செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

மரணத்தில் என்ன வீரமும் வெங்காயமும்!

 

இறத்தல், உயிர்துறத்தல், சாதல் போன்றவை மரணத்தைக் குறிக்கும் பிற சொற்கள்.

நோய், தீராத வறுமை, விபத்து, தற்கொலை, இயற்கைப் பேரிடர் என்று மரணத்திற்கான காரணங்கள் பலவாக உள்ளன. பகை நாடுகள் தமக்குள் நிகழ்த்தும் போரும் இவற்றுள் அடங்கும். 

மரணத்தை விரும்பி ஏற்பார் எவருமில்லை.

போருக்குச் செல்லும் படை வீரர்களில் எந்தவொருவனும் மரணத்தைத் தழுவும்[அது நேர்ந்தால்] அந்தக் கணங்களில், “என் நாட்டிற்காக என்  உயிரைத் தியாகம் செய்கிறேன்”  என்று பெருமிதம் கொள்வது சாத்தியமில்லை; மிஞ்சுவது வேதனைதான்.

தனிப்பட்ட இருவர் அடித்துக்கொண்டால் அது அடிதடி, அல்லது மோதல்.

பகை நாடுகளின் வீரர்கள் சண்டையிட்டுக்கொண்டால் அது போர்.

தனிப்பட்டவர்கள் மோதலில் ஒருவரோ இருவருமோ உயிரிழக்க நேர்ந்தால் அது மரணம். போரில் நிகழ்வதும் மரணம்தான்.

மரணித்தால் மண்ணாவது, அல்லது சாம்பலாவது இயல்பு. இதில் ஏது ஏற்றத்தாழ்வு?

வீரமரணம் எய்தியவன் சொர்க்கம் சேர, கொல்லப்பட்டவன் நரகத்தில் தள்ளப்படுவானா?

தங்கள் தரப்பு ஆள் செத்தால் ‘வீரமரணம்’ எய்தினான் என்பதும், எதிரித் தரப்பினன்[அல்லது தீவிரவாதி எனப்படுவோன்] சாவைத் தழுவினால் அவன் கொல்லப்பட்டான் என்பதும் காலங்காலமாக தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும்! [‘தங்கள் தரப்பில் இத்தனைப் பேர் மரணம், எதிரித் தரப்பினரின் எண்ணிக்கை இது’ என்று குறிப்பிடுவதே ஏற்புடையது ஆகும்].