வியாழன், 20 ஜூன், 2024

இல்லாத பனிலிங்கமும் அறிவில்லாத அமர்நாத் யாத்திரிகர்களும் ஆட்சியாளர்களும்!!!

 

பத்தியில் இடம்பெற்றுள்ள தொடரில், ‘பனிலிங்கத்தைத் தரிசன செய்ய ஏராளமான பக்தர்கள்’ என்பதில் உள்ள, ‘பக்தர்கள்’ என்பதற்குப் பதிலாக ‘மூடர்கள்’ என்னும் சொல்லைச் சேர்த்து வாசியுங்கள்.

அனைத்திற்கும் மேலான சக்தி படைத்த சிவபெருமானின் மறு வடிவமான சிவலிங்கத்தைத் தரிசிக்கச் செல்லும்போது, துப்பாக்கி ஏந்திய படைப் பாதுகாப்பு எதற்கு?[பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட கட்டடங்களுக்குள் சாமிகளை அடைத்துப் பூட்டி வைத்துக் காவல் காப்பது போல].

தரிசனம் செய்யச் செல்லும்போதுகூடப் பாதுகாப்புத் தராத கடவுள் அப்புறம் எப்படிக் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்?

அமர்நாத் போகிற அறிவிலிகள் மட்டுமல்ல, அவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிற ஆட்சியாளர்களும் இணைந்து மக்களை மடைமையிலிருந்து விடுபடாமல் தடுக்கிற அயோக்கியத்தனம் இதுவாகும்.

எதிர்க்கட்சிகளில் இருக்கும் பகுத்தறிவாளர்களும், பிற சமூகச் சீர்திருத்தவாதிகளும்கூட, ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கூத்தடிப்பைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை.

அமர்நாத் கோயிலில் பனிலிங்கம் உருவாவதாகச் சொல்வதே 100% பித்தலாட்டம் என்பது அவர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். இருந்தும் மௌனம் சாதிக்கிறார்கள்.

அது தொடர்பான பதிவு கீழே:

மயமலையில், கடல் மட்டத்திலிருந்து 12 ஆயிரத்து 756 அடி உயரத்தில்  பல மலை முகடுகள் உள்ளன.

அவைகளில் ஒரு முகட்டில் 130 அடி உயரத்துக்குப் பெரிய குகை ஒன்று உள்ளது.

குகையின் ஒரு பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டுக் கீழ்நோக்கித் தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கும்.

சொட்டுகிற இந்த நீர், பனிப்பருவத்தில் தரைப்பகுதியில் பனித்திட்டாக உறைகிறது. தொடர்ந்து சொட்டிக்கொண்டிருக்கிற நீர்த்துளிகள் அதன் மீது விழுந்து பனிக்கட்டிகளாக மாறிக்கொண்டிருப்பதால், திட்டின் உயரம் படிப்படியாக உயர்ந்து, ஒரு கட்டத்தில் ஒரு தடிமனான தூண் போல் காட்சியளிக்கிறது.

பனிக்கட்டியாலான சிறு தூண் போல் இது தென்படுகிறதே தவிர, வழக்கமாகக் கோயில்களில் நாம் பார்க்கிற முழுமையான சிவலிங்க வடிவை இது பெற்றிருக்கவில்லை[கீழே படத்தில் உள்ளது போல] என்பது அறியத்தக்கது.

இதனை ஒட்டி, மேலிருந்து சிதறுகிற நீர்த்துளிகள் உறைந்து, இதன் இடப்பக்கதில் ஒரு பனி வடிவமும், வலப்பக்கத்தில் இரண்டு பனி வடிவங்களும் உருவாகிக் காட்சியளிக்கின்றன[உதவி:https://kkrwhatsapp.blogspot.com/2019/02/amarnath-temple.html#.YsuGMHbP23A ]

நம் பக்திப் பித்தர்கள் நடுவில் சிறு தூண் போல் நிற்கும் பனிக்கட்டிக்குச் சிவலிங்கம் என்றும், இடப்புறம் உள்ள பனிக்கட்டிக்கு 'வினாயகர்' என்றும், வலப்பக்கம் உள்ள இரண்டினில் ஒன்றுக்குப் பார்வதி' என்றும், மற்றொன்றுக்குப் 'பைரவர்' என்றும் பெயர் சூட்டித் தொழுது பரவசப்படுவதை வழக்கமாக்கிவிட்டார்கள்[மேலும் ஒரு பனித்திட்டு உருவாகியிருந்தால் அதற்குச் 'சுப்ரமணியன்' என்று பெயர் வைத்திருப்பார்கள்].

மே மாதம் முதல் ஆகஸ்டுவரை உருவாகும் இவ்வாறான பனித் திட்டுகள் அதன் பிறகு படிப்படியாயக் கரைந்து மறைந்துவிடுகின்றன.

இது இயற்கையான ஒரு நிகழ்வு மட்டுமே.

சிவபெருமான்தான் தன்னைச் சிவலிங்கம் ஆக்கிகொள்கிற அதிசயத்தை நிகழ்த்துகிறார் என்றால், அதற்கு அந்தக் குறிப்பிட்ட நான்கு மாதங்களை மட்டுமே அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?

பனிக்காலம் முடிந்த பின்னரான வெப்பம் கூடுகிற பருவங்களிலும் அதிசயம் நிகழ்த்திப் பக்தர்களை மெய் சிலிர்க்கச் செய்யாதது ஏன்?

இந்த அதிசயத்தைப் பனி சூழும் இமயமலையின் முகடுகளில் மட்டும் நிகழ்த்தாமல்.....

கோடைக் காலத்தில் கடும் வெப்பம் நிறைந்த பிற பகுதிகளிலும் பனி வடிவ லிங்கமாக வடிவெடுத்துப் பக்தர்களுக்கு அருள்பாலிக்கலாமே? இதைச் செய்தால் பகுத்தறிவாளர் என்று சொல்லிக்கொள்கிற நாத்திகவாதிகள்கூட பரமசிவனின் பரம பக்தர்களாக மாறுவார்களே!

மனப்பக்குவம் இல்லாத சாமானியரான பக்தர்களுக்கு மேற்கண்டவாறெல்லாம் சிந்திக்கத் தெரியாது. கடவுள் மீதான பக்தியை வளர்ப்பதாகச் சொல்லி மக்களிடம் வாக்குகள் பெற்று நாட்டை ஆளுகிறவர்களுக்கு அவசியம் தெரிந்திருக்கும்.

தெரிந்திருந்தும், 'பனிலிங்கம் என்பது பனிக்காலத்தில் உருவாகிற ஒரு வடிவமே தவிர, சிவபெருமானின் இன்னொரு வடிவமான சிவலிங்கம் அல்ல' என்று விவரித்துச் சொல்லி, ஆண்டாண்டுதோறும் பனிலிங்கத்தைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களைத் தடுத்து[இமயமலையின் இயற்கை அழகை ரசிக்க நினைத்தால், பனிப்பருவம் நீங்கலாகப் பிற பருவங்களில் செல்லலாம்] கடும் மழைக்கும் பெரு வெள்ளத்திற்கும் பலர் பலியாவதைத் தவிர்க்கலாம்.

ஏன் செய்யவில்லை?

மக்களில் பெரும்பாலோர் இம்மாதிரி மூடத்தனங்களிலிருந்து விடுபடாமல் இருப்பதே தங்களுக்குச் சாதகமானது என்று நினைக்கிறார்களா?