பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

பொல்லாத மனிதர்களிடம் அல்லாடும் இல்லாத சாமிகள்!!!

சேலம் மாவட்டத்தில் மனிதர்கள் வாழும் ஊர் ‘மணியனூர்’.

அவர்களில் ஒரு சாரார் பொது இடத்தில் குப்பை கொட்டினார்கள். இன்னொரு சாரார், பிள்ளையார் படத்துடன் குப்பை மேட்டருகே பேனர் வைத்தார்கள்[குப்பை கொட்டுவதைத் தடுக்கப் பல உத்திகளையும் தந்திரங்களையும் கையாண்டு தோற்றிருக்கக்கூடும்].

பெரும்பான்மைப் பக்தர்களால் தொழப்படும் நம்பர் 1 சாமியான பிள்ளையாரைக் ‘குப்பை’ மனிதர்கள் மதிக்கவில்லை. அம்மை[பார்வதி] குளிக்கும்போது தேய்த்தெடுத்து உருவாக்கிய அழுக்குச் சாமி அது என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்]; தொடர்ந்து குப்பை கொட்டினார்கள்.

ஒத்தைச் சாமிக்குப்  பயப்படாத அவர்கள், அவரின் அப்பன், அம்மை, மாமன்[விஷ்ணு பகவான்], மனைவிகள்[பிள்ளையார் இரண்டு பெண்டாட்டிக்காரர்] தம்பி[முருகன்] என்று பத்துச் சக்தியுள்ள சாமிகளின் படங்களைக் குப்பை மேட்டருகே அணிவகுக்கச் செய்தார்கள்.

ஒத்தைச் சாமிக்குப் பயப்படாதவர்கள் பத்துச் சாமிகளைக் கண்டதும் அஞ்சி நடுங்கினார்கள். 

காவல்துறைக்குத் தகவல் போனது.

சாமி படங்களைக் கைப்பற்றிச் சென்றார்கள் காவல்துறையினர்.

படம் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்களாம்.

தீர விசாரித்து.....

படம் வைத்தவர்களைக் கைது செய்து நீதிபதி முன்னால் நிறுத்தினால், பத்துச் சாமி[யார்]களும் நீதிமன்றத்தில் ஆஜராகிச் சாட்சி சொல்லுவார்களா?!

எது எப்படியோ, குப்பை கொட்டுவதைத் தடுக்கச் சாமிகளின் படங்களை வைத்த மணியனூர் வாசிகளை அதி புத்திசாலிகள் என்று பாராட்டுவதா, அல்லது,  அடி.....?

வேண்டாம். ஏடாகூடமாக எதையும் சொல்லிவைத்தால், அண்டை மவட்டத்துக்காரர்களான அவர்கள் அணி திரண்டு வந்து தாக்கினால், அடியேனின் 60 வயதைக் கடந்த உடம்பு[உண்மை வயது?... ஊஹூம்!] தாங்காது! ஹி... ஹி... ஹி!!!