பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 7 டிசம்பர், 2023

கேள்வி: “உன் நாடு எது?”... பதில்: “ஹி... ஹி... இந்தியா, பாரத்”!!!

‘இந்தியா’வைப் ‘பாரத்’ என்று பெயர் மாற்றம் செய்வது குறித்து நடைபெற்ற விவாதம் முற்றுப்பெறாத நிலையில்['இந்தியா' என்ற வார்த்தையை நாட்டின் பெயராகப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதைப் 'பாரத்' என்று மட்டுமே அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகினறன. எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசிடமிருந்தோ அல்லது குடியரசுத் தலைவர் அலுவலகத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் வரவில்லை.’ https://www.bbc.com/tamil/articles/c4njkjr18y1o] இந்தியா, பாரத் என்னும் இரு பெயர்களையும் ஒன்றிய அரசு தொடர்ந்து பயன்படுத்துகிறது[’இந்தியா’வை அறவே நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை]. 

இப்போக்கு வீண் குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டுவதும், பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வேறு வழிமுறைகளைப் பரிந்துரைப்பதும் இந்தப் பதிவின் நோக்கங்கள் ஆகும்.


                                           *   *   *   *   *

கொஞ்சம் நாட்களுக்கு முன்பு, அடியேன் கனடா செல்லும் வான ஊர்தியில் பயணித்தபோது.....

சக பயணி கேட்டார்: “ உங்களுக்கு எந்த நாடு?”

நான்: “இந்தியா, பாரத்”[India, Barath]

பயணி: சற்று நேரம் என்னை ‘ஒரு மாதிரி’ பார்த்த அவர், “இரண்டு நாடுகளைச் சொல்லுறீங்க. இரண்டிலேயும் குடியுரிமை இருக்கா?”

நான்: “ஒரு நாடுதான். இந்தியாவும் அதுவே; ‘பாரத்’தும் அதுவே”

பயணி: “என்ன உளறுறீங்க. ஒரு நாட்டுக்கு ஒரு பெயர்தானே இருக்க முடியும்?”

நான்: “நான் உளறல. என் நாட்டுத் தலைவர்கள்தான் உளறுறாங்க, மன்னிக்கணும், சொல்லுறாங்க”

பயணி: “பாரத்துன்னு பேர் வெச்சது யாரு?”

நான்: யாரும் வைக்கல. முன்னொரு காலத்தில் எங்க தேசத்தை.....”

பயணி குறுக்கிட்டுக் கேட்டார்: இப்ப உள்ள உங்க நாடு அந்த முன்னொரு காலத்தில் ஒரே நாடா இருந்துதா? அதை ஒருத்தரே ஆண்டாரா?”

நான்: இருந்திருக்கணும். அபோது அதை ‘பாரத்’னு ஒரு மன்னர் ஆண்டார். அதனால், எங்க இந்தியாவை நாங்க, ரொம்பப் பிரியமா ‘பாரத்’ என்றும் சொல்றோம்”

பயணி: “இதுக்கு வரலாற்று ஆதாரம் ஏதும் இருக்கா?”

நான்: இருக்கோ இல்லையோ நாங்க நம்புறோம்”

பயணி: நீங்க நம்பினால் போதாது, மற்றவங்களை நம்பவைக்கப் போதிய ஆதாரம் வேணும்... இருக்கட்டும், உங்க பெயர் என்ன?”

நான்: பரமசிவம். வீட்டில் எல்லோரும் பிரியமா கூப்பிடுற செல்லப் பேரு பரமு”

பயணி: செல்லப்பேர், பட்டப்பேர், செய்தொழில்பேர்னு ஒருத்தருக்கு எத்தனைப் பேரும் இருக்கலாம். அரசாங்க ஆவணங்களில் பதிவான பேர் மட்டுமே நடைமுறை வாழ்க்கையில் செல்லுபடியாகும். ஆவணங்களில் உள்ள உங்க பேர் பரமசிவமா, பரமுவா?”

நான்: “பரமசிவம்தான். இரண்டில் ஒன்றை விட்டுட முடியாதுன்னா, ‘பரமு பரமசிவம்’னோ, ‘பரமு என்கிற[எ] பரமசிவம்’னோ பதிவு செய்யலாம்னு சொன்னாங்க அதிகாரிங்க”

பயணி: “நல்ல யோசனை. இந்தியாவா, பாரத்தா என்னும் பிரச்சினை ஒருபோதும் தீராதுன்னா, உங்க நாட்டை, ‘இந்தியா பாரத்’[இந்தி பாரத் அல்ல]என்றோ, ‘பாரத்[எ]இந்தியா’ன்னோ அரசியல் சாசனங்களில் பதிவு செய்யலாம்..... 

‘ஒரு நாட்டுக்கு இரண்டு பெயர்களா?’ன்னு பிற நாட்டவர் எள்ளி நகையாட இடம் தராம இந்த யோசனையை உடனடியா நடைமுறைப்படுத்துவது நல்லது. இப்படியான ஆலோசனையைப் பரிந்துரைக்க உங்க நாட்டில் அறிஞர்களே இல்லையா?

நான்: நிறையப்பேர்[நான் உட்பட... ஹி... ஹி... ஹி!!!] இருக்காங்க. எடுத்துச் சொல்ல எவருக்கும் தைரியம் இல்லை என்பதுதான் பரிதாபம்.

சொல்லிமுடித்து, உடன் பயணித்தவருடன் கை குலுக்கி ‘நன்றி’ சொன்னேன்.