அழுக்கேறிய பரட்டைத் தலையும், நரைத்தத் தாடியும், அடர் கறுப்பு நிறத்தில் சட்டையும், இடுப்பில் தங்காமல் நழுவும் கால்சட்டையுமாய், வெறும் கால்களுடன் நாமக்கல் நகர வீதிகளில் இந்த அழுக்கு மனிதன் தள்ளாடி நடந்துபோவதைப் பலமுறை நான் பார்த்திருக்கிறேன்.
பூங்கா சாலையில், நாறும் சாக்கடைப் பலகை மீது இவன் சயனித்துக் கிடப்பதும் உண்டு, செத்துவிட்டானா செத்துக்கொண்டிருக்கிறானா என்பதைக் கணிப்பது சாத்தியமானதில்லை.
ஆனாலும்,
“நான் இன்னும் சாகவில்லை” என்று உறுதிப்படுத்தவோ என்னவோ, இயந்திர மனிதன் போல, சாலையில் இவன் மெல்ல நகர்ந்து செல்வதைக் காண முடிந்தது.
எதையேனும் தின்கிறானா, தின்றது செரிமானம் ஆன பின் கழிவை வெளியேற்றுகிறானா, அது எங்கே என்பன பற்றியெல்லாம் எவரும் அறிந்திருக்கவில்லை.
தெருநாய் போல் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் பேண்டு, சிறுநீர் பெய்து வருவோர் போவோரை முகம் சுழிக்க வைப்பதாக, புகார் எதுவும் நாமக்கல் நகராட்சியிடம் அளிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
கண்கொண்டு காணச் சகிக்காத அசிங்க மனிதனாகத்தான் இவன் இருந்துகொண்டிருக்கிறான்.
இவனைக் கண்டுகொள்வார் இல்லை; எவரும் இல்லை.
நெற்றியில் திருநீர்ப் பட்டை தீட்டியோ, வட்ட வடிவில் பொட்டு வைத்தோ, கழுத்தில் உருத்திராட்சக் கொட்டைமாலை அணிந்தோ இவன் காட்சியளித்திருந்தால், தீவிர இந்துமதவாதிகள் இவனைத் தத்தெடுத்திருக்கக்கூடும். அவ்வாறான சின்னம் எதையும் இவன் சுமந்திருக்கவில்லை.
தலையில் குல்லாயும், மழுங்கச் சிரைத்த மீசையும் வளர்ந்த தாடியுமாக இவன் இருந்திருந்தால், இஸ்லாம் மத அன்பர்கள் இவனைச் சுத்தப்படுத்திச் சோறூட்டிச் சுயநினைவூட்டி ஆதரித்திருப்பார்களோ? அப்படியான அடையாளங்களுடன் இவன் இல்லை. குறைந்தபட்சம் கணுக்கால் தெரியும் வகையில் ஒரு கைலியைக்கூட இவன் கட்டியிருக்கவில்லை.
இவன் கழுத்தில் சிறிய அளவிலேனும் சிலுவை தொங்கியிருந்தால் கிறிஸ்தவர்களின் கருணைக்கு ஆளாகியிருக்கலாம். அது இல்லாததால் இவனுக்காக ‘ஜெபிக்க’ இங்கே யாருமில்லை.
மதவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட இந்தப் பாவி மனிதனைக் கழுவிச் சுத்தப்படுத்தி, புத்தாடை அணிவித்து, மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்த்து, பழைய உருவில் புதிய மனிதனாக வாழவைத்திடப் போதுமான மனிதாபிமானிகளும்[நான் உட்பட] நாமக்கல் நகரத்தில் இல்லை என்பது உறுதியாகிறது.
எனவே, சகலமும் அறிந்த, பெரும் சக்தி வாய்ந்த கடவுள்/கடவுள்கள் மட்டுமே இதைச் செய்ய வல்லவர்கள் என்று தோன்றுகிறது.
இங்கே கடவுள்களுக்கு எப்போதும் பஞ்சம் நேர்ந்ததில்லை.
அவர்களில் ஒருவரையோ, பலரையோ நினைந்து, “இந்தப் பாவி மனிதனையும் இவனைப் போன்றவர்களையும்[உலக அளவில் எத்தனை எத்தனைப் பேரோ!] கண் திறந்து பார்த்துக் கருணை மழை பொழிவீர்” என்று வேண்டி, நாளும் வழிபடுவோம்[இது நோகாமல் பொருட்செலவும் இல்லாமல் செய்யும் பொதுத்தொண்டு. ஹி... ஹி... ஹி!!!]!
தொழுங்கள்! தொழுவோம்!!