வியாழன், 22 ஆகஸ்ட், 2024

இந்தியாவின் அவசரத் தேவை அரை நூற்றாண்டு ராணுவ ஆட்சி!!!

 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தன் சொத்து, கடன்கள், கல்வித் தகுதிகள், குற்றப் பின்னணி ஆகியவை குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய ஓர் உறுதிமொழி ஆவணத்தைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தல் நடைமுறை. அவர் சமர்ப்பிக்கும் அந்த ஆவணம்தான் ‘பிரமாணப் பத்திரம்’ ஆகும்.

பத்திரத்தில் தவறான தகவல்களைத் தந்திருந்தால், அவர் தண்டனைக்குரியவர் என்பது தேர்தல் விதிகளில் ஒன்று[https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/punishment-for-filing-false-poll-affidavit-should-be-enhanced-to-max-of-2-years-parliamentary-panel/articleshow/102432414.cms?from=mdr]

‘விதி’ வகுப்பது எளிது. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இந்நாள்வரை, வேட்பாளர்கள் விதிகளை மதித்து[பொய்யுரைக்காமலும், குற்றங்களை மறைக்காமலும்] பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தார்களா   என்பது முழுமையாகக் கண்டறியப்படவில்லை. அது அத்தனை எளிதானதும் அல்ல. 

கண்டறிந்தால்,  தேர்தல் நடந்து முடிவதற்குள்ளாகவோ,  வெற்றி பெறும் வேட்பாளர் பதவி ஏற்பதற்குள்ளாகவோ, ஏற்ற பிறகோ அவர் தண்டிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

இந்நாள்வரை தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனைப் பேர்? எவரும் இல்லைதானே?

ஆக, இங்கே விதிகள் வகுப்பது ஒரு சடங்குதானே தவிர, அவற்றை எவருமே மதிப்பதில்லை.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அத்தனைப் பேரும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால்.....

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் 16 ‘எம்.பி’களும் 135 ‘எம்.எல்.ஏ’களும்[நகல் பதிவு காண்க] என்பது பல மடங்காக அதிகரித்திருக்கும்.

குற்றங்களை ஆய்வு செய்யும் குழுவில் உள்ள அத்தனைப் பேரும் நேர்மையானவர்களா என்பதும் சந்தேகமே.

போட்டியிடும் அத்தனை பேரைப் பற்றியும் முழுமையாக ஆய்வு செய்வதற்குக் கால அவகாசம் நிறையத் தேவை. குறுகிய அவகாசத்தில் நம் நாட்டுத் தேர்தல்கள் நடத்தப்படுவதால், ஆய்வு முழுமை பெற்றிட வாய்ப்பு இல்லை.

மேலும், 

அடியாட்களின் பக்கப்பலம் இல்லாமல் ஒரு வேட்பாளர் வாக்குச் சேகரிப்பதும் இங்குச் சாத்தியப்படாத ஒன்று.

வெளிப்படையாகச் சொன்னால், தேர்தலை அறிவிப்பதுதான் ஆணையமே தவிர அதை நடத்தி முடிப்பவர்கள் அடியாட்கள் எனப்படும் ரவுடிகள்தான்.

ரவுடிகளின் பாதுகாப்போடுதான் இந்த நாட்டில் போட்டியிட்டு, வெற்றி பெற்று நாடாளுமன்ற[சட்டமன்றங்களும்தான்] உறுப்பினர்கள் ஆவதும் அமைச்சரவையில் இடம்பெற்றுச் சுகபோகங்கள் அனுபவிப்பதும் நடந்துகொண்டிருக்கிறது[விதிவிலக்காக மிகச் சிலர் இருக்கக்கூடும்].

ரவுடிகளும், ஒழுக்கம் கெட்டலையும் தன்னலம் பேணும் தலைவர்களும் தண்டனைக்குரியவர்கள்; தேவை எனின், நாட்டைவிட்டே விரட்டப்படுதற்கு உரியவர்கள் அவர்கள்.

இது சாத்தியம் ஆகவேண்டும் என்றால்.....

குறந்தபட்சம் அரை நூற்றாண்டுகளுக்காவது இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை நன்மனம் படைத்த ராணுவக் குழுவினர் ஏற்பது வரவேற்கத்தக்கதாகும்!