புதன், 9 அக்டோபர், 2024

தள்ளாடும் குடும்ப[பல] உறவும் தாங்கிப்பிடிக்கும் பிள்ளைப் பாசமும்!!![உண்மைக் கதை]

 ப்பா, அடங்காத கோபத்துடன் அம்மாவை எட்டி உதைத்தார்.

அம்மா தரையில் சரிந்த பிறகும் நான்கைந்து முறை உதைத்தார்.

“உதையடா நாயே, உதைச்சே என்னைக் கொன்னுடு. பீடை ஒழிஞ்சுதுன்னு நீ நிம்மதியா இருக்கலாம்” -அம்மா ஆக்ரோசமாக அழுதுகொண்டே கத்தினார்.

அம்மா, “நாயே” என்றது அப்பாவின் கோபத்தை அதிகப்படுத்தியது. எரவாணத்தில் செருகியிருந்த சாட்டையை உருவி நான்கைந்து முறை அம்மாவின் உடம்பில் தாறுமாறாக விளாசிய பிறகு அதைத் தூக்கி எறிந்துவிட்டு, அசிங்கமாக முணுமுணுத்துக்கொண்டே வெளியேறினார்.

வழக்கம்போல, அம்மாவும் தனக்குத் தெரிந்த அத்தனைக் கெட்ட வார்த்தைகளாலும் அப்பாவைத் திட்டித்தீர்த்தார்

நான் அழுவதற்குக்கூடத் திராணி இல்லாமல், அம்மாவைத் தூக்கி உட்காரவைத்து, “உன் வேலை என்னவோ பாரு. அப்பாகிட்டே பேசவே வேண்டாம்னு சொன்னாக் கேட்கமாட்டேங்கிறே” என்று சொல்லி அம்மாவின் கன்னங்களில் வழிந்துகொண்டிருந்த கண்ணீரைத் துடைத்தேன்; ஆறுதலாகச் சற்று நேரம் அவரின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டிருந்தேன்.

“அடிக்கடி சண்டை போட்டுக்கிறீங்க. நீ தப்புப் பண்ணினாயா, அப்பாவா?” என்று அம்மாவிடம் கேட்டபோது, “அதெல்லாம் உனக்குத் தெரிய வேண்டாம். நல்லாப் படி. நல்ல வேலைக்குப் போ. அப்புறம் உன் நிழலில் நான் காலம் கழிச்சுடுவேன்” என்றார்.

அப்பாவிடமும் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறேன். “எங்களோடது தீர்க்க முடியாத பிரச்சினை. படிப்பில் கவனம் செலுத்து. நல்ல உத்தியோகம் கிடைச்சு உனக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணிட்டா, காசி ராமேஸ்வரம்னு அப்பப்போ யாத்திரை போய்கிட்டு என் காலத்தைக் கழிச்சுடுவேன்” என்றார்.

‘பாசமுள்ள தாய். அவருக்குச் சமமாகப் பாசம் பொழியும் தகப்பன். எப்படியோ என்னைப் பெத்துட்டாங்க. அப்புறம் ஒருத்தர் மேல ஒருத்தருக்குப் பாசம் அறுந்துடுச்சி. எலியும் பூனையுமா ஆயிட்டாங்க’ என்று நினைத்து அடிக்கடி வேதனைப்பட்டேனே தவிர அதிலிருந்து விடுபட இன்றுவரை இயலவில்லை.

ஆனாலும், அளப்பரிய அந்தத் தாய் தந்தைப் பாசம் வைராக்கியத்துடன் என்னைப் படிக்கத் தூண்டியது; கௌரவமான உத்தியோகத்தைப் பெறவும் வைத்தது. 

எத்தனை முரண்பாடுகள் இருந்தும், என் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட, பிரிந்து வாழாமலோ விவாகரத்துச் செய்யாமலோ இருந்த அவர்களின் தியாகம் பலமுறை என் கண்களில் கண்ணீரை வரவழைத்ததுண்டு.

கல்யாண ஆசையே இல்லாமலிருந்த நான், அம்மா அப்பா விருப்பப்படி ரொம்பவே படித்து உத்தியோகமும் பார்த்த ஒருத்தியின் கழுத்தில் தாலி கட்டினேன்.

எங்களில் ஒருவர் குறை இன்னொருவருக்குத் தெரிந்திராத நிலையில், ஒரு குழந்தையும் பிறந்தது.

அப்புறம் ஆரம்பமானது எங்களுக்குள் யுத்தம், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடந்தது போலவே.

ஆனால், எங்களுக்குள்ளான யுத்தத்தைக் காணக்கூடாது என்று நினைத்தோ என்னவோ, சில மாதங்களில் அவர்கள் மரணத்தைத் தழுவினார்கள்.

அடுத்தடுத்து இரண்டு தற்கொலைகள்!

அவ்வப்போது நான் அனுபவித்த வலிகள் அவ்வப்போது அடங்குவதும் தலைதூக்குவதுமாக இருந்தன. 

எனினும், வலியே வாழ்க்கை என்று ஆகிப்போன நிலையிலும் நாங்கள் சேர்ந்தே வாழ்ந்தோம்; வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

என்னையும், என் கைகளால் தாலி கட்டிக்கொண்டவளையும் பிரியவிடாமல் தடுத்தது/தடுப்பது.....

என் அம்மாவையும் அப்பாவையும் பிரியவிடாமல் தடுத்துவைத்திருந்த அதே ‘பிள்ளைப் பாசம்’!

                             *   *   *   *   *

குறிப்பு:

ஒரு கதாபாத்திரம் தன்னை முன்னிலைப்படுத்தி[‘நான்...’] நிகழ்வுகளை விவரிப்பது கதை சொல்லும் உத்திகளில் ஒன்று. இந்தக் கதையில் எந்தவொரு கதாபாத்திரத்தின்[கதை மாந்தர்] பெயரும் இடம்பெறவில்லை என்பது அறியத்தக்கது.