வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

‘பாஜக’விடம் பாடம் கற்கவில்லையா ‘திமுக’?!

‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’, 2024 ஆகஸ்ட் 24, 25 ஆகிய நாட்களில் பழனியில் நடைபெறவுள்ளது என்பது செய்தி.

நிகழ்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் ஏற்கனவே நடத்தியுள்ளார்.


’திமுக’வினரின் பக்தி வளர்ப்பை விமர்சிப்பதற்கு முன்னால், ‘திமுக’ வளர்ந்த/வளர்க்கப்பட்ட வரலாற்றைக் கொஞ்சமேனும் நினைவுகூர்வது விமர்சனத்தை மிக எளிதாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.


‘கடவுள் இல்லவே இல்லை. கற்பித்தவன் அயோக்கியன். நம்புகிறவன் முட்டாள்’ என்று மிகக் கடுமையாகக் கடவுள் பக்தியை விமர்சித்த பெரியார் வழியில் வந்த பகுத்தறிவாளர்களால்[ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று முழக்கமிட்டதெல்லாம் கடவுள் பக்தி உள்ளவர்களால் புறக்கணிப்படக்கூடாது என்பதற்காகத்தான்] உருவாக்கி வளர்க்கப்பட்டதுதான் ‘திமுக’ கட்சி.


‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று அறிவித்த அறிஞர் அண்ணாதுரை உயிர் இருந்தவரை கடவுளை வழிபட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.


இறுதி மூச்சுவரை அவர் நாத்திகர்தான்.


இவராலும் இவர் போன்ற நாத்திகச் சிந்தனையாளர்களாலும் திமுக வளர்ந்தது என்பதும், ஒரு காலக்கட்டத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது என்பதும் வரலாறு.


இங்கு நினைவுகூரத்தக்கது, ’திமுக’வினர் நாத்திகர்கள் என்பதை அறிந்திருந்தும் மக்கள் அவர்களுக்குத் தேர்தல்களில் வாக்களித்தார்கள் என்பதுதான்.


‘திமுக’வின் தலைவர்களில் பலரும் நாத்திகராயினும் தமிழ் மொழிப் பற்றும் இனப் பற்றும் மிக்கவர்களாக இருந்தார்கள் என்பது அதற்கான தலையாயக் காரணம்.


சாதி மத வேறுபாடுகளைக் களைவதில் முக்கியப் பங்காற்றினார்கள் என்பது கூடுதல் காரணமாகும்[இவையெல்லாம் தனி ஆய்வுக்குரியவை].


கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய பல மக்கள் நலத் திட்டங்களால் அவர் தலைமையிலான ‘திமுக’வைத் தமிழர்கள் தொடர்ந்து ஆதரித்தார்கள்... ஆதரிக்கிறார்கள் என்பது அறியத்தக்கது.


ஆக, இடையிடையே தோல்விகளை எதிர்கொண்டாலும் வெற்றிகளும் பெற்றுத் திமுக ஆட்சியைக் கைப்பற்றக் காரணம், மேற்கண்டவைதானே தவிர, அவர்கள் பக்தியுணர்வை வளர்த்தார்கள் என்பதல்ல.


இந்நிலையில்.....


மேலும் பல நலம் பயக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், தமிழ் மொழி, இன உரிமைகளைக் கட்டிக் காப்பதிலும் கவன செலுத்த வேண்டிய மு.க. ஸ்டாலின் அவர்கள், மக்களிடையே கடவுள் பக்தியை[குறிப்பாக முருகப் பக்தி] வளர்க்கும் நோக்கத்துடன் அனைத்துலக முத்தமிழ் முருகனுக்கான மாநாடு நடத்துவது ஏன் என்று புரியவில்லை.


‘திருவிக’ போன்ற அக்காலப் பெரியவர்கள் பக்தியுடன் தமிழ்ப் பற்றும் கொண்டவர்களாக இருந்ததால் முருகனைத் தமிழ்க் கடவுள் ஆக்கினார்களே அல்லாமல், முருகனோ பிற கடவுள்களோ இருப்பதற்கான ஆதாரங்களைத் தந்தாரில்லை[எல்லாம் அனுமானங்களே].


கடவுளின் இருப்பே நிரூபிக்கப்படாத நிலையில், முருகன் புகழ் பரப்புவதால் மூடநம்பிக்கைதான் வளருமே அல்லாமல், தமிழ் வளராது; தமிழன் முன்னேறுவதும் சாத்தியமில்லை. 


பக்தி வளர்ப்பின் மூலம் மூடர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவதை வழக்கமாகக்கொண்டிருந்த நரேந்திர மோடி, அதே உத்தியை[கோயில் கோயிலாகச் சென்று குப்புற விழுந்து வணங்குவது, கோயில் கட்டுவது போன்றவை]க் கையாண்டும்கூட 2024 தேர்தலில் தோல்வியைத் தழுவினார்[கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சிபீடம் ஏறினார்].


இந்த அண்மைக்கால நிகழ்வு பற்றித் தெரிந்திருந்தும், மோடி ராமனைக் கொண்டாடியது போல, ஸ்டாலின் முருகனைக் கொண்டாடி மக்களின் வாக்குகளை அள்ள நினைப்பது நகைப்பிற்குரியதாகும்.


மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாம் பரிந்துரைப்பது.....


இங்கே இப்போது இருந்துகொண்டிருக்கும் பக்தர்களே மிக அதிகம். பிரமாண்டமான மாநாடெல்லாம் நடத்தி, பக்தி வளர்த்து, அவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதால் உங்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை.


பிரதமர் பதவியைத் தக்கவைக்க, ‘உலகின் நம்பர் 1’ பக்திமான் மோடி படும்பாட்டை அன்புகொண்டு மறவாதீர்கள்!

                                       *   *   *   *   *

https://www.dinakaran.com/muthamil-murugan-conference-minister-shekharbabu/