே வருகிறான். சக்தி வாய்ந்த மின்னல் பளீரிட, அவன் பார்வை பறிபோகிறது.
பேய் மழையின் போது, மிதி வண்டியில் செல்கிற ஒருவன், வேரோடு சாய்ந்த ஒரு மரத்தடியில் சிக்கி உயிரிழக்கிறான்.
இம்மாதிரி அசம்பாவிதங்களின்போது, தனி மனிதரையோ, குழுவினரையோ, சமுதாயத்தையோ குற்றம் சொல்ல முடிவதில்லை[சிறிதும் எதிர்பாராத சம்பவங்களின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியாது; விழிப்புணர்வுடன் செயல்பட முடியாது: பகுத்தறிவை முழுமையாகப் பயன்படுத்த முடியாது என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் மீதும் குறை சொல்ல இயலாது].
இம்மாதிரியான சூழ்நிலையில்தான் ‘இல்லாத’ விதியை வம்புக்கிழுத்து, அதை அசம்பாவிதத்தின் ‘காரணக்கர்த்தா’ஆக்கிவிட்டார்கள் யாரோ சில புத்திசாலிகள்!
மின்னல் அடிக்கும்போது ஆறறிவுள்ள ஒரு மனிதன் தன் இருப்பிடத்திலிருந்து ஏன் வெளியே வரவேண்டும்? மின்னலால் ஏற்படும் அபாயத்தை அவன் அறியாதவனா?
அறிந்திருந்தும் அவன் தவறிழைத்துத் தன் பார்வையைப் பறிகொடுத்தான் என்றால், அதற்குக் காரணம் ‘விதி.... அவன் தலை விதி.... அவன் தலை எழுத்து’ என்றார்கள்.
பருவக் காலங்களில் மழை பெய்வதும், இடிப்பதும், மின்னுவதும் இயற்கை.
இடம் விட்டு இடம் பெயர்வது மனிதனுக்குள்ள செயல்பாடுகளில் ஒன்று.
அது இயற்கையாக நிகழ்வது. இது மனித மூளையால் செயல்படுத்தப்படுவது
மின்னலடித்ததும், ஒருவன் இருப்பிடத்திலிருந்து வெளியே வந்ததும் இரு வேறு நிகழ்ச்சிகள். இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தன. அவ்வளவுதான்.
இவ்விபத்து ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அதுதான் ‘விதி’ என்று சொல்வது அறிவீனம்.
பிரபஞ்ச வெளியில் உலா வரும் கணக்கிட இயலாத கோடானு கோடிக் கோள்களில் மழை பொழிதல் போன்ற இயற்கை நிகழ்வுளையும் உயிர்களின் இயக்கங்களையும் கணக்கிட்டுச் சொல்வது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. உண்மை இவ்வாறு இருக்கையில்.....
ஒரே நேரத்தில் இடம்பெற்ற இருவேறு நிகழ்வுகளால் நேர்ந்த ஒரு விபத்தை, அதில் பாதிக்கப் பட்டவனின் விதியால்.... தலைவிதியால்தான் நேர்ந்தது எனச் சொல்வது முட்டாள்தனம்.
அதை நம்புவதும் நம்பவைப்பதும் சமுதாயத்தைச் சீரழிக்கும் குற்றங்கள்.
மின்னலடித்தபோது ஒருவன் வெளியில் வந்ததோ, அல்லது, அவன் வெளியே வந்த அதே கணங்களில் மின்னல் பளிச்சிட்டதோ முழுக்க முழுக்கத் தற்செயல் நிகழ்ச்சிகள். இங்கே விதி எப்படி நுழைந்தது?
யார் நுழைத்தது?
கடவுளா?
ஒருவன் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக அவன் பார்வையைப் பறிப்பதற்குக் கடவுள் மின்னலைத் தோற்றுவித்தாரா?
ஒரு தனி மனிதனைத் தண்டிப்பதற்காக ஒரு மின்னலா? அல்லது, மின்னலடிக்கும் போது அவன் வெளியே வந்தது கடவுளின் செயலா?
சரியாக மரம் சாய்கிற நேரத்தில் மிதி வண்டிக்காரனை அங்கே கொண்டுசேர்த்ததும் அவர்தானா?
பிரபஞ்ச வெளியில் கோள்கள் ஒன்றோடொன்று மோதி வெடித்துச் சிதறுவது, எண்ணற்ற கடல் கொந்தளிப்புகளால் அவற்றில் இடம் பெற்ற பொருள்களும் உயிர்களும் தம்முள் மோதிக்கொள்வது, காற்று, நெருப்பு போன்றவற்றின் அசுரத்தனமான செயல்பாடுகளால் பொருள்களும் உயிர்களும் அலைக்கழிக்கப்பட்டுத் தம்முள் இடிபடுவது என்றிப்படி ‘வெளி’யில் இடம்பெறும் விபத்துகள் எண்ணில் அடங்காதவை.
இவை எல்லாமே கடவுளின் ஆணையால் நடை பெறுகின்றனவா?
இது இது இப்படி இப்படி நடக்க வேண்டும் என்று விபத்துக்கு உள்ளாகிறவன் தலையில் எழுதி அவனை மண்ணுலகுக்கு அனுப்பி வைக்கிறாரா கடவுள்?
கடவுளால் எழுதப்பட்டதுதான் தலை விதியா? தலை எழுத்தா?
ஒரு மரம் எப்போது எப்படி, எங்கே முளைக்க வேண்டும்? எவ்வளவு காலத்துக்கு, எவ்வாறெல்லாம் பராமரிக்கப்பட்டு வளர வேண்டும்; எம்முறையில் அழிய வேண்டும் என அந்த மரம் சம்பந்தப்பட்ட விதிமுறைகள் அந்த மரத்திலேயே எழுதி வைக்கப்படுகின்றனவா?
அத்தனை மரங்களுக்குமா? புல், பூண்டு, தூசு, தும்பு, அணு, அணுப்புள்ளி என்று எல்லாவற்றுக்குமா?
ஏதேனும் ஒரு விலங்கின் தலையில் உருக்கொண்டு, தோன்றி, வளர்ந்து, உதிர்கின்ற ‘மயிருக்கும்’கூட தலை எழுத்து உண்டா?
இவ்வாறாக எழுப்பப்படும் எண்ணற்ற கேள்விகளுக்கு எவரேனும் பதில்சொன்னதுண்டா? இல்லை.
அனுமானங்களைப் பதில் ஆக்குவதும், அவற்றை ‘உண்மை’ என நம்ப வைப்பதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.
எதுவும் புரியாத நிலையில், “புரியவில்லை” என்று ஒத்துக்கொள்வது பெருந்தன்மை.
வாழ்க்கையில் மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும், நோய், பகைமை, வறுமை, நிலையாமை போன்றவற்றால் விளையும் துன்பங்கள் அளவிடற்கரியவை.
அத்துன்பங்களைப் போக்கி, அமைதியாகவும், இன்பமாகவும் வாழ்வதற்கான வழி வகைகளைக் கண்டறிய ஆறறிவு பயன்பட வேண்டும்.
கடவுள், விதி, தலை எழுத்து என்று விதம் விதமான கற்பனைக் கதைகளைச் சொல்லி, பொய்களைப் பரப்பி இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை வீணடிப்பதற்கு அல்ல.
இது நம் மக்களுக்கான அறிவுறுத்தல் மட்டுமல்ல; கடவுளின் அவதாரம் என சொல்லித் திரியும் கயவர்களுக்கான எச்சரிக்கையும்கூட!