பத்தாண்டுக் காலம் இந்தியாவின் பிரதமராக இருந்து, பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் இது 3ஆவது இடத்தைப் பெற்றிட அரும்பாடுபட்டவரும், தியாகங்கள் பல செய்தவருமான மோடியின் கீழ்க்காணும் பேச்சு[ஒடிசாவில் தொ.க. ஒன்றுக்கு அளித்த பேட்டி]நம்மைப் பெரிதும் சிந்திக்க வைத்திருக்கிறது.
"நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்.....
நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது அல்ல; கடவுளால் மட்டுமே இதைக் கொடுக்க இயலும்" என்று தான் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதன் மூலம், கடவுளால் அனுப்பப்பட்டவர் தான் என்பதால், வாக்காளர்களில் கடவுள் நம்பிக்கையுள்ள அனைவரும்[நாத்திகர்கள் விதிவிலக்கு] தன் கட்சிக்கு வாக்களித்து மீண்டும் தன்னைப் பிரதமர் ஆக்குவார்கள் என்று அவர் நம்புவது புரிகிறது
இந்நிலையில், எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்படக் கணிசமான நாட்கள் உள்ளன.
இந்த இடைப்பட்ட நாட்களில் தன்னம்பிக்கை இழந்து, தான் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்று மோடி நம்புவாரேயானால்.....
“என்னை இங்கு அனுப்பிய அதே பரமாத்மா, நான் படுதோல்வியைத் தழுவினால், உடனடியாக என்னைத் தன்னிடம் அழைத்துக்கொள்வதாகக் கூறியிருக்கிறார் என்றுகூடச் சொல்வாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆகவே, மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிட்டால் பிரச்சினை ஏதும் இல்லை, மாறாக, முன்னாள் பிரதமர் என்று அழைக்கப்படும் நிலைக்கு அவர் ஆளானால், பரமாத்மா சொன்னது போல் ஏதும் நடந்துவிடுமோ என்று மனம் வெகுவாகக் கவலைப்படுகிறது.
எனவே, “மோடி வெல்க!” என்று வாழ்த்துவோம்.
அவரின் வெற்றி பரமாத்மாவின் வெற்றி!!
* * * * *