எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 17 ஜூன், 2024

அடடா!..... ஆஹா!! இதுவல்லவோ ஸ்ரீராம் பக்தி!!!

கீழ்க்காணும் பழைய நகல் செய்தி[அனைத்து ஊடகங்களிலும் வெளியானது]யின்படி, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்பு ‘ராம்மோகன்’ ‘ஓம் ஸ்ரீராம்’ என்று 21 முறை எழுதிப் புளகாங்கிதப்பட்டது, நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் உட்பட  உலகிலுள்ள அத்தனை ராமபிரான் பக்தர்களையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

ஸ்ரீராமப் பக்தரான பிரதமர் மோடியிடம் தான் பதவி ஏற்பதற்கு முன்னரே இது பற்றி ராம்மோகன் சொல்லியிருந்தால்.....

எதிர்க் கட்சியினர் உட்பட அனைத்து உறுப்பினர்களையும்[பிற மதத்தவர் நீங்கலாக?] பதவி ஏற்பதற்கு முன்பே ‘ஓம் ஸ்ரீராம்’ எழுத வைத்திருப்பார் பிரதமர் மோடி.

‘ஓம் ஸ்ரீராம்’ என்பதைவிடவும், ‘ஓம் ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதுவது சிறப்பு என்று அறிவிப்பதோடு, ‘21’தடவைக்கு மாறாக, 108[‘108’ அல்லது 1008 தடவை எழுதுவது உடனடியாக ஸ்ரீராமனின் கவனத்தை ஈர்க்கவல்லது] தடவை எழுதப் பணித்திருப்பார் என்பது உறுதி.

பதவி ஏற்பின்போது மட்டுமல்லாமல், அடுத்தடுத்து இடம்பெறவுள்ள அத்தனை நாடாளுமன்றக் கூட்டங்களும், அனைத்து உறுப்பினர்களும் 1008 முறை[பெரிதும் பலனளிப்பது] ‘ஓம் ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய பின்னரே தொடங்கப்படுதல் வேண்டும் என்று சட்டம் இயற்றிடவும் வாய்ப்புள்ளது.

மோடியின் இந்தப் பணி.....

ஜெய் ஸ்ரீராம் பக்தர்கள் தம் அன்றாடப் பணிகளை[உண்ணுதல், உறங்குதல், அந்தரங்க உறவு மேற்கொள்ளுதல், ஊர் சுற்றுதல், சுற்றுலா செல்லுதல் போன்றவை] மேற்கொள்ளுவதற்கு முன்னர் தவறாமல் 1008 தடவை ‘ஓம் ஜெய் ஸ்ரீராம்’ எழுதுவது பெரிதும் நன்மை தருவதாக அமையும் என்பதை உணர்ந்தறியச் செய்யும் என்பது உறுதி.

வாழ்க தெ.தே.கட்சிக்காரரும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருமான ராம்மோகன்! வளர்க அவரின் ‘ஓம் ஜெய் ஸ்ரீராம்’ பக்தி!!