சனி, 26 அக்டோபர், 2024

தமிழ்த்தாய் வாழ்த்தைத் தப்பாகப் பாடுவது தவறல்ல! வேண்டாம் வெறிக் கூச்சல்!!

தாங்கள் வளர வேண்டும்; சுகபோகமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் பெரும்பான்மைத் தமிழர்கள். அவர்களுக்குத் தமிழின் வளர்ச்சி குறித்தெல்லாம் கவலை இல்லை.

இருந்தால்.....

தமிழில் கற்பிக்காத[மருத்துவம் உட்பட] கல்லூரிகளின் மீது தாக்குதல் நடத்தி அவற்றை இயங்கவிடாமல் முடக்கியிருப்பார்கள்.

இருந்தால்.....

அனைத்துப் பாடங்களையும் தமிழில் கற்பிப்பதற்குத்[ஆங்கில வழிக் கல்வியும் தேவைதான்] தேவையான அளவு நூல்களை உரிய நேரத்தில்[மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்] தயாரித்து வெளியிடாத அரசாங்கத்தைக்[முந்தைய அரசுகளையும்தான்] கண்டித்துப் பெரும் போராட்டம் நடத்தியிருப்பார்கள்.

இருந்தால்.....

தங்களின் பிள்ளைகளுக்குத் தமிழ் வழிக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்திருப்பார்கள்.

இருந்தால்.....

பிற நாடுகளிலும் பிற மாநிலங்களிலும் தமிழ் வழிக் கல்வியாளருக்கு வேலை வாய்ப்பு குறைவு[ஆங்கில மொழி வழிப் பயிற்சியும் தேவை] என்பதால் அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு ஒதுக்கீடு செய்யவும், தனியார் நிறுவனங்களில் அவ்வொதுக்கீட்டிற்கு உரிய முறையில் சட்டங்கள் பிறப்பித்து நிர்ப்பந்திக்கவும் தொடர்ந்து தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தியிருப்பார்கள்.

இருந்தால்.....

தேவையே இல்லாமல் வெறும் பந்தாவுக்காக ஏராளமான ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசமாட்டார்கள்.

இந்த அவல நிலை நீடித்தால்.....

காலப்போக்கில் தமிழ் வழக்கிழந்தும் பயன்பாடு இன்றியும் சிதைந்து அழியும் என்பது 100% உறுதி.

எனவேதான், தமிழ் வாழ்க என்று மேடைகளில் முழங்குவதையும் தமிழைத் தெய்வத் தமிழ் என்றும் தாய்த் தமிழ் என்றும்  புகழ்ந்து போற்றி[மொழி என்பது ஒரு கருவி மட்டுமே. அதன் மீதான பற்றை வளர்க்கவே அதைத் தெய்வம் என்றும் தாய் என்றும் உருவகித்தார்கள் என்பதை மறத்தல் கூடாது], தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போது சிறு பிழைகள் ஏற்பட்டாலும்[ஆளுநனைப் போலத் திட்டமிட்டுத் தப்பாகப் பாடவைப்பது தவறு], “ஆய்... ஊய்...’ என்று கூச்சல் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்றது எனலாம்.

ஆக, தமிழர்களே, உண்மையாகவே உங்களுக்குத் தாய்மொழிப் பற்று இருந்தால் அதன் வளர்ச்சி குறித்துச் சிந்தியுங்கள். வீணான ஆரவாரங்கள் தேவையில்லை.