அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 5 ஜனவரி, 2024

நாமக்கல் ஆஞ்சநேயர்... “மெது வடை வேண்டாம், ‘மசால் வடை’ குடுங்கப்பா”

“வடை மாலைன்னா நாமக்கல் ஆஞ்சநேயருக்கு உசுரு. 
108, 1008 என்று வடைகள் தின்னா பகவான் ஆஞ்சநேயருக்கு வயிறு நிரம்பாது. இனிமே 1,00,008[லட்சத்து எட்டு வடை] ‘வடை மாலை’ போட்டு அபிஷேகம் பண்ணனும்” என்று வெறுமனே கோரிக்கை மட்டும் வைக்காமல் ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறார்கள் நாமக்கல் ‘இந்து மக்கள் கட்சி’க்காரர்கள்.

பந்தாவா பதாகை பிடிச்சிட்டு நிற்கிறவர்கள் எண்ணி எட்டு பேர்[படத்தோடு, கொட்டை எழுத்தில் பத்திரிகைச் செய்தி வேறு]தான். நான் நாமக்கல்காரன் என்பதால் அவமானப்பட்டுத் தலை குனிந்து நடமாடுகிறேன். 

கூலி கொடுத்தாவது,  ஐம்பது அறுபது பேரைத் திரட்டக்கூடவா இவர்களுக்கு வசதி இல்லை? அப்புறம் என்ன, மக்கள் கட்சி, மாக்கான்கள் கட்சியெல்லாம்?

காலங்காலமாக, ஆஞ்சநேயருக்கு உளுந்து வடையைத்தான் மாலையாகப் போட்டு அபிஷேகம் பண்ணுகிறார்கள். ஆமை வடை, பருப்பு வடை, கீரை வடை, மசால் வடை, தவளை வடை, கீமா வடை[இறைச்சி சேர்த்துச் செய்யப்படுவது] மாமா வடை, மாமி சுட்ட வடை என்று வடைகளில் எத்தனையோ ரகம் இருக்கு. அதுகளையெல்லாம் மாலையாக்கிப் போட்டால் ஆஞ்சநேய சாமி புளகாங்கிதப்பட்டுக் கேட்ட வரமெல்லாம் தருவார்; முன்வைத்த கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றுவார்.

இதை ஏன் ஆஞ்சநேயத் தாசர்கள் செய்ய மறந்தார்கள்.

செய்யும் அளவுக்கு மண்டையில் மசாலா இருந்தால்.....

அபிஷேகம் என்னும் பெயரில், வடைகளை அள்ளி எடுத்துவருவது, பலர் சேர்ந்து அவற்றை மாலை ஆக்குவது, பல பூசாரிகள் 18 அடி உயரச் சிலைக்கு  அணிவிப்பது, பிறகு அவற்றைப் பிரித்தெடுத்துப் பக்தர்களுக்கு வழங்குவது என்றிப்படி இடம் மாறுவதால் அவை அசுத்தமாகும்; பிரசாதம் என்று பக்திப் பரவசத்துடன் வாங்கித் தின்னுவதால்[பக்தியின் பெயரால் நாளும் பரப்பப்படும் மூடத்தனம் இது]  தொற்று நோய் தாக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

இது புரிந்திருந்தால்.....

காத்திருந்து, பசிக்குக் கையேந்தும் பிச்சைக்காரகளுக்கு வடைகளைத் தானமாக கொடுத்திருப்பார்கள். அறிவுபூர்வமாகச் செயல்பட்ட நிம்மதி இவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

ஆண்டுக்கணக்கில் சிந்தித்தும் நமக்குப் புரியாத புதிர் என்னவென்றால்.....

12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்[மனிதனுக்கு ஆறறிவு வாய்க்காத நிலை] அயோத்தியை ஆண்டதாகச் சொல்லப்படும் ராமனை வைத்து, வால்மீகி புனைந்த கற்பனைக் கதையில் இடம்பெற்ற ஒரு குரங்கை யாரோ சிலர் கடவுளாக்க, கால நேரம் கருதாமல் நாடெங்கிலுமிருந்து லட்சக்கணக்கானவர்கள் நாமக்கல் வந்து வழிபடுகிறார்களே, இது எப்படி?

இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை என்றாலும், இந்தப் புண்ணியப் பூமி[?]யில் புத்தியுள்ளவர்கள் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு என்பது 100% புரிகிறது!