திங்கள், 26 பிப்ரவரி, 2024

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு..... தமிழர்கள் மீதான வடவர்களின் ஆதிக்கம் கூடுமா, குறையுமா?

தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு, வெற்றி ஈடுவதற்கான வியூகங்களை அமைத்துக் கொடுப்பதில் வல்லவர் ‘பிரசாந்த் கிஷோர்’ என்பது பலரும் அறிந்ததே.

குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி தொடர, அவருக்கு வியூகம் அமைத்தவர் இவர்.

2014 மக்களவைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்கான வழிவகைகளைப் பாஜகவுக்கு வகுத்துத் தந்தவரும் இவரே.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை வெற்றிகளை ஈட்டுவதற்குக் காரணமாக இருந்தவரும் இவரே என்பதால், இவரின் ஆலோசனையைப் பெற்றால் வெற்றி நிச்சயம் என்னும் நம்பிக்கை அரசியல் தலைவர்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இவர் மீதான நம்பிக்கையால்தான் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்றத் தேர்தலில், இவர் வகுத்தத் தந்த வியூகத்தை நடைமுறைப்படுத்தி, வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார்.

ஆக, ‘தேர்தல் முடிவுகள் பற்றிய பிரசாந்த் கிஷோரின் கணிப்புகள் பெரும்பாலும் பலிக்கும் என்பது உறுதி’ என்னும் நிலையில்.....

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் எட்டு முதல் 12 சதவித அளவில் வாக்குகளைப் ‘பாஜக’ பெறும்[இதுவரை பாஜகவுக்கு இங்கு ஐந்து சதவிகிதம்வரை மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளன]’ என்று இவர் கணித்துச் சொல்லியிருப்பது[https://www.hindutamil.in/news/india/1206165-double-digit-vote-percentage-for-bjp-in-tamil-nadu-prashant-kishor-prediction-2.html] நம்மைப் பெரும் கவலையில் ஆழ்த்துகிறது.

தமிழ்நாட்டில் செல்லாக் காசாக இருந்த... இருக்கும் பாஜக பெறவுள்ள வாக்குகள் அதிகமானால், மூடநம்பிக்கையாளர்கள் மிகப் பெருவாரியாக உள்ள வட மாநிலங்களில் அது பெறும் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

தொடர்ந்து இந்தியாவைப் ‘பாஜக’வே ஆளும் என்றும் உறுதிபடச் சொல்லலாம்.

அதன் விளைவு.....

நம் மாநில அரசுக்குரிய பல உரிமைகளைப் பறித்தததால் நாம் வடவர்களின் 90% அடிமையாக உள்ளோம்[பிற தென்னிந்திய மாநிலத்தவர் பற்றி நமக்குக் கவலையில்லை]. இனி, 100% அடிமைகளாக மாற்றப்படுவோம் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை.

ஆகவே, தமிழ்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு நாம் மிக மிகப் பணிவுடன் முன்வைக்கும் வேண்டுகோள்:

“உங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளையும், காழ்ப்புணர்ச்சிகளையும் தற்காலிகமாகவேனும் ஒதுக்கிவைத்து, ‘பாஜக’வின் வாக்குச் சதவீதம் எவ்வகையிலும் அதிகரித்துவிடாமல் தடுப்பதில் முழு மனதுடன் ஈடுபடுங்கள்.”

தவறினால்.....

உண்மைத் தமிழர்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்கமாட்டார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்!