செவ்வாய், 28 மே, 2024

அழகிகளும் அவலட்சணிகளும்!!!

ன்று சுனிதாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர இருந்தார்கள்.

சுனிதாவின் அம்மா அழைப்புவிடுத்ததில் அவள் தோழி கவிதா வந்திருந்தாள். 

“ஒப்பனை செய்யுற பெண்ணை அதிகாலையிலேயே வரவழைச்சுட்டேன். இவள் மேக்கப் வேண்டாம்கிறாள். நீ சொன்னா கேட்பா. சொல்லு கவிதா” என்றாள் சுனிதாவின் அம்மா.

கவிதா வாய் திறப்பதற்கு முன்பே பேசத் தொடங்கினாள் சுனிதா. 

“நான் அட்டக் கறுப்பு; எனக்கு அண்ணாந்த சப்பை மூக்கு. ஒட்டின கன்னம்; தூக்கலான நாலு பல்லு. என்னதான் மேக்கப் போட்டாலும் அவலட்சணமான என்னை அழகி ஆக்க முடியாது. கிலோ கணக்கில் நகையும், கட்டுக்கட்டாப் பணமும் கொடுத்தாத்தான் என் கழுத்தில் ஒருத்தன் தாலி கட்டுவான்…..”

நீண்டதொரு பெருமூச்சுக்குப் பிறகு, “எவ்வளவு வரதட்சணை கொடுத்தாலும் என்னை மாதிரி அவலட்சணத்தைக் கட்டிக்கிறவன் பெண்டாட்டியோடு ஒழுங்காக் குடும்பம்நடத்தினதில்ல: நடத்தமாட்டான். அதனால, எனக்கு ஒப்பனையும் வேண்டாம்; கல்யாணமும் வேண்டாம். அப்பா அம்மா இருக்கும்வரை அவங்க பாதுகாப்பில் இருப்பேன். அவங்க காலத்துக்கு அப்புறம் என் எதிர்காலம் பத்தி நிதானமா யோசனை பண்ணி முடிவு பண்ணுவேன்” என்றாள் சுனிதா.

கேட்டுக்கொண்டிருந்த சுனிதாவின் தந்தை, அலைபேசியில் நிகழ்ச்சியை ரத்துசெய்துள்ளதாகச் சொல்லி மாப்பிள்ளை வீட்டாரிடம் வருத்தம் தெரிவித்தார்.