திருவண்ணாமலை.
இந்த மலை சிவலிங்க வடிவத்திலிருக்கிறது என்று எவனோ சொல்லிப்போனான். அங்கிருப்பவர்கள் மட்டுமல்ல, போய்த் திரும்புகிறவர்களும் அதையே சொல்லித் திரிகிறார்கள். அண்மையில் அங்குச் சென்றிருந்த நான் கண்டது மரங்களே இல்லாத, சிறு சிறு புதர்களும் முள் மரங்களும் உள்ள சிவலிங்கத்தைக் கொஞ்சமும் ஒத்திராத ஒரு மலையைத்தான்.
‘முக்கோணம் நெருப்பு தத்துவத்தை குறிக்கும். திருவண்ணாமலை மேல் நோக்கிய ஒரு முக்கோணம்’ என்று இன்னொரு பொய்யன் கதைத்திருக்கிறான். ஊன்றிக் கவனித்தபோது முக்கோணம், செங்கோணம், குறுங்கோணம் என்று எந்தவொரு கோணத்திலும் திருவண்ணாமலை காட்சியளிக்கவில்லை.
அது நந்தி[சிவபெருமான் வாகனம்] படுத்திருப்பது போல் இருக்கிறது என்கிறார்கள். கால்களைக் காணோம்; காதுகளும் இல்லை; தலையும் இல்லை; வாலும் இல்லை. ஒரு பக்கம் சற்றே நீண்டு மறுபக்கம் உயர்ந்து காணப்படுகிறது. அது நந்தி போலவுமில்லை, குந்தியிருக்கும் குந்திதேவி போலவும் இல்லை.
அடிவாரத்திலிருந்து மேல் நோக்கி நடந்தால் ‘குரு நமச்சிவாயர்’ குகையைக் காணலாம். முழு முதல் கடவுள் சிவபெருமானே நமச்சிவாயர் வடிவெடுத்து வந்து அங்கு வாழ்ந்தாராம். பார்த்தவர்கள்[?!] எழுதி வைத்திருக்கிறார்கள். இதைப் பலரும் நம்புகிறார்கள்[அதே சிவபெருமான்தான் இப்போது ஞானி ‘பசி’பரமசிவம் ஆக இந்த மண்ணில் அலைந்து திரிகிறார் என்றால் நம்புவார் உண்டா? ஹி... ஹி... ஹி!!!]
இன்னும் இப்படிப் புனைந்துரைக்கப்பட்ட ஏராளக் கதைகள் வெறும் கரடுமுரடாகக் காட்சியளிக்கும் திருவண்ணாமலையைத் தெய்வம் தங்கியிருக்கும் புனிதத் தலம் ஆக்கிவிட்டன.
இந்த இடம் இன்று உழைத்துப் பிழைக்க விரும்பாத சோம்பேறிகளின் புகலிடம் ஆகிவிட்டது[வயதானவர்கள்&நிராதரவானவர்கள் எண்ணிக்கை குறைவு].
திருவண்ணாமலையின் சுற்றுப்[கிரிவலம்]பாதையில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளது என்கிறது புராணம். அது உண்மையோ பொய்யோ, அடிக்கு ஒரு சாமியார் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை. இதில் வசதியுள்ளவர்கள் ஆசிரமம் அமைத்து[பொது இடத்தில்தான்] தங்கியுள்ளார்கள். அது இல்லாதவர்கள் நடைபாதையில் படுத்துக்கிடக்கிறார்கள்.
கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கடைகள். வியாபாரிகள் காட்டில் 365 நாட்களிலும் அடைமழைதான்.
திருவண்ணாமலையில் உள்ள பல்வேறு ஆன்மிக அமைப்புகளும் ஆசிரமங்களும் தன்னார்வலர்களும் இந்த வேடதாரிகளுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மூலம் இவர்களின் தேவைகள் பூர்த்தியாகின்றன.
காலையில் பாபு சாமி ஆஸ்ரமம், மதியம் ரமணாஸ்ரமம், விசிறிச் சாமியார் ஆஸ்ரமம், மாலையில் திருநேர் அண்ணாமலை சந்நிதானம், வெள்ளிக்கிழமையில் மசூதியில் பிரியாணி. பௌர்ணமி தோறும் அன்னதானம். தினமும் வருகையாளர்கள் வழங்கும் பாக்கெட் சாதம். ஆக.....
வேளாவேளைக்கு வயிறு புடைக்கச் சாப்பிடுகிறார்கள் சாமியார்கள். பட்டினி என்னும் பேச்சுக்கே இடமில்லை. கஞ்சா, மது என்று போதை ஏற்றிச் சொர்க்கச் சுகம் அனுபவிப்பவர்களும் உள்ளனர்.
இந்தப் புனிதத் தலம் சோம்பேறிகளின் புகலிடம் மட்டுமல்ல, மனநிலை பாதித்த பைத்தியங்களை நடமாடும் சாமிகளாக்கி வழிபடும் கிறுக்கர்களை உருவாக்கும் இடமாகவும் உள்ளது.
‘திருவண்ணாமலை தொப்பி அம்மா’ என்று தேடுபொறியில் தட்டச்சு செய்தீர்களேயானால், தலையில் தொப்பியுடன், அழுக்கேறிய அலங்கோல உடையில் ஒரு பைத்தியக்காரி[இவளைப் பற்றியக் காணொலிகளைக் கணக்கிடுவது அத்தனை எளிதல்ல] மனம்போன போக்கில் அலைவதையும், முட்டாள் மனிதர்கள் அவளைக் குனிந்தும் விழுந்தும் கும்பிடுவதையும், அவள் தின்று வீசி எறிந்த எச்சில் பண்டத்தைப் பக்திப் பரவசத்தோடு பங்கிட்டு உண்பதையும்[*காணொலி முகவரி கீழே] காணலாம்{இவளைப் படம் பிடித்து[வீடியோ] யூடியூபில் வெளியிட்டுக் காசு பண்ணுகிறார்கள் சில கயவர்கள் என்பதும் அறியத்தக்கது}.
*https://x.com/i/status/1786457300091203898 https://x.com/_kabilans/status/1786457300091203898 > தொப்பி அம்மா.
ஆதார முகவரிகள்:
https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/the-video-of-a-saint-who-is-boozing-near-thiruvannamalai-temple-gone-viral/tamil-nadu20220915212527036036966 > ‘தண்ணி’ அடிக்கும் சாமியார்.
https://www.dinakaran.com/intensitywork-criminalbackground-thiruvannamalai-kriwalabathi-200people-oneday/ > காவல்துறை விசாரணை.
https://www.nakkheeran.in/special-articles/special-article/thiruvannamalai-girivalam-devotees
https://brseetha.blogspot.com/2017/07/blog-post_4.htm
https://temple.dinamalar.com/news_detail.php?id=4156