பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 12 டிசம்பர், 2023

‘கடவுளை உணர்தல் கதை’... பழசும் புதுசும்!!!

கடவுளின் ‘இருப்பை’ உணரச் செய்யக் கற்பிக்கப்பட்ட ஒரு கதை ஆன்மிக உலகில் காலங்காலமாய்ப் பரப்புரை செய்யப்படுகிறது.

அதற்கு மாற்றாக, மாறுபட்ட ‘முடிவு’டன் புதிய கதை ஒன்றைக் கற்பனை செய்துள்ளேன்.

பழசின் இணைப்பாகப் புதுசும் இங்கு இடம்பெற்றுள்ளது.

இரண்டில் சிறந்தது எது என்று முடிவு செய்வது தங்களின் மனப் பக்குவத்தைப் பொருத்தது.

வாசியுங்கள்!

                     *   *   *   *   *

ரு நாத்திகன் கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு துறவியைச் சந்தித்தான்; “கடவுளை உம்மால் காட்டமுடியுமா?” என்றான்.

“முடியும்” என்ற துறவி, சற்றும் எதிர்பாராத வகையில் நாத்திகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

“ஐயோ அம்மா” என்று அலறினான் நாத்திகன்.

“ஏன் அலறினாய்?” என்றார் துறவி.

“வலித்தது” என்றான் நாத்திகன்.

“வலியா? அதை எனக்குக் காட்டு.” -துறவி.

வேதனையிலும் சிரித்த நாத்திகன், “வலியை எப்படிக் காட்ட முடியும்?” என்று கேட்டான்.

“காட்ட முடியாது. ஆனாலும், நீ வலியை உணர்ந்தாய் அல்லவா, அதுபோல், முயன்றால் கடவுள் இருப்பதை உணர முடியும்” என்றார் துறவி.

நாத்திகன் வாயடைத்து நின்றான்.

முடிந்த கதை தொடர்கிறது:

சிறிது நேரம் கழித்து.....

துறவியிடம், “உம்மால் கடவுளைக் காட்ட முடியுமா?” -மீண்டும் கேட்டான் நாத்திகன்.

“ஏற்கனவே சொன்னேனே, காட்டவெல்லாம் முடியாது” என்றார் துறவி.

அடுத்த வினாடியே துறவியின் கன்னத்தில் நாத்திகன் ஓங்கி அறைந்தான்.  

“ஐயோ கடவுளே!” என்று அலறினார் துறவி.

“ஏன் அலறினீர்?” -நாத்திகன்.

”வலித்தது.”

“அந்த வலியைக் காட்ட முடியுமா?”

“வலியைக் காட்ட முடியாது. உணரத்தான் முடியும்” -துறவியின் குரலில் கடுகடுப்பு.

“உணர்ந்தது எப்படி? நான் என் கையால் அடித்ததால்தான். ஆகவே, வலியைக் காட்ட முடியாது என்றாலும்,  ‘தொடுதல்’ என்னும் செயலால் உணர்த்த முடிகிறது. 

கொஞ்சம் விரிவாகச் சொன்னால், கண்களால் காண முடியாத ஒன்றை, ஏனைய நான்கு புலன்களில்[கேட்டல், சுவைத்தல், சுவாசித்தல், தொடுதல்] ஒன்றால் உணர்த்த முடியும். இவ்வாறு ஏதேனும் ஒரு புலனைப் பயன்படுத்திக் கடவுளை உணரச் செய்ய முடியுமா என்பதே கேள்வி. முடியாது என்பதே அதற்கான பதில். அனுமானிக்கலாமே என்றால், அது 100% நம்பத்தக்கதல்ல.” -சொல்லி முடித்தான் நாத்திகன்.

துறவி வாயடைத்து நின்றார்!

                                     *   *   *   *   *
***அனுமானம்: அறிந்த ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அறியாத ஒன்றை ஊகித்து அறிவதாகும். நிலம் நனைந்திருப்பதை மாத்திரம் பார்த்துவிட்டு மழை பெய்திருக்க வேண்டும் என ஊகிப்பது போல’ -விக்கிப்பீடியா.