கட்டுமானப் பணிகளின்போது, பூமியைப் பெண் தெய்வமாக்கிப் பூஜை செய்தார்கள் நம் முன்னோர்கள். சிந்திக்கும் அறிவு போதிய வளர்ச்சி பெற்றிடாத காலம் அது. நெருப்புக் குழம்பும், நீரோட்டமும், பிறவும் உள்ளடங்கிய மண்ணாலான பெரியதொரு உருண்டை இது என்று மெய்ப்பிக்கப்பட்ட இந்த நூற்றாண்டில் இதற்குப் பூஜை செய்து பணியைத் தொடங்குவது முட்டாள்தனம்.
நம்மில் முட்டாள்களே பெரும்பலோர் என்பதால், மிகப் பெரும்பாலான கட்டுமானப் பணிகளைப் பூமி பூஜையுடன்தான் தொடங்குகிறார்கள்.
பகுத்தறிவாளர்களின் வழி வந்தவர்களாகக் கருதப்படும் திராவிடக் கட்சியினரும்[அதிமுக & திமுக] இதற்கு விதிவிலக்கல்ல என்பதை, அண்மை நிகழ்வொன்று[சாலைப் பணிக்குப் பூமி பூஜை] உறுதிப்படுத்துகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே திட்டப்பணிக்கு இருதரப்பாரும் பூமி பூஜை செய்திருக்கிறார்கள் என்பது.
தங்களுக்குள் ‘நம்பர் 1’ முட்டாள் யார் என்பதை அறியச் செய்வதற்கான போட்டியோ இது?!
இம்மாதிரியான, பகுத்தறிவை முடக்கும் ஒரு நிகழ்வு நம் அண்டை மாநிலமான ‘கர்னாடகா’விலும் நிகழ்ந்துள்ளது.
சாமிகளுக்குக் காணிக்கை செலுத்துவது வழக்கமான ஒன்றுதான். கர்னாடகா அரசு, காணிக்கை செலுத்தியதோடு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மாதாந்தர ஊக்கத்தொகை ரூ2000//[கடந்த தேர்தலில் காங்கிரசை வெற்றிபெறச் செய்ததற்கு] அளிப்பதற்கும் ஆணை பிறப்பித்துள்ளது என்பதே அது.
சாமுண்டி சாமி, மனிதர்களின் போலியான பக்தி, செய்யும் படுமூடத்தனமான சடங்குகள் போன்றவற்றால் சோர்வுக்கு உள்ளாகி, பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டுகிறாரோ? அம்மனை உற்சாகப்படுத்த இந்த ஊக்கத்தொகையோ?!
மற்றச் சாமிகளெல்லாம் கோபித்துக்கொள்ளுமே! அவைகளுக்கும் ஊக்கத் தொகை அளிக்குமா கர்னாடக அரசு?
உலகெங்கிலும் நடந்திராத அதிசய நிகழ்வு இது.
நிகழ்த்தியவர்[அமைச்சர் சிவக்குமாரின் தூண்டுதல்?] 100% தூய பகுத்தறிவாளர் என்று நம்பப்பட்ட கர்னாடகா முதல்வர் சித்தராமையா என்பது நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.