//எப்பவுமே அரசியல் என்பது அறம் சார்ந்து இருக்க வேண்டும். ஆன்மிகத்தையும், அரசியலையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. எப்பொழுது எல்லாம் அரசியலில் அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்களோ, அந்தச் சமயங்களில் அவர்கள், ஆதீனங்களையும் குருமார்களையும் சந்தித்து அறிவுரைகளைப் பெற்று, அதைத் திருத்திக்கொள்ள வேண்டும்//
“அரசியல் என்பது அறம் சார்ந்து இருக்க வேண்டும்” என்கிறார் இவர்.
இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
அரசியல்வாதிகள் அறநெறி பிறழாமல் செயல்படுவது அவர்களுக்கான மிக முக்கியத் தகுதிகளில் ஒன்று.
அந்நெறி பிறழ்பவன் சுயநலவாதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற அவனால் மக்களுக்கு நன்மைகள் விளைவதில்லை.
எனவே, “அரசியல் என்பது அறம் சார்ந்திருத்தல் வேண்டும்” என்று அண்ணாமலை கூறியது வரவேற்கத்தக்கது.
“அரசியலையும் ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்த்தல் கூடாது” என்று அவர் கூறியிருப்பதுதான் நகைப்பூட்டுகிறது.
ஆறறிவைப் பெற்ற மனிதர்கள் எப்போது ஒன்றுபட்டு ஒரு குழுவாக இணைந்து, ஒரு தலைவனையோ, தலைவர்களையோ தங்களை ஆளுபவர்களாக ஏற்றுக்கொண்டார்களோ அப்போதே அரசியல் அமைப்பும் உருவாகிவிட்டது.
ஆக, அரசியல் என்பது மக்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று.
ஆன்மிகம் என்பது இதனின் வேறுபட்டது. தமக்கும் மேம்பட்ட சக்தியைக் கடவுள் என்று சொல்லி, அவரை வழிபட்டால் நன்மைகள் உண்டு என்னும் நம்பிக்கை சிலரால் திணிக்கப்பட்டு, மக்களும் அதை நம்பத்தொடங்கியபோது உருவானது ஆன்மிகம்.
அது இயற்கையானது அல்ல; ‘இடைச் செருகல்’ என்று சொல்லலாம்.
அது முழுக்க முழுக்க நம்பிக்கையின் பாற்பட்டது. ஆன்மிகத்தை ஏற்காத அரசியல்வாதிகள் அன்று இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள்.
எனவே, அரசியல்வாதி ஆன்மிகராகவும் இருத்தல் அவசியமில்லை.
ஆன்மிகத்தைப் புறக்கணித்து, மக்கள் பணிக்காகவே தங்களின் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.
இதைச் சொல்வதற்கோ, புரிந்துகொள்வதற்கோ அறிஞராக இருத்தல் அவசியமில்லை; வெகு சாமானிய மக்களுக்கே இது சாத்தியம்தான்.
ஆன்மிகத்தையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று சொன்ன அண்ணாமலை ஒரு சாமானியராகக்கூட இல்லை என்பது பெரிதும் வருந்தத்தக்கது.
தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி!
* * * * *