முட்டைப் பண்ணைத் தொழில், சுமையுந்துக்[லாரி] கட்டுமானம் போன்றவற்றால் ‘நாமக்கல்’ பிரபலம் அடைந்திருந்தாலும், இதற்குப் பெருமளவில் பெருமை சேர்ப்பது உலகப் புகழ் பெற்ற ஆஞ்சநேயக் கடவுள் இங்கே எழுந்தருளியிருப்பதுதான்.
நேற்று ஆவணி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி 1008 லிட்டர் பாலைப் பொழிந்து அவருக்கு அபிஷேகம் செய்திருக்கிறார்கள் அர்ச்சகர்கள்.
அனுமன் ஜெயந்தி முதலான விசேட நாட்களில்[காண்க: படம்] நல்லெண்ணை, சிகைக்காய், தயிர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றாலும் அபிஷேகம் செய்வது வழக்கத்தில் உள்ளது.
கற்சிலைக்குள் இரண்டறக் கலந்திருக்கும் ஆஞ்சநேய சாமியின் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவதால், அவரின் உடல் சூடு குறைகிறது; தலைமுடி வறட்சி நீங்குகிறது; பொடுகு முற்றிலும் அகலுகிறது.
அரைத்த சிகைக்காய்க் கரைசல்கொண்டு அவர் மேனியைக் கழுவுவதால், அவர் மீது படிந்திருக்கும் அழுக்கு அகற்றப்பட்டு அவரின் தோல் மிருதுவாகிறது.
தயிர், சந்தனம் ஆகியவையும் நல்லெண்ணையைப் போலவே அனுமன் சாமியின் உடல் சூட்டைத் தணிக்கின்றன.
மஞ்சள் கிருமிநாசினி என்பது நாம் அறிந்ததே. நோய் தொற்றாமல் சாமியைப் பாதுகாக்கிறது.
புரதம், கால்சியம், வைட்டமின் பி(குறிப்பாக ரிபோ ஃபிளேவின்), வைட்டமின் டி என்று பாலில் உள்ள எல்லாச் சத்துக்களும் சாமியின் வேர்வைத் துவாரங்கள் வழியாக அவரின் உடலில் கலக்கின்றன.
ஆக,
மேற்கண்ட அபிஷேகங்களால் அறிவியல் ரீதியாக, பகவான் ஆஞ்சநேயரின் உடல் நலம் பாதுக்கக்கப்படுகிறது என்பது நம்மை வியப்பிலும் பெரு மகிழ்ச்சியிலும் ஆழ்த்துகிறது.
ஆயினும், விசேட நாட்களில் மட்டும் அபிஷேகங்கள் செய்து, சாதாரணமான பல நாட்களில் அர்ச்சகர்கள் அவற்றைத் தவிர்ப்பது ஏன் என்று புரியவில்லை.
சிறப்பு அபிஷேகங்கள் இடம்பெறாத நாட்களில் சாமியின் உடம்பு சூடாகி, அழுக்குச் சேர்ந்து, மிருதுத் தன்மை குறைந்து, வறண்டுபோக நேரிடும் என்பதால், நாள் தவறாமல் அர்ச்சகர்கள் அவருக்கு அபிஷேகங்கள் செய்வது மிகவும் அவசியம் ஆகும்.
இனியேனும் செய்வார்கள் என்பது நம்மைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.
செய்யத் தவறினால், ஆண்டவர் ஆஞ்சநேயருக்கு அவர்கள் அநீதி இழைத்தவர்கள் ஆவார்கள்!