செவ்வாய், 26 மார்ச், 2024

வேட்பாளர்களா, வாக்காளர்களா, கடவுள்களா இவர்களில் ஆகச் சிறந்த முட்டாள்கள் யார்?!

ருவன் தன்னைப் ‘பரம யோக்கியன்’ என்று பிறரை நம்ப வைப்பதற்குக் கையாளும் உத்திகளில் ஒன்று கடவுள் பக்தனாக முன்னிலைப்படுத்துவது.

இந்த உத்தியைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் வெகு சிறப்பாகக் கையாள்கிறார்கள்.

எடப்பாடியார், ‘பாஜக’ எல்.முருகன் போன்றோர் பரப்புரையைத் தொடங்குவதற்கு முன்னால், கோயில்களுக்குச் சென்று வழிபட்டார்கள் என்பது ஊடகச் செய்தி.

பாஜக அண்ணாமலை, கோவை மாவட்டப் பேரூரிலுள்ள மடத் தலைவரை வணங்கி ஆசி பெற்றிருக்கிறார்.

2024 தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சி வேட்பாளர்களில் மிகப் பெரும்பாலோர் கோயில்களுக்குச் சென்று வழிபட்ட பிறகே[காணொலியாக்கி ஊடகங்களிலும் வெளியிடுகிறார்கள்] தேர்தல் பணிகளைத் தொடங்குவார்கள்/தொடங்கியிருப்பார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

இவர்களின் இச்செயல் முழுக்க முழுக்க, மக்களை மூடர்களாக்கி ஓட்டுப் பெறுவதற்கான ‘ஓரங்க நாடகம்’ என்பது நம் குற்றச்சாட்டு.

“இல்லை இல்லை. வெற்றிக்கு எங்களின் தெய்வங்கள் உதவும் என்ற மனப்பூர்வமான நம்பிக்கையில்தான் வழிபடுகிறோம்” என்று கூறுவார்களேயானால்.....

இவர்கள் தேர்தலில் தோல்வியைத் தழுவினால், “நாங்கள் நம்பிய கடவுள்கள் எங்களைக் கைவிட்டுவிட்டார்கள்” என்று பகிரங்கமாக அறிவிப்புச் செய்வார்களா?

அல்லது,

“நாங்கள் உண்மையான மக்கள் தொண்டர்களாகவும், யோக்கியர்களாகவும் இருந்திருந்தால் அவர் எங்களைக் கைவிட்டிருக்கமாட்டார்” என்று மனம் திறந்து சொல்வார்களா?

அல்லது, 

“நாங்கள் அயோக்கியர்கள் என்றாலும், மன்னித்து எங்களுக்கு அவர் அருள்பாலித்திருக்க வேண்டும். அதைச் செய்யாததால் அவர் கருணையுள்ளவர் அல்ல; வழிபடத் தக்கவரும் அல்ல” என்று துணிந்து சொல்வார்களா?

இந்தவொரு துணிச்சல் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் தேவை என்பது நம் எண்ணம். இதன் மூலம், ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்னும் மூடநம்பிக்கையிலிருந்து மக்கள் விடுபடுவது உறுதி.

முக்கியக் குறிப்பு:

நம்மைப் போன்ற அறிவுஜீவி[ஹி... ஹி... ஹி!!!]களிடமிருந்து இவ்வாறான மண்டை காய வைக்கும் கேள்விகளை வேட்பாளர்கள் தவிர்க்க விரும்பினால்.....

கோயில்களுக்குச் சென்று சாமி சிலைகளுக்கு முன்னால் நீட்டிப் படுத்துக் கும்பிட்டு வேண்டுதல் வைப்பதைத் தவிர்த்துவிட்டு, வாக்காளர்களையே கடவுள்களாக மதித்து, அவர்களின் கால்களில் விழுந்து வணங்கி வாக்குச் சேகரிப்பதே புத்திசாலித்தனம் ஆகும்!

‘தினமணி’யில் வெளியானதொரு கருத்துப் படமும்[கீழ்க்காண்பது] இதைத்தான் சொல்கிறது.