உயிரினங்களில் சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே என்பது யாவரும் அறிந்ததே.
சிந்திக்கும் அறிவு வாய்த்ததால், தனக்குள்ள அறிவைவிடவும் மேலான அறிவு படைத்த ஏதோவொரு சக்தி இருப்பதாக எண்ணினான் அவன்; அந்தச் சக்தியைக் கடவுளாக உருவகித்தான்; அவரை வணங்கினால் துன்பங்களிலிருந்து விடுபட்டு இன்பமாக வாழலாம் என்று நம்பினான்.
இந்த நம்பிக்கையால் அவன் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்தனவோ அல்லவோ, பல மதங்கள் தோன்றின; காணும் இடமெல்லாம் கோயில்கள் முளைத்தன.
விழாக்கள் எடுத்து அவரைக் கொண்டாடினான்; துன்பங்கள் தீர்ந்தனவோ அல்லவோ, அவை நீங்குவது தற்செயலான நிகழ்வாக இருப்பினும் கடவுளின் அருளே அதற்குக் காரணம் என்று நம்பினான்.
இந்த நம்பிக்கைதான் உலகெங்கும் பக்தர்களின் எண்ணிக்கை புற்றீசலாய்ப் பெருகிக்கொண்டிருக்கக் காரணம் ஆகும்.
மனிதர்கள் கடவுளை நம்பும் அளவுக்குத் தமக்கு வாய்த்திருக்கும் சிந்திக்கும்[பகுத்தறிவு] அறிவை நம்புவதில்லை.
காரணம், கடவுள் நம்பிக்கை என்பது அனுமானத்தால் பெறப்பட்டது என்பதையும், அறிவியல்பூர்வமாக அது நிரூபிக்கப்படாதது என்பதையும் ஏற்க மறுத்து, செம்மறி ஆட்டு மந்தைகளாய் வாழ்ந்துகொண்டிருப்பதுதான்.
உணர்ந்திருந்தால்.....
கடவுளைக் கொண்டாடுவதில் நேரத்தைச் செலவிடாமல், மக்களை வாட்டி வதைக்கும் வறுமையையும், நோய்களையும் அழித்தொழிப்பதற்கான முயற்சியில் முழுமையாகத் தங்களை அர்ப்பணித்திருப்பார்கள்; ஆட்டிப்படைக்கும் தீய உணர்வுகளிலிருந்தும் கெட்ட எண்ணங்களிலிருந்தும் விடுபடப் பெரிதும் முயன்றிருப்பார்கள். பெருமளவில் வெற்றியும் பெற்றிருப்பார்கள்.
கடவுளைப் புறக்கணித்து, சக மனிதர்களை நேசித்திருந்தால் மனிதாபிமானம் பெருகியிருக்கும்.
மனிதாபிமானம் மிகு வளர்ச்சி பெற்றிருந்தால்.....
நாடுகளுக்கிடையே பெரும் பெரும் போர்கள் நடந்திரா; பேரழிவுகளும் நிகழ்ந்திரா.
பேரழிவுகளும் சீரழிவுகளும் இன்றளவில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிரா.
நம்மைக் கவலையில் ஆழ்த்தும் பேரவலம் என்னவென்றால்.....
மக்கள் தொகை அதிகரிப்பது போலவே முட்டாள் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
இப்போதைக்கு இவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை.
இவர்கள் நம்பும் கடவுளும் இவர்களைத் திருத்தமாட்டார், அப்படி ஒருவர் இல்லை என்பதால்!