காலரா:
‘விப்ரியோ காலரா’ என்னும் பாக்டீரியத்தால் ஏற்படும் குடல் நோய் இது. கிமு 5ஆம் நூற்றாண்டுவரையிலான நூல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொற்றுநோய்ப் பாதிப்பு இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டுவரை ஏற்படவில்லை. அசுத்தமான உணவு அல்லது தண்ணீரால் பரவுவது இந்த நோய்.
ஏமன் மற்றும் சோமாலியா போன்ற ஏழை மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளில் காலரா இன்னும் உள்ளது என்றாலும், நோயைக் குணப்படுத்த இப்போது தடுப்பூசிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளன.
நிமோனியா:
மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ் முதன்முதலில் நிமோனியாவின் அறிகுறிகளை கிமு 4ஆம் நூற்றாண்டில் கண்டறிந்து சொன்னார். இது ஒரு நுரையீரல் தொற்று என்று கருதப்பட்டது. ஆனால், பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் ஆகியவற்றால் உருவாகிறது இது என்பதே உண்மை.
1900 வாக்கில், இந்த நிமோனியா நோய் உலகளவில் இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணியாக இருந்தது.
தொழுநோய்:
கிமு 600க்கு முற்பட்ட பழம் பெருமை வாய்ந்த நோய் இது. பாவிகளுக்குத் தெய்வம் வழங்கும் தண்டனையாக இது கருதப்பட்டது.
நோயாளிகளைக் கட்டாயமாகத் தனிமைப்படுத்தியதன் காரணமாக 14ஆம் நூற்றாண்டில் தொழுநோயின் பரவல் குறையத் தொடங்கியது.
ரேபிஸ்:
விலங்கு கடித்தால் பரவும் ரேபிஸ் என்பது 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக அறியப்பட்ட ஒரு வைரஸ் நோயாகும் இது; ஆபத்தானது. இது பல நரம்பியல் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
ரேபிஸ் இன்றளவில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானவர்களைத் தாக்குகிறது. அவர்களில் 40% பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
காசநோய்:
கிமு 7000இல் புதைக்கப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் உடல்களில் இதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.
இந்த நுரையீரல் தொற்று என்னும் சுவாச நோய் 3 மில்லியன்[?!] ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. 1940களில் இதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் இந்த நோயால் இறக்கின்றனர்.
பெரியம்மை:
பெரியம்மை முதன்முதலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் 3,000 முதல் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.
இதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அதிகக் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, சொறி போன்ற அறிகுறிகள் தோன்றும்.
மே 8, 1980இல் இது அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், வைரஸ் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இன்னும் ஆய்வகங்களில் வைக்கப்பட்டுள்ளது. .
புற்றுநோய்:
பாதிரியாரும் கட்டிடக் கலைஞரும் மருத்துவரும் ஆன ‘இம்ஹோடெப்’ என்பவர் முதன்முதலில் பண்டைய எகிப்தியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் இந்த நோய் பற்றி விவரித்தார்.
இந்த நோய் இப்போது உலகின் முக்கிய உயிர்கொல்லி நோய்களில் ஒன்றாக உள்ளது.
மலேரியா:
மலேரியா என்பது ஒரு ஆபத்தான நோயாகும். காய்ச்சல் இதன் முக்கிய அறிகுறியாகும்.
இது வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து இருந்திருக்கலாம்.
எனினும், 4,700 ஆண்டுகளுக்கு முன்பு சீனா, இந்தியா, மெசபடோமியா ஆகிய நாடுகளில் காணப்பட்டது.
வெப்பத்தை விரும்பும் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடித்தால் மனிதர்களுக்குப் பரவுகிறது இது.
2021ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் மலேரியா பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.
டிராக்கோமா:
‘கிளமிடியா ட்ரக்கோமாடிஸ்’ என்பது டிராக்கோமாவை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியா ஆகும். இது ஒரு கண் தொற்று.
இது 10,000 ஆண்டுப் பழைமையானது எனினும், 20ஆம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
கிமு 500இல், ‘ஹிப்போகிரட்டீஸ்’ என்பவர் இந்த நோய்க்குச் சிகிச்சையளித்தார்.
இன்று, உலகளவில் சுமார் 1.9 மில்லியன் மக்களின் குருட்டுத்தன்மை அல்லது பார்வைக் குறைபாட்டிற்கு இந்த டிராக்கோமா காரணமாக உள்ளது.
வூப்பிங் இருமல்:
நீண்ட காலமாக குழந்தைப் பருவ நோயாக இது கருதப்படுகிறது, ஆனால், இது உண்மையில் எந்த வயதினரையும் தாக்கலாம்.
மூன்று மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இது மிகவும் ஆபத்தானது.
இந்தச் சுவாசத் தொற்று போர்டெடெல்லா பெர்டுசிஸால் ஏற்படுகிறது.
இந்தப் பாக்டீரியா தொற்று 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
முதன்மை அறிகுறிகளில் தொடர்ச்சியான இருமல், கடினமான மூச்சுத்திணறல் ஆகியவை அடங்கும். தடுப்பூசிகள் 1940களில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டன. தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இதன் தாக்குதல் விகிதம் 75% குறைந்துள்ளது.
* * * * *
***மனிதர்கள் அறிந்த பழமையான நோய்கள்©லூயிஸ்-லியோபோல்ட் பொய்லி / விக்கிமீடியா காமன்ஸ்
***இயன்றவரை நம் தாய்மொழி மரபு பிறழாமல், ஆங்கிலத்திலான கட்டுரையின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டும் ஓரளவு சுருக்கியும் வெளியிடப்பட்டுள்ளது.
* * * * *