‘கங்கையும் யமுனையும் சரஸ்வதியும்[புருடா> கண்ணுக்குத் தெரியாதாம்!] கலக்கிற திரிவேணி சங்கம ஆறுகளின் நீரில் பிணங்கள் மிதக்கின்றன[கரையோரங்களில் அரைகுறையாய் எரிக்கப்பட்ட பிணங்களை மேற்கண்ட ஆறுகளில்தான் வீசுகிறார்கள்]. எனவே, தி.வே.ச. நீர் புனித நீரல்ல, அழுக்கு நீர்’ என்று, கும்பமேளா கொண்டாட்டத்தைச் சாடி எழுதிய என் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ‘மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாபிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில், ஆற்றின் நீரில் 'Faecal Coliform' என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், அவை குளிப்பதற்குத் தகுதியற்றவை. Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும்’ என்று வெளியிட்டுள்ள அறிக்கை மேற்கண்ட என் கருத்து மிகச் சரியானதே என்பதை உறுதிப்படுத்துகிறது.
நான் வெகு சாமானிய வலைப்பதிவாளன் என்பதால் என் எச்சரிக்கையை ‘மேலிடம்’ செவிமடுக்கவில்லை என்றோ, அது செவிடர்களின் காதுகளில் ஊதிய சங்கு என்றோ சொல்ல விரும்பவில்லை. காரணம்.....
தெரிந்திருந்தும், பக்தியின் பெயரால் இந்தப் புனித நீராடல் உட்பட ஏராளமான மூடநம்பிக்கைகளைச் சுமந்து திரியும் மூடர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் தொடர்ந்து ஆட்சி பீடம் ஏற முடியும் என்பதால், இந்த உண்மையைப் ‘புனிதம்’ என்னும் போர்வையால் மூடி மறைத்தார்கள்; மறைக்கிறார்கள் அவர்கள்.
இந்தச் சுயநலக்காரர்களால் இந்தப் புண்ணியத் தேசம்[என்று சொல்கிறார்கள்] பாவத் தேசமாக மட்டுமல்ல, விதம் விதமான நோய்களின் உற்பத்தித் தேசமாகவும் மாறும் என்பது உறுதி!
* * * * *