புதன், 19 ஜூன், 2024

‘அந்தம்’[அழிவு... முடிவு] இல்லாத அவதாரங்கள்!!!

இந்துக்களால் வழிபடப்படும் சில அவதாரப் புருஷர்கள் [https://hinduismwayoflife.com/hinduism-avatar-saints-3/] பற்றியப் பட்டியல் ஒன்று இன்று நம் கவனத்தை ஈர்த்தது.

//ஸ்ரீ சங்கராச்சாரியார் சிவபெருமானின் அவதாரமாகப் போற்றப்படுகிறார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ராதையின் அவதாரம்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு தெய்வீக அவதாரமாகக் கருதப்படுகிறார்.

ஷீரடி சாய்பாபா கடவுளின் அவதாரம் ஆவார். அவருடைய வேண்டுகோள் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான தடைகளை உடைத்தது.

ஸ்ரீ சத்ய சாய்பாபா சிவன்-சக்தியின் அவதாரமாக வழிபடப்படுகிறார்.

சுவாமி விவேகானந்தர் சிவனின் அவதாரம் என்று அவரது சில குரு பாய்ஸ்[???] மற்றும் பக்தர்களால் போற்றப்படுகிறார்.

பகவான் ரமண மகரிஷி - அவர் ஒரு பூர்ண ஞானி. அவரைச் சுப்பிரமணிய பகவானின் அவதாரமாகக் கருதும் பக்தர்கள் உள்ளனர்.

மாதா அமிர்தானந்தமயி(அம்மா) தேவி பராசக்தியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்//

மேற்கண்டவர்களில், அவதாரப் புருஷி மாதா அமிர்தானந்தமயி நீங்கலாக ஏனையப் புருஷர்கள் இன்று நம்மோடு இல்லை.

இவர்கள் கடவுள்களின் மறு பிரதி என்பதால் இவர்களுக்கு மரண என்பது இல்லை என்பார்கள் ஆன்மஜீவிகள். ஆகையினால், பூத உடலைத் துறந்து இவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்னும் கேள்வி நம் உள்மனதைத் துளைத்தெடுக்கிறது.

சொர்க்கம், கடவுள்களின் திருவடிகள் என்று எங்கே சென்றிருந்தாலும், அங்கே இவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்? காலநேரம் கருதாமல், தத்தம் கடவுள்களைத் துதிபாடிக் களித்திருப்பார்களா?

“ஆம்” என்றால் அதற்கொரு முடிவு அல்லது வரம்பு உண்டா? யுக யுக யுக யுகாந்தரங்களுக்கும் துதி பாடுதல் தொடருமா?

அங்கெல்லாம் செல்லாமல், அந்தரத்தில்[பூமிக்கு மேலே] உலாவிக்கொண்டு, அபயக்கரம் உயர்த்தித் தத்தம் பக்தக்கோடிகளுக்கு அருள்பாலிக்கிறார்களா?

அதற்கான கால அளவு என்ன?

அது ஏதோ ஓர் அளவுக்கு உட்பட்டது என்றால், அப்புறம் இவர்கள் எங்கே போவார்கள? என்ன செய்வார்கள்?

இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்கலாம்.

நம்மைப் போல அற்பப் பிறவிகளாயின், செத்தொழிந்து மண்ணோடு மண் ஆன பிறகு, அல்லது எரிந்து சாம்பலான பிறகு மிச்சம் எச்சம் என்று எதுவும் மிஞ்சாது.

மாறாக, இவர்களை என்றென்றும் அழியாத கடவுள்களின் அவதாரங்கள் என்பதால்தான் மேற்கண்ட வகையில் கேள்விகள் எழுகின்றன.

கேள்விகள் கேட்பது, நம்மைப் போலவே உண்டு, தின்று, மலம் கழித்து, உடம்பு நாறிப் புழுத்துச் சிதைந்து அழிகிற இவர்களை அவதாரங்கள் என்று போற்றித் துதிபாடி அலைகிற அறிவீனர்களைச் சிந்திக்க வைப்பதற்காகத்தான்.

மனிதராய்ப் பிறந்தவர் எவராயினும், நல்ல மனதுடன் மக்களுக்கு[பிற உயிரினங்களுக்கும்தான்] தொண்டு செய்கிறவர்களைப் பாராட்டுவோம்; போற்றுவோம்.

மகான், ஞானி, அவதாரம் என்பதோடு, இன்றளவில் அவதாரப் புருஷர்களாகவும், கண் கண்ட கடவுள்களாகவும் நம்மிடையே நடமாடுவதாக நம்மப்படும் சத்துக்குரு ஜக்கி, மோடி போன்றோரைப் புகழ்ந்து போற்றுவதைத் தவிர்ப்போம்; அகராதிகளிலிருந்து இம்மாதிரிப் புகழ் மொழிகளை அகற்றுவதும்கூட வரவேற்கத்தக்கதே!