புதன், 1 மே, 2024

முழுமுதல் முட்டாள் மனிதனா கடவுளா?

யிருள்ளவையும் உயிரற்றவையும் உட்பட அண்டவெளியிலுள்ள அனைத்தையும் படைத்தவன் கடவுள். அவனை மிஞ்சிய ஆற்றல் படைத்த எதுவோ, எவையோ, எவருமோ இல்லை. 

கருணை வடிவானவன் என்பதால், தான் படைத்த அனைத்தையும் பாதுகாப்பவனும் அவனே ஆவான்.

எனினும், உயிர்கள் ஒன்றையொன்று தாக்கியும், சித்திரவதை செய்தும் அழித்து உண்ணும் வகையில் படைத்தானே அவன், அது ஏன் என்னும் கேள்விக்கு உண்மையானதும் மிகச் சரியானதுமான பதிலைச் சொன்னவர் எவரும் இல்லை.

மனிதர்களுக்கு மட்டும் ஆறறிவைத் தந்து பாரபட்சம் காட்டியதோடு,  அந்த ஆறறிவை முழுக்க முழுக்க நல்ல வழிகளில் பயன்படுத்தாமல் தீமைகள் புரியவும் அனுமதித்தது ஏன் என்று கேட்டால், “அதை அந்தப் பேரறிவாளனே அறிவான்” என்று மழுப்புகிறார்கள் மக்கள் மனங்களில் கடவுள் நம்பிக்கையை விதைத்த அவதாரங்களும் மகான்களும்.

பாவங்கள் செய்வதோடு புண்ணியங்கள் செய்ய வைத்தவனும் அந்தப் பகவானே என்பதோடு, பாவங்கள் தவிர்த்து, அதிக அளவில் புண்ணியங்கள் செய்யத் தூண்டுபவனும் அவனே என்கிறார்கள்.

புண்ணியங்கள் செய்ய நல்ல மனம் வேண்டுமாம்.

அருள்வடிவான அவனின் அடிதொழுது வேண்டினால் நல்ல மனம் வாய்க்கும்; நல்ல மனதுடன் நாளும் அவனை வழிபட்டால், துன்பங்கள் நீங்கிச் சுகமாக வாழலாம். வாழ்ந்து முடித்து வீடுபேறு எய்தலாம்.

-என்றிப்படியாக, கடவுளை வழிபடுவதன் அவசியத்தை காலம் காலமாக வலியுறுத்தியுள்ளார்கள் ஆன்மிக மேதைகளும் அவதாரங்களும்.

படைத்தல், பாதுகாத்தல், பாவபுண்ணியங்கள் செய்யத் தூண்டுதல், அவற்றிற்கான பலன்களை அனுபவிக்கச் செய்தல், அதிக அளவில் நன்மைகள் செய்ய வைத்து வீடுபேற்றை வழங்குதல் என்று மண்ணில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அவனே பொறுப்பாளானாக இருக்கையில்.....

“கடவுளை நம்பு. நாளும் அவனை வழிபடு” என்று ஆன்மிகவாதிகள் அனுதினமும் அறிவுரை பகர்கிறார்கள்.

மீண்டும் சொல்கிறோம்..... படைத்தல், பாதுகாத்தல், தவறுகள்[குற்றங்கள், பாவபுண்ணியங்கள்] செய்திடத் தூண்டிப் பின் திருத்துதல், முடிவில் தன் திருவடி சேர்த்தல் என்று அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக இருப்பதாகச் சொல்லி, அவனை அனுதினமும் வழிபடத் தூண்டுகிறார்கள் அருளாளர்கள் எனப்படுவோர்.

தூண்டுகிற இவர்களா, இவர்களின் அடாத செயலை[கடவுளை நம்பி வழிபடுவதால் பல தீமைகள் விளைவது கருத்தில் கொள்ளத்தக்கது]க் கண்டுகொள்ளாத கடவுளா[இருந்தால்] முழுமுதல் முட்டாள் யார்?

https://kadavulinkadavul.blogspot.com/2024/05/blog-post.html