வியாழன், 8 ஆகஸ்ட், 2024

காப்பாற்றக் கோரிய கர்ப்பிணி உயிரைக் ‘காவு’ வாங்கிய கணபதி சாமி!!!

 



..... கிராமத்தின் அருகே சென்றபோது, கனரக வாகனம் ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிளில் மோத, சரிந்து விழுந்த கர்ப்பிணிப் பெண் சக்கரங்களில் சிக்கிச் சிதைந்து உயிரிழந்தாள்

அவளின் வயிற்றிலிருந்த சிசுவும் சிதைந்து வெளியேறியது[செய்தி].

இங்கே கவனிக்கத்தக்கது.....

எப்போதாவது அல்ல, அடிக்கடி சென்று வேண்டுகோள் வைத்துத் தரிசனம் செய்த கர்ப்பிணியைக் காப்பாற்றவில்லை பிரபலக் கடவுளான கணபதி என்னும் பிள்ளையார் என்னும் விக்கினேஷ்வரன் என்பது.

முற்பிறப்புகளில் இவள் பாவச் செயல்கள் பல செய்ததால்[பாவம் செய்யத் தூண்டியயவர் யார் என்பது விடை அறியப்படாத கேள்வி] அவர் கண்டுகொள்ளவில்லையா?

ஒரு வேளை பாவங்கள் செய்திருந்தாலும், இவளை மன்னிக்கும் இரக்கக் குணம் கணபதியாருக்கு இல்லாமல் போனது ஏன்?

உலகில் எத்தனை எத்தனைக் கடவுள்கள்! 

“இந்தப் பெண் கணபதியைத்தானே வேண்டிக்கொண்டாள். நமக்கென்ன?” என்று மற்றக் கடவுள்களெல்லாம் இருந்துவிட்டார்களா?

தங்களால் படைக்கப்பட்ட மனிதர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதைத் தவிர அவர்களுக்கெல்லாம் வேறு என்ன.....[நீங்கள் விரும்பும் வார்த்தையை இங்கு இட்டு நிரப்பலாம்]?

‘இங்கே கடவுளைச் சம்பந்தப்படுத்துவது தவறு. இது இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று விதி வகுத்திருக்கிறார் கடவுள். அந்த விதிதான் உயிர்கள் அனுபவிக்கும் இன்பத் துன்பங்களுக்குக் காரணம் என்பார்கள் ஆன்மிகப் பேரருளாளர்கள்.

விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால் கடவுள் வழிபாடு தேவையில்லை. 

எது எதையெல்லாமும் படைத்து, அவற்றைக் கொஞ்சம் இன்பங்களுடன் நிறையத் துன்பங்களை அனுபவிக்கும் வகையில் விதி செய்த அந்தக் கடவுள் வக்கிரபுத்திக்காரன் என்பது நம் அழுத்தமான நம்பிக்கை.

அவனை நம்பி வழிபட்டால் துன்பங்கள் தீரும் என்று அப்பாவி மக்களைத் தப்பாக வழிப்படுத்திய அவதாரங்களும் ஞானிகளும் மகான்களும் பாவிகள்; மக்களால் முற்றிலுமாய்ப் புறக்கணிக்கத்தக்கவர்கள!
                                  *   *   *   *   *
உங்கள் சிந்தனைக்கு.....

சுகப்பிரசவம் வேண்டி, கணவனும் மனைவியும் கோயிலுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், பெண் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லைதானே?[அவள் சாகணும்னு விதி இருந்தால் வேறு வகையில் செத்திருப்பாள்’ என்பதெல்லாம் வெறும் சமாளிப்புதான்].